தீக்குளிப்பு அரசியல்!
"தமிழ் இன உணர்வு தீயாகம் பற்றி எரிகிறது...' என்று யாராவது சொன்னால், இப்போது அதை மேடையில் பேசப்படும் அலங்காரப் பேச்சாக ஒதுக்கிவிட முடியாது! ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கும் நபர்களின் எண்ணிக்கை, நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னையில் முத்துக்குமார் தீக்குளித்ததில் ஆரம்பித்து... பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன் என அந்தப் பட்டியல் வளர்ந்துகொண்டு போகிறது.
தமிழகத்தின் எல்லையைத் தாண்டி மலேஷியாவில் ஒருவரும் ஜெனிவா ஐ.நா. தலைமையகம் முன்பாக ஒருவரும் என ஐந்து தமிழர்கள் குறுகிய காலத்தில் தீக்குளித்து இறந்துள்ளனர்.
"தீக்குளிக்க வேண்டாம்!' என்று அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், தமிழர்கள் தங்களை மாத்துக் கொள்வது நின்றபாடில்லை. உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஏதோவோர் ஆவேசத்தில் இப்படிச் செகிறார்கள். புரிதல் இல்லாததுதான் இதற்கெல்லாம் காரணம் என்று இதைப்பற்றி எண்ணுபவர்களும் உண்டு. இது திராவிட அரசியல் அறிமுகப்படுத்திய ஒரு மோசமான போராட்ட வடிவம் என்று குறைகூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அத்தகைய விமர்சனங்கள் தவறானவை. தீக்குளித்து ஒருவர் தன்னை மாத்துக்கொள்வதை எவருமே ஆதரிக்க முடியாது. அதேநேரத்தில் அப்படிச் செய்கிறவர்களை நாம் கொச்சைப்படுத்திவிடவும் கூடாது.
தீக்குளித்து உயிர் துறப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரித்தான போராட்ட வடிவமல்ல... உலகெங்கும் உள்ள நாடுகள் பலவற்றிலும் இது வழக்கத்தில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்த இயேசு சபை பாதிரியார்கள் பதினாறாம் நூற்றாண்டில் தங்கள் உறுப்புகளை எரியூட்டிக்கொண்ட சம்பவங்கள் பலவற்றை வரலாற்றில் பார்க்க முடிகிறது. இயேசு அனுபவித்த துன்பத்தை தாமும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கோடு அவர்கள் அப்படிச் செது கொண்டார்களாம். வியட்நாம் யுத்தத்தின்போது அமெரிக்காவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த துறவிகள் பலர் தீக்குளித்து உயிர் நீத்த சம்பவங்கள், உலகையே அதிரச் செதன. சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2001ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் பலர் தீக்குளித்துத் தம்முடைய உயிரை மாத்துக் கொண்டனர்.
திராவிடக் கட்சிகளால் தான் தீக் குளிப்பு தமிழ் நாட்டுக்கு அறிமுக மானது எனச் சொல் பவர்கள் அறியாமை யால் அப்படிச் சொல்கிறார்கள்.
இந்தியா முழுவதும் அண்மைக் காலம் வரை நடைமுறையில் இருந்த சதி என்ற உடன் கட்டை ஏறும் (ஏற்றும்) வழக்கம் கூட ஒரு வகையான தீக்குளிப்புத்தான்! கணவனின் சிதையில் மனைவியும் மூழ்கி உயிரைப் போக்கிக்கொள்கிற அந்தக் கொடிய முறை, தமிழகத்தில் அவ்வளவாக இருந்ததில்லை என்பதைக்கூட விமர்சனம் செபவர்கள் மறந்து விடுகிறார்கள்.
தீக்குளித்து உயிர் நீப்பதை நாம் ஆதரிக்கவில்லை என்றபோதிலும், அது உணர்த்தும் செய்தியை நாம் புறக்கணித்துவிடக் கூடாது. ஒரு மனிதனின் உடல் மற்றும் உயிர் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் உச்சபட்ச அதிகாரமாக இருக்கிறது. ஒரு குடிமகனை சிறையில் அடைப்பதென்பது அவனுடைய உடலின் மீதான அரசாங்கத்தின் அதிகாரத்தை எடுத்துக்காட்டுகிறது. அது போலவே தன்னுடைய குடிமக்களின் உயிரைப் பறிக்கக்கூடிய அதிகாரத்தையும் அரசாங்கம் தன்னிடம் வைத்திருக்கிறது. மரண தண்டனை வழங்குவதன் மூலம் அந்த அதிகாரத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது.
உயிரைப் பறிக்கக்கூடிய அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துள்ள அரசாங்கம், அதைக் குடிமகன் ஒருவன் மேற்கொள்வதற்கு அனுமதிப்பதில்லை. எந்தக் குடிமகனும் தன் உயிரை மாத்துக்கொள்ள இங்கே அனுமதி கிடையாது. தற்கொலை என்பது சட்டப்படி ஒரு குற்றமாகும். அரசாங்கத்துக்கு, அதன் அதிகாரத்துக்கு குடிமகன் ஒருவன் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்றால், அதற்குப் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. தன்னையே துன்புறுத்திக்கொள்வது அதில் ஒரு வழிமுறையாகும். உலகெங் கும் பாராட்டப்படுகிற காந்தியடிகளின் உண்ணாவிரதப் போராட்ட வழிமுறை அத்தகையதுதான். அதை அகிம்சாமுறை என எல்லோரும் அழைக்கிறார்கள். அதைவிடவும் "சுய இம்சை' என அதைக் குறிப்பிடுவதுதான் பொருத்தமானதா யிருக்கும்.
ஒரு மனிதன் தன்னுயிரைத் தானே மாத்துக் கொள்ளும்போது, அரசாங்கத்துக்கு அது மிகப்பெரும் சவாகலாக மாறிவிடுகிறது. தன்னுடைய வாழ்வின் மீது மட்டுமல்லாமல்.... சாவின் மீதும் அவன் அதிகாரம் கொண்டவனாக மாறும்போது, அதை அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. தன்னுயிரின் மீது அதிகாரம் கொண்ட ஒரு மனிதன், எந்தவொரு சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத வனாக மாறிவிடுகிறான். அது அரசாங்கத்தின் ஆளுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த விதத்தில் பார்த்தால், தீக்குளித்து தன்னை மாத்துக் கொள்கிறவர்கள்... அறியாமையால் அதைச் செகிறார்கள் என்று நாம் நினைப்பது தவறு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தீக்குளித்து உயிர் துறப்பவர்கள், தம்முடைய கையறு நிலையின் காரணமாகத்தான் அதைச் செய்கிறார்களா? அப்படியும் கூறிவிட முடியாது. தினந்தோறும் ஈழத்தில் செத்து மடியும் தமிழ் சொந்தங்களுக்குத் தங்களால் எதுவும் செயமுடியவில்லையே என்ற இயலாமை அவர்களுக்கு இருந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அது மட்டுமே அவர்களை சாகத் தூண்டிவிடவில்லை. தங்களுடைய சாவாவது இங்குள்ள அரசாங்கங்களை வேகமாகச் செயல்பட வைக்காதா என்ற எதிர்பார்ப்புத்தான் அவர்கள் இந்த முடிவை மேற்கொள்வதற்கு அடிப்படை. அந்த எதிர்பார்ப்பை ஈடேற்றாமல் இந்த மரணங்களை வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அரசாங்கங்கள் கருதுமேயானால் அது மிகப்பெரும் தவறாகவே முடியும்!
ரவிக்குமார் எம்.எல்.ஏ.
0 விமர்சனங்கள்:
Post a Comment