முல்லைத்தீவை மண்ணோடு மண்ணாக்க ராஜபக்சே அரசு முடிவு ! ஜூனியர் விகடன் அதிர்ச்சி ரிப்போர்ட் !
இலங்கையின் ‘இறுதிப் பசி’ திட்டம்…. எமர்ஜென்சி?!
கிளிநொச்சி தொடங்கி முல்லைத் தீவின் எல்லை வரை கிட்டத்தட்ட
விடுதலைப் புலிகளின் முக்கால்வாசி ஏரியாக்களை தங்கள் வசமாக்கி
விட்டது சிங்கள அரசு. தமிழர் பகுதிகள் மீது நடக்கும் அடுத்தடுத்த
தாக்குதல்களைக் கண்டித்து, உலகவாழ் தமிழர்கள் கண்டனக் குரல்
எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும்
இலங்கையின் போர்வெறியைக் கண்டிக்கின்றன.
ஆனால், இதற்கெல்லாம் கொஞ்சமும் செவிசாய்க்காத சிங்கள அரசோ, 4ம் தேதி சுதந்திர தினக்கொண்டாட்டங்களை நடத்தி முடித்த பிறகு, போர்
நடவடிக்கைகளைக் குரூரமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம். அதற்காக
ராஜபக்ஷே எடுக்கப் போகும் அதிரடித் திட்டங்ககள் குறித்து குலை நடுங்கச்
சொல்கிறார்கள், இலங்கையின் தமிழ் எம்.பி.க்கள் பலரும்.
இலங்கையில் எமர்ஜென்ஸி!
பன்னாட்டு ராணுவ உதவிகளுடன் சிங்கள அரசு தீவிரமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிப்புனம், சுதந்திராபுரம், மூங்கிலாறு, உடையார்கட்டு உள்ளிட்ட தமிழர்வாழ் பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி தமிழர்களை உயிர்பயத்தோடு ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும்
புலிகளைப் பூண்டோடு அழிக்க தமிழர்வாழ் பகுதிகள் இடைஞ்சலாக
இருப்பதால், ராணுவத்தின் கோபம், குரூரமாகி விட்டது.
எனவே, தமிழர்களைக் கொத்துக்கொத்தாக வீழ்த்தத் திட்டம் வகுத்துவிட்டது.
இஸ்ரேல், சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு போர்களில் பயன்படுத்தக் கூடாத ஆயுதங்களை எல்லாம் கொண்டுவந்து குவித்திருக்கிறது.
இதற்கிடையில் ராணுவ அதிகாரிகளை அழைத்து, அடுத்தகட்டத் தாக்குதல்
திட்டங்கள் குறித்துப் பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே
பேசியிருக்கிறார். திடீரென எமர்ஜென்ஸியை அறிவித்து எஞ்சியிருக்கும்
மீடியாக்கள், தூதரகங்களை எல்லாம் முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு,
உலகத்தின் பார்வையே படாதபடி இலங்கைத் தீவை இருண்ட
கண்டமாக்கி… கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் கோத்தபய ராஜபக்ஷே. அதற்கான ஆரம்பமாகத்தான்,
‘நார்வே, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களை
இழுத்து மூட வேண்டியிருக்கும்’ என அவர் பகிரங்கமாக
அறிவித்திருக்கிறார்.
முக்கியச் செய்தி சேனல்களை மிரட்டும்படியான அறிக்கையையும் வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல், ‘முல்லைத்தீவில் தற்போது தங்கி இருக்கும் தமிழர்கள், புலிகளிடத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களைப்
பொதுமக்களாகக் கருத முடியாது. ஆனால், இனியும் எங்களின்
தாக்குதல்களைத் தாமதப்படுத்த மாட்டோம்’ எனக் கொக்கரித்திருக்கிறார்.
‘எமர்ஜென்ஸி அறிவித்து, ஒரு வார காலத்துக்குள் முல்லைத்தீவை
மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என்பதுதான் தற்போது கோத்தபய
வைத்திருக்கும் இறுதித் திட்டம். உலகின் பார்வைக்கே தெரியாமல்
அப்பாவி மக்களைக் கொன்று முடித்துவிட்டு, புலிகள் மீது எல்லா
பழியையும் போட்டுவிட சிங்கள ராணுவத் தரப்பு தயாராக இருக்கிறது’ என
அச்சத்தோடு சொல்கிறார்கள் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள்.
திட்டம் வகுப்பதே ‘ரா’?!
இலங்கையின் எமர்ஜென்சி திட்டம் குறித்துத் தமிழகத்தில் உள்ள ஈழ
ஆதரவாளர்களிடம் பேசினோம். ”இப்போதே அங்கு அறிவிக்கப்படாத
எமர்ஜென்ஸிதான். இதற்கெல்லாம் முக்கியக் காரணகர்தா இந்தியாதான்.
இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுத உதவிகளை வழங்கி வரும் இந்திய
அரசு முக்கியமான ராணுவ அதிகாரிகள் மூலமாக புலிகளை அழிக்கும்
வியூகங்களையும் வழங்கி வருகிறது. அதிநுட்பமான தாக்குதலை
நடத்தக்கூடிய மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள்,
சிங்கள ராணுவத்தோடு கைகோத்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் அதற்குள்
புலிகளுக்கு முடிவு கட்டிவிட நினைக்கிறது சிங்கள அரசு. இதன்
பின்னணியில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் பங்களிப்பு நிறைய
இருக்கிறது. அடுத்தடுத்த திட்டங்களை இலங்கைக்கு வகுத்துக்கொடுப்பதே
‘ரா’ அமைப்புதானோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது”
என்கிறார்கள் இங்கிருக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச்
சேர்ந்த தலைவர்கள் சிலர்.
காங்கிரஸ் கைங்கரியங்கள்?
விடுதலைப் புலிகளை வீழ்த்துவதில் சிங்கள அரசைக் காட்டிலும்
காங்கிரஸ் கட்சித் தலைவியான சோனியா காந்தி தீவிரமாக இருக்கிறார்
என புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்களில் தொடர்ந்து செய்திகள்
வெளியிடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தீவிர புலி ஆதரவுப்
பிரமுகர்கள் பேசுவது என்ன தெரியுமா?
”ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று வேலூர்
ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியை, பிரியங்கா காந்தி
சந்தித்தபோதே ஏதோ நடக்கிறது என்று நினைத்தோம். ராஜீவ் கொலை
வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நளினி, முருகன் ஆகியோரை
மன்னித்ததன் மூலமாக தன்னை சாத்வீகப் பெண்மணியாகக்
காட்டிக்கொண்டார் சோனியா. ஆனால் தன் கணவர், பிரபாகரனால்
கொல்லப்பட்டது குறித்த அவருடைய ஆதங்கமும் கோபமும் கொஞ்சமும்
குறையவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. உரிய நேரத்திற்காக
காத்திருந்து பிரபாகரனை ஒழித்துக் கட்டுவதற்கான் எல்லா
உதவிகளையும் இந்தியா தற்போது அளிக்கிறது. இதுகுறித்து தனக்கு மிக
நம்பகமான பிரணாப் முகர்ஜியையும் ராஜபக்ஷேவின் நண்பரான
மணிசங்கர் ஐயரையும் கலந்து பேசியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
அதன் பிறகுதான் ‘எதிரிக்கு எதிர் நண்பன்’ என்பது போல புலிகளை
ஒழிக்கத் துடிக்கும் ராஜபக்ஷேவுக்கு அனைத்து விதமான உதவிகளையும்
இந்தியா வழங்குகிறது.
தமிழகத்தில் உள்ள பல கட்சித் தலைவர்கள் ஆவேசக் குரல் எழுப்பியும்
அவற்றைச் சட்டையே செய்யாமல் ராடார்கள், டாங்கிகள் என இலங்கை
அரசுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதால் பின்னணியை வேறு
என்னவென்று புரிந்து கொள்வது” என்பதே இவர்களின் கேள்வியாக
இருக்கிறது.
களத்தில் குதிக்கும் பி.ஜே.பி.!
இலங்கையில் எமர்ஜென்சி கொண்டுவரப் போவதாகக் கிளம்பி இருக்கும்
செய்தி பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை ஈழத்தின் பக்கமாகத்
திருப்பி இருக்கிறது. இதுகுறித்துப் பேசும் தமிழக பாரதிய ஜனதா கட்சி
நிர்வாகிகள் சிலர், ”இலங்கையில் எமர்ஜென்ஸியைக் கொண்டு வருவதன்
மூலமாக தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கப் பார்க்கிறது காங்கிரஸ்
கட்சி. இன அழிப்புக்கு காங்கிரஸ் கைகொடுக்கும் போக்கை, எங்கள் கட்சி
ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ‘ராஜீவ் காந்தி கொலை
குறித்து சி.பி.ஐ. மூலமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என ஜெயின்
கமிஷன் ஏற்கெனவே உத்தரவு போட்டிருக்கிறது. அதனை விரைவாகச்
செயல்படுத்தி, கொலைக் காரணம் குறித்து அறிந்திருக்கவேண்டிய
காங்கிரஸ் அரசு, ஐந்தாண்டு காலமாக அமைதி காத்துவிட்டு, ஆட்சி
முடிகிற தருணத்தில் ராஜீவ் படுகொலைக்கான பழிவாங்கலை சமயம்
பார்த்து தற்போது நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறது.
‘இலங்கையில் யுத்தம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள சூழலில்
எங்களின் தேசியத் தலைவர்களான அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர்,
இந்தியாவின் முக்கியமான சில மாநில முதல்வர்களை ஒன்றுகூட்டி
இலங்கை நிலவரம் குறித்து விவாதித்கும் யோசனையில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் அரசின் கபட நாடகங்களை அம்பலமாக்குவதற்கு, இந்திய
அளவிலான ஒரு கூட்டமைப்பை பி.ஜே.பி.யின் பெரிய தலைவர்கள்
விரைவில் உருவாக்கப் போகிறார்கள்” என்கிறார்கள்.
இதற்கிடையில் தங்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கோடு வெளிநாடுகளில்
பயணித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் எம்.பி.க்களை அவசர
அவசரமாக இலங்கைக்குத் திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டிருக்கிறதாம்
புலிகள் தரப்பு.
‘பிரபாகரனை ஒப்படையுங்கள்’!
காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ்
அமைச்சர் மணிசங்கர் ஐயரிடம் கேட்டோம். ”இலங்கையில் வாழும்
தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அரசியல்
உரிமைகளுக்காகவும் பெரிய அளவில் சிரத்தை எடுத்து ராஜீவ் -
ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தார் ராஜீவ். அவர்களின்
விடிவுக்கு காங்கிரஸ் துணை நின்ற அளவுக்கு வேறு எந்த அரசும்
நின்றதில்லை.
இப்போதும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக இலங்கையில் வாழும்
தமிழர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதபடி காங்கிரஸ் அரசுதானே கவனித்துக்
கொண்டிருக்கிறது. இதில் தனிப்பட்ட கோபதாபத்தைக் காட்டவேண்டிய
அவசியம் எங்களுக்கு எங்கிருந்து வந்தது. ராஜீவ் கொலைக்குக்
காரணமான பிரபாகரனை இலங்கை அரசு பிடித்தால், உயிரோடு எங்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என்றுதான் எங்கள் அரசு சொல்லி இருக்கிறதே
தவிர, பிரபாகரனைப் பிடிக்கிற வேலையை சிங்கள அரசுக்கு உத்தரவாகப்
போடவில்லை. நளினியை, பிரியங்கா காந்தி சந்தித்தது பற்றியோ,
நளினியிடம் விசாரிக்கப்பட்ட விவரங்கள் குறித்தோ எனக்கு எதுவும்
தெரியாது. ஆனால், இலங்கையில் போர் தீவிரம் அடைந்திருப்பதற்கு
பின்னால் இந்தியாவின் தூண்டுதல் கிடையவே கிடையாது என்பதை
மட்டும் அடித்துச் சொல்ல முடியும்” என ஆவேசப்பட்டார் அமைச்சர்.
எப்படி சமாளிப்பார்கள் புலிகள்?
எமர்ஜென்ஸி மூலம் ஏற்படப்போகும் கடுமையான இருட்டடிப்புகளைப்
பற்றி உணர்ந்து வைத்திருக்கும் புலிகள் தரப்பு உலகவாழ் தமிழர்களின்
மூலமாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தைத் திருப்பும்
திட்டத்தில் இருக்கிறது. ஏற்கெனவே இலங்கையின் அராஜகங்களை
கவனித்துக் கொண்டிருக்கும் ஐ.நா.வும் அமெரிக்காவும் தங்களின்
விடிவுக்கு உதவுவார்கள் என்பது புலிகளின் நம்பிக்கை. ”எமர்ஜென்ஸி அபாயத்தைத் தடுக்க எல்லா விதங்களிலும்
மெனக்கெடுகிறோம். அதையும் தாண்டி இலங்கையின் எமர்ஜென்ஸி
திட்டம் அரங்கேற்றப்பட்டால், இழப்பு சிங்கள அரசாலும் ஜீரணித்துக்
கொள்ள முடியாததாகத்தான் இருக்கும்.” என்கிறார்கள் புலிகள் தரப்பில்.
நன்றி: ஜூனியர் விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment