தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படுகின்றன
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட்டு வருவதாக த.ம.வி.பு.களின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
உறுப்பினர்களிடமிருந்து ஆயுதங்களைக் களையும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், உறுப்பினர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“எமது உறுப்பினர்களின் ஆயுதங்களைக் களைய ஆரம்பித்துள்ளோம். எமது உறுப்பினர்கள் தற்பொழுது ஆயுதங்களை வைத்திருக்கவேண்டிய தேவை இல்லை. இந்த நடவடிக்கையை நாம் விரைவில் பூர்த்திசெய்யவுள்ளோம்” என்றார் சந்திரகாந்தன்.
ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று தமது கட்சி அலுவலகங்களுக்கும், உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகளிடமிருந்தான அச்சுறுத்தல்கள் குறைந்திருப்பதாகக் கூறினார்.
“விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது, புலிகளின் பல உறுப்பினர்கள் தப்பியோடிவிட்டனர். எனினும் எமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது” என்றார் அவர்.
அதேநேரம், தமிழ் மக்களி விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவிலுள்ளவர்களின் ஆயுதங்களே தற்பொழுது களையப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிள்ளையான், சில அரசியல் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமது சொந்தப் பாதுகாப்பிற்காக ஆயுதங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதாகக் கூறினார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மோதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் இரண்டு கட்டங்களாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment