ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் முக்கிய வகிபாகம் வகிக்கும் பெண்கள் - ஐ.நா. அதிர்ச்சித் தகவல்
உலகெங்கும் நடைபெறும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் பெண்கள் முக்கிய வகிபாகம் வகிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது. வியாழக்கிழமை ஆட்கடத்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது உலகளாவிய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆட்கடத்தல் நடைபெறும் 30 சதவீதமான நாடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஆச்சரியப்படத்தக்க வகையில் பெண்கள் பெருமளவு வகிபாகத்தை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அலுவலகம் கூறுகிறது.
""ஏனைய குற்றச்செயல்களை விட கடத்தல் நடவடிக்கையில் பெண்கள் முக்கிய வகிபாகத்தை வகிக்கின்றனர். ஏற்கனவே ஆட்கடத்தலுக்கு உட்பட்ட பெண்கள் பலரே இவ்வாறு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில் 60 சதவீதமானவர்கள் பெண்களாவர்'' என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆட்கடத்தலுக்கு உட்படுபவர்களில் சுமார் 20 சதவீதமானவர்கள் சிறுவர்களாவர். 155 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்படி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment