மறுபக்கம்
இந்தியாவில் இலங்கைக் காவல்துறையினரும் படையினரும் பயிற்றப்பட்டுவந்துள்ளனர். தமிழகத்திலே விமானப் படையினருக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வந்துள்ளமை பற்றியும் அவர்கள் தொடர்பான ஆட்சேபனைகளின் பேரில் அவர்களை வெளியேறும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் சென்ற மாதப் பிற்பகுதியில் தெரிய வந்தது. இந்தியா இலங்கையுடன் பலவாறான இராணுவ ஒத்துழைப்பு ஏற்பாடுகளைச் செதிருக்கிறது என்பது ஒன்றும் பரம இரகசியமல்ல. தமிழக முதல்வரோ டில்லியுடன் தொடர்புகளைக் கொண்டிருக்க பல தமிழக அரசியல் தலைவர்களில் எவருமோ இதை அறிய மாட்டாரா? அறிவர் என்றால் சன் அதைப் பற்றி அப்போதே கேள்வி எழுப்பத் தவறினார். அறியமாட்டார் என்றால் எல்லாரும் ஏமாற்றப்பட்டார்களா? அவர்களை ஏமாற்றி வருகிற டில்லி அதிகார பீடத்துடன் ஒத்துழைக்கவும் காங்கிரஸுடன் ஒரே கூட்டணியில் இருக்கவும் தமிழகத் தமிழர்கள் தலையில் மிளகா அரைக்கும் குடும்ப ஆட்சியுடன் ஒட்டிக்கிடக்கவும் அவர்கட்கு எப்படி இயலுமாகிறது? கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் சங்கடம் ஏற்படுத்துகிற விதமாகத் தனது விடுதலைப்புலி எதிர்ப்பையும் ஈழத் தமிழர் பற்றிய முதலைக் கண்ணீரையும் மாற்றி மாற்றிக் காட்டுகிற ஜெயலலிதாவுடன் எப்படி கோபாலசாமியால் ஒட்டிக்கிடக்க முடிகிறது?
திருமாவளவனின் உண்ணாவிரத நாடகம் பஸ் எரிப்புக் காட்சிகளுடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. முடிவில் என்ன நடந்தது? இன்னமும் பலவேறு எதிர்ப்பு நாடகங்களின் நடுவிலும் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் அதன் மூலமே ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முடியும் என்று திருமாவளவன் தனது நாடகத்தைத் தொடருகிறார். தமிழக அரசியல் என்பது தமிழகத்தின் இரண்டாவது பெரிய சாபக்கேடு. முதலாவது அதன் சினிமாத் துறையாகவே இருந்து வந்துள்ளது. அங்கே இருக்க வேண்டியவர்கள் எல்லாரும் அரசியலில் இருக்கிறார்கள். சினிமாவைப் பார்த்துக் கனாக்காணுகிற ஒரு சமூகத்துக்கு தமிழக அரசியலின் சீரழிவு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. என்றாலும் இவற்றுக்கும் அப்பால் ஈழத் தமிழரின் பிரச்சினை அண்மைக்காலமாகக் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இலங்கையில் இன்றைய நெருக்கடி எப்போதிருந்து தொடங்கியது?
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மீது குண்டுவீச்சு நடந்தது. பின்பு மாவிலாறு தொடர்பாகத் தொடங்கிய பிரச்சினை மூதூரின் ஒரு பகுதியிலிருந்து தமிழரும் முஸ்லிம்களும் வெளியேற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. அப்போதிருந்தே போருக்கு எதிரான இயக்கம் முன்னெடுக் கப்பட்டிருக்க வேண்டாமா? மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சம் பேர் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ நேர்ந்த போது முன்னெடுக் கப்பட்டிருக்க வேண்டாமா? வன்னி யில் போர் முன்னெடுக்க ப்பட்டபோதே எதிர் ப்புத் தொடங்கியிருக்க வேண்டாமா?
மூதூர்ப் பகுதியி லிருந்து விடுதலைப் புலிகள் விலக்கப்பட்ட பிறகு நமக்குக் கிடைத்த முக்கிய செதி என்ன? அங்கே இந்திய அரசாங்கம் அனல் மின்நிலையத்தை நிறுவப்போகிறது என்ப தல்லவா? அதைப் பற்றித் தமிழகத்தில் எந்தவிதமான எதிர்ப்பியக்கம் முன்னெ டுக்கப்பட்டது? இந்திய அரசாங்கத்தின் மனதில் என்ன இருக்கிறது என்பதை எவரும் அறியமுடியாதபடி இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குக் குழிபறிக்கிற விதமாகவே இந்திய ஆட்சியாளர்கள் தொடக்கத்திலிருந்து நடந்து வந்தனர். பின்பு வடக்குகிழக்கில் அமைதியைக் குலைக்கிற விதமான பல சம்பவங்கள் ஒப்பேற்றப்பட்டன.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபின்பு இலங்கைஇந்திய உடன்படிக்கையை மீறுகிற விதமாக வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டன. இந்திய ஆட்சியாளர்கள் அதுபற்றிக் கவலையிட்டதில்லை. போரைத் தீவிரமாக முன்னெடுப்பதற்கு மகிந்த சிந்தனை ஆட்சி எடுத்த முடிவை இந்திய ஆட்சியாளர்கள் அறியாதவர்களல்ல என்பது மட்டுமன்றி அவர்களது ஆசிகளுடனேயே போர் முன்னெடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு ஆதாரமாகவே இந்தியா வழங்கிவந்த இராணுவ ஒத்துழைப்பு அமைந்திருந்தது.
இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களை விளங்கிக் கொள்ளாமல் நம்மால் இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையை விளக்க இயலாது. இவ்வளவு காலமும் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பா, நரசிம்மராவ், மன்மோகன்சிங், சோனியா காந்தி என்கிற தனிமனிதர்களது அடிப்படைகளில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நடத்தையையும் கருணாநிதி, ஜெயலலிதா, கோபாலசாமி என்கிறவர்களது நோக்கங்களை ஊகித்துத் தமிழக அரசின் போக்கையும் விளக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தவறான முடிவுகட்கே இட்டுச் சென்றுள்ளன. இந்த அரசியற் சூத்திரங்களும் சமன்பாடுகளும் செல்லாத்தனமாகிப் போன பிறகு வேறு விளக்கங்களாக "இந்த அதிகாரி நல்லவர்' "அந்த அதிகாரி கெட்டவர்' என்கிறவிதமான புதிய ஆத்திரங்களைப் புகுத்துவதால் நமது அறிவு மேம்படப் போவதில்லை.
முதலில் அடிப்படையான விடயங்கள் விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். அரசு என்றால் என்ன? ஆளும் வர்க்கம் என்றால் என்ன? அரசுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் உள்ள உறவின் தன்மை என்ன? ஆட்சி மாற்றங்களால் மாறுவது என்ன? மாறாமல் இருப்பது என்ன? இவற்றுக்கான விடைகள் நமக்குச் சரிவரக் கிடைக்குமானால் அரசியல் நிகழ்வுகளின் பொதுவான போக்கை விளக்கிக் கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் நுணுக்கங்களை ஆராயவும் அறியவும் முடியும். அதை விடுத்து ஆட்சி முறையும் அரச வக்கிரமும் அப்படியே இருக்கையில் அதிகாரத்தில் இருக்கிறவர்களின் முகங்களை வைத்து முடிவுகட்கு வருவோமானால் நாம் ஏமாற்றத்துக்கு ஆளாவோம்.
தனக்கு எவரெவரையோ எல்லாந் தெரியும், உரியவர்களிடம் பேசி எல்லாவற்றையும் சரிக்கட்டுவேன் என்று வாச்சவடால் அடித்த ஒரு சாமியாருக்கு இங்கே ஒரு பெரிய தமிழ்ப் பத்திரிகை நிறுவனம் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வந்தது. இப்போது சாமியார் சொல்வது என்ன? இந்திய ஆட்சியாளர்கள் இலங்கை நிலைவரங்களைத் தவறாகவே விளங்கிக் கொண்டுள்ளனர் என்கிறார்! சாமியாருக்கு நான் சொல்லுகிறேன். சாமியாரைவிட நன்றாகவே இந்திய ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டிருக் கிறார்கள். பிரணாப் முகர்ஜியை எப்போது எதைப்பற்றிப் பேச இலங்கைக்கு அனுப்புவது என்பது கூட அந்த அறிவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதுதான்.
ஈழத்துத் தமிழ் அரசியல்வாதிகள் மன்மோகன் சிங்கின் தரிசனத்துக்காகத் தவங்கிடந்து வெறுங்கையோடு இலங்கை திரும்பிய காலத்திலேயேனும் வராத புத்தி இனிவரும் என்று நாம் எதிர்பார்க்க நியாயமில்லை. இப்போது தமிழர் தேசியக் கூட்டணியில் பிளவு என்று செதி வந்திருக்கிறது. தனக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்றுமே எவ்விதமான ஒட்டோ உறவோ இல்லை என்று சம்பந்தன் அறிவித்திருக்கிறார். இன்னும் என்னென்ன அற்புதங்கள் நிகழக் காத்திருக்கின்றனவோ அறியேன். எனினும், எதுவும் எனக்கு அதிர்ச்சி தராது என்று மட்டும் என்னாற் கூற முடியும். அதுபோலவே அது தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சி தராது என்று நம்புகிறேன்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைத் தமது விருப்பத்திற்கு மாறாகப் பிடித்து வைத்திருப்பதை எதிர்த்து இப்போது ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் நிறையவே காணக் கிடைக்கின்றன. அது சரியான ஒரு கோரிக்கைதான். ஆனால், அரசாங்கப் படைகள் அப்பாவிப் பொதுமக்களின் வாழ்விடங்கள் மீதும் மருத்துவமனைகள் போன்ற பொது இடங்கள் மீதும் குண்டு வீசக்கூடாது என்பதையும் சேர்த்துச் சொன்னால் நம்பகமாக இருக்கும்.
மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிய வசதியாக மக்களிடையே சென்று கருத்துகளை அறியக் கூடிய ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்பினர் போத் தமது மதிப்பீடுகளைச் செவதற்கு இரு தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும். மக்களுக்கு அவர்களது அடிப்படைத் தேவைகள் அவர்கள் எங்கிருந்தாலும் குறைபாடின்றியும் தடையின்றியும் கிடைக்க வழி செயப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், அது உண்மையான மனிதாபிமானத்தின் வெளிப்பாடாக இருக்கும். இங்கே மனித அவலம் அரசியற் கணக்கேட்டில் வரவாக எழுதப்படுகிறது.
தமிழ் மக்கள் யாரை நம்பலாம் என்கிற கேள்விக்கு என்னிடம் அன்றும் இன்றும் என்றும் உள்ள பதில் ஒன்றே. தங்களைத் தாங்களே நம்புவதை விட அவர்கட்கு வேறு வழி இல்லை.
தமிழ் மக்கள் ஒரு சமூகமாகச் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். அதற்கு அவசியமான முன்நிபந்தனைகளில் ஒன்று, தமக்குள்ளே இருக்கிற ஏற்றத் தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் களைய அவர்கள் துணிய வேண்டும்.
கோகர்ணன்
0 விமர்சனங்கள்:
Post a Comment