''ஈழம் என்ற கருத்தியல்...''
'மரண பயம்' என்னும் இருளில் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் ஐந்து லட்சம் தமிழர்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தைத் தர... சிறிய ஜன்னலொன்று திறப்பதுபோல் தெரிகிறது. உலக நாடுகள் இப்போதுதான் மெள்ளக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றன! அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள், 'இலங்கையில் நடக்கும் இன அழித்தொழிப்புப் போரை நிறுத்தவேண்டும்' எனக் கூறியிருக்கிறார்கள். ஈவிரக்கமே இல்லாத இந்திய அரசிடம் இத்தனை காலமும் கெஞ்சிக்கொண்டு கிடந்ததைவிட, அமெரிக்காவின் திசையை நோக்கி முன்பே அழுதிருக்கலாமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது.
ஈழத்தமிழர்களுக்காக இப்போது தமிழ்நாட்டில் புதிதாக இரண்டு அமைப்புகள் உருவெடுத்துள்ளன. அதை நாம் முழுமனதோடு வரவேற்போம். நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நடத்தியிருக்கிற அதே நேரத்தில்,
தி.மு.க-வால் தொடங்கப்பட்டுள்ள 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'யும் தன்னு டைய பிரசாரத் திட்டத்தை வெளியிட்டு இருக்கிறது. சர்வதேச அளவில் அதைக்கொண்டு செல்ல துணைக் குழு ஒன்றையும் அது ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் நமக்கு ஆறுதல் தருகின்றன என்றா லும், இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த 'ஈழத்தமிழர்' என்ற சொல்லுக்கு மாறாக இப்போது எல்லோருமே 'இலங்கைத் தமிழர்' என்று கூறுவது ஏன்? என்ற கேள்வி நமக்கு எழாமல் இல்லை.
ஈழம் என்பது அண்மையில் உருவாக்கப்பட்ட அரசியல் சொல் அல்ல. அது நீண்ட வரலாறு கொண்ட அடையாளமாகும். திருப்பரங்குன்றத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டிலேயே 'ஈழக்குடும்பிகன்' என்ற சொல் காணப்படுகிறது. சங்கப் பாடல்களிலும் ஈழம் என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. ஈழத்துப் பூதந்தேவனார் என்று சங்க காலக் கவிஞர் ஒருவரே இருந்துள்ளார். இதுபற்றி ஆராய்ச்சி செய்துள்ள ஸ்வீடன் நாட்டு மொழியியல் அறிஞர் பீட்டர் ஷால்க், ''பல்லவர் காலத்துக்கு முன்பும்கூட ஈழம் என்றால், அது இலங்கையையே குறித்து வந்தது. 1923-ம் ஆண்டில் சர்.அருணாசலம் என்பவர் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பரவலாக்கினார். 1956-ல் ஈழம் என்பது தமிழர்களுக்கான தனி நாடு என்கிற அரசியல் தன்மையைப் பெற்றது. அதைத்தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 1976-ல் பயன்படுத்தியது!'' என்று குறிப்பிடுகிறார். 1985-ல் தொடங்கப்பட்ட 'டெஸோ' அமைப்பும்கூட தமிழ் ஈழம் என்ற சொல்லைத்தான் தன்னுடைய பெயரில் தாங்கியிருந்தது. அப்படி இருக்கும்போது ஏன் இந்தத் திடீர் மாற்றம்? அரசியல் தளத்தில் ஒரு புறம்ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் குரல்கள் வலுப்படும்போது, மறுபுறம் கருத்தியல் தளத்தில் அது நீர்த்துப்போகிறதா என்ற ஐயம் இதனால் ஏற்பட்டுள்ளது. ஒரு பேச்சிலோ... ஒரு கட்டுரையிலோ இப்படி ஒரு சொல்லுக்கு பதிலாக இன்னொரு சொல் பயன்படுத்தப்பட்டால், அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட முடியும். ஆனால், ஒரு அமைப்பின் பெயரிலேயே ஈழம் என்ற சொல் புறக்கணிக்கப்படும்போது அதனை அலட்சியப் படுத்திவிட முடியாது.
இது ஏதோ வெறும் பெயரைப் பற்றிய பிரச்னையாகப் பார்க்க முடியவில்லை. இது ஒரு கருத்தியல் பிரச்னை. அரசியல் தளத்தில் ஆற்றலோடு செயல்படுகிற அதே வேளையில், கருத்தியல் தளத்திலும் நாம் கவனமாக இருந்தாக வேண்டும். ஈழப் பிரச்னையையட்டி உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடந்துவரும் இந்தச் சூழலில், நாம் முக்கியமாக கவனிக்கவேண்டிய கருத்தியல் அம்சங்கள் சில இருக்கின்றன. அவை குறித்தும் கவனம் செலுத்தியாக வேண்டும். 'குடிமகன்' என்பதை இப்போது நாம் எப்படி அர்த்தப்படுத்துவது? வாக்காளர் அடையாள அட்டையும், ரேஷன் கார்டும் இருந்துவிட்டால் போதுமா? 'ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வாக்கு. எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு' என அரசியல் சமத்துவத்தை அம்பேத்கர் விளக்கினாரே, அது இப்போதும் உண்மைதானா? இந்தியாவில் உள்ள இனங்களுக்கு சம மதிப்பு இருக்கிறதா? தமிழ் இனமும், வங்காள இனமும் ஒரே விதமான மதிப்பைப் பெற்றிருக்கின்றனவா? ஒரு குடிமகனாக வங்காளி ஒருவர் பெற்றுள்ள மதிப்பும், தமிழர் ஒருவர் பெற்றுள்ள மதிப்பும் ஒரே நிறை கொண்டதுதானா? இது நாம் விடை காணவேண்டிய முதன்மையான கேள்வியாகும்.
அடுத்து ஆராயவேண்டிய பிரச்னை, இந்திய அரசின் உண்மையான குணம் என்ன என்பதைத்தான். ஈழப் பிரச்னையில் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தத் தமிழ்நாட்டு மக்கள் உண்ணா நிலை அறப்போராட்டம் என்கிற வடிவத்தை ஆங்காங்கே தன்னெழுச்சியாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் போராட்ட வடிவத்துக்கு இப்போது மதிப்பிருக்கிறதா? காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தபோது, பிரிட்டிஷ் அரசு கவலைப்பட்டது. அவரோடு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், சுதந்திர இந்தியாவில் உண்ணா விரதம் இருந்து யாரும் எதையும் சாதித்ததாகச் சொல்ல முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு இருந்த 'மனிதாபிமானம்'கூட அதன்பிறகு வந்த காங்கிரஸ்காரர்களுக்கு இல்லை என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. ஜனநாயக அரசு என்று நாம் வர்ணிக்கிற இந்திய அரசு, உண்மையில் பிரிட்டிஷ் காலத்துக் கொடுங்கோன்மையைவிட மோசமான கொடுங்கோல் அரசாக இருப்பதே இதன் பொருள். தற்போது இந்தியாவில் உள்ள அரசு எத்தகையது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.
மூன்றாவதாக நாம் கவனத்தோடு விவாதிக்க வேண்டிய விஷயம் தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றியது. பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியைக் காட்டி, மத்திய அரசு மெள்ள மெள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியை ராணுவமயப்படுத்தி வருகிறது. அதன் மோசமான வெளியுறவுக் கொள்கை காரணமாக அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மாநிலமாகத் தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளின் எச்சங்கள் எப்படி இன்று பாகிஸ்தானை சிதைத்துக்கொண்டிருக்கிறதோ... அப்படி இலங்கைப் பிரச்னையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்டு வரும் தவறான அணுகுமுறை, தமிழகத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாதிப்பு இப்போது மேலும் தீவிரமடையப் போகிறது. இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி, தமிழ்த் தேசியப் பிரச்னையைக் கெடுத்தார்கள். இன்று இலங்கை ராணுவத்துக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி அதை கெடுத்துக்கொண்டிருக்கிறார்��
�ள். இலங்கையை இந்தியா மிரட்ட முயன்றபோதும் தமிழர்களுக்குத்தான் பாதிப்பு. இப்போது இலங்கையை இந்தியா கூட்டாளியாக்கிக் கொண்டிருக்கும்போதும் தமிழர்களுக்குத்தான் பாதிப்பு. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை விளங்கிக்கொள்ள அதன் வர்க்க உள்ளடக்கத்தையும், அதனடிப்படையில் அது மேற்கொண்டு வரும் வெளியுறவுக் கொள்கையையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
நான்காவது முக்கியமான அம்சம்... தமிழ்நாட்டின் உரிமை பற்றியது. மாநில அரசின் உரிமை குறித்து இந்திய அளவில் முக்கியமான முழக்கங்களை எழுப்பிய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது இயல்பானதாக மாறி, அதில் தமிழ்நாட்டு அமைச்சர்கள் பலர் பொறுப்பு வகித்துவரும் நிலையில், மாநில உரிமைகள் பற்றிய கோரிக்கைகள் இப்போது பொருத்தமிழந்து விட்டன என்பதாகப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. கூட்டணி ஆட்சியின் மகிழ்ச்சியில் மாநிலக் கட்சிகள் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில்... சத்தமில்லாமல் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நிதிப் பகிர்வு என்பதில் ஆரம்பித்து இப்போது தேசியப் புலனாய்வு அமைப்பு வரை, இந்த உரிமைப் பறிப்பு வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. இதை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் உணர்ந் தனவோ இல்லையோ? தமிழக முதல்வர் புரிந்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறன் எழுதிய நூலை இப்போது முரசொலியில் தொடராக வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், இந்தச் சிக்கலை எதிர்கொள்ள அது மட்டுமே போதுமா? தி.மு.க. அறுபதுகளில் எழுப்பிய அதே முழக்கம் இப்போது பொருந்துமா? அல்லது வேறு வகையான முழக்கங்களை நாம் வடிவமைக்க வேண்டுமா?
ஐந்தாவது அம்சம், இந்திய ஜனநாயகத்தில் அதிகார வர்க்கம் வகித்துவரும் பங்கு பற்றியதாகும். அரசியல் வாதிகளின் கொள்கை முடிவுகள் இந்த நாட்டின் போக்கை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், அவர்களுக்கு அப்பால் அதிகார வர்க்கம் இந்த நாட்டை எந்த திசையில் செலுத்திக் கொண்டிருக்கிறது? அதன் காரணங்கள் யாவை? என்பது பற்றி நாம் அவ்வளவாகக் கவலைப்பட்டதில்லை. மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்பது முடிந்து, பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி உருவெடுத்தபோது, 'இனி அவசர நிலைக் காலம் போல ஒரு காலம் வரவே வராது. மத்திய அரசு பலவீனமடைவது இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு நல்லதுதான்' என்பதுபோன்ற ஒரு எண்ணம் பலரிடமும் நிலவியது. அது தவறு என்பதை இப்போது உணர்ந்துகொண்டு வருகிறோம். பலவீனமடைந்தது தேசிய கட்சிகள்தானே தவிர, மத்திய அரசு அல்ல.
கட்சிகளுக்கு அப்பால் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் அதிகார வர்க்கம் மத்திய அரசிடம் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவிப்பதில் வெற்றி கண்டு வருவதுடன், அரசியல் கட்சிகளிலும் ஊடுருவிச் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் மரபான அரசியல்வாதி அல்லாத வர்கள், இன்று பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு வந்திருப்பது. இதை நாம் எப்படி கையாளப்போகிறோம்?
ஈழப் பிரச்னையை மும்முரமாகக் கையிலெடுத் திருக்கும் நாம், அதே அளவு முக்கியத்துவத்தோடு கவனம் செலுத்தவேண்டிய கருத்தியல் பிரச்னைகள் இவை. இவற்றையெல்லாம் உள்ளடக்கி ஈழப் பிரச்னையை அணுகினால்தான், அது இங்குள்ள தமிழர்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும்!
-ஜூனியர் விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment