வன்னியில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இழப்புகள்
வன்னியில் நடைபெறும் கடும் ஷெல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சமர்களால் தினமும் 40 பொதுமக்கள் வரை கொல்லப்படுவதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வருவதாக டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள சனசமூக நிலையமொன்றில் இடம்பெயர்ந்த நிலையில் இயங்கும் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் முக்கிய டாக்டராகச் செயற்படும் முல்லைத்தீவு அரச மருத்துவ அதிகாரியான டாக்டர் வரதராஜா வன்னியின் தற்போதைய நிலை தொடர்பாக கொழும்பிலுள்ள அஷோசியேற்ரட் பிரஸ் (ஏ.பி.) செய்தியாளருக்கு தொலைபேசி மூலம் வெள்ளிக்கிழமை காலை வழங்கிய பேட்டியில் மேலும் கூறுகையில்;
இந்தப் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்தும் ஷெல்கள் வீழ்ந்து வெடிக்கின்றன. நிலைமை தொடர்ந்தும் மோசமாகவே இருக்கின்றது. தினமும் ஷெல் வீச்சாலும் துப்பாக்கிச் சமரினாலும் சராசரியாக 40 பொதுமக்கள் கொல்லப்படுவதுடன் 100 பேர் வரை காயமடைகின்றனர்.
முல்லைத்தீவு நகரை படையினர் கைப்பற்றுவதற்கு முன் அங்கிருந்த வைத்தியசாலையிலிருந்த முக்கிய மருந்து உபகரணங்களுடன் அருகிலுள்ள புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரிக்கு இடம்பெயர்ந்துவிட்டோம்.
எனினும் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி மிகக் கடும் ஷெல் தாக்குதலுக்கிலக்கானது. இதனால் 12 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் நோயாளிகள்.
கடந்த வாரம் இங்கிருந்து ஊழியர்கள் அனைவருடனும் வெளியேறிச் சென்று கரையோர நகரான புதுமாத்தளனிலுள்ள கைவிடப்பட்ட பாடசாலையொன்றில் ஆஸ்பத்திரியை அமைத்துள்ளோம். நோயாளர்களும் அங்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியும் கடும் ஷெல் தாக்குதலுக்கிலக்காகியுள்ளது. ஆஸ்பத்திரிக்கு அருகில் திங்கட்கிழமை 22 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தப் பாடசாலையில் குடிநீரில்லை. நூற்றுக்கணக்கானோர் இருக்கும் அந்தப் பகுதியில் இரு கழிப்பறைகளே உள்ளன.
உணவு விநியோகமென்பது படுமோசமாக உள்ளது.
ஆஸ்பத்திரியை பொறுத்தவரை அவசர தேவைக்குரிய பென்சிலின் மற்றும் அத்தியாவசியமான நோய்த்தடுப்பு மருந்து வகைகள் எதுவுமில்லை. மயக்க மருந்து மிகவும் தட்டுப்பாடாக உள்ளது.
வழமையாக இந்த மாவட்டத்தில் 30 டாக்டர்கள் கடமையாற்ற வேண்டும். ஆனால் எட்டுப் பேரே கடமையாற்றுகின்றோம். தற்போதைய மோசமான நிலையில் படுகாயமடைந்து வருவோருக்குச் சிகிச்சையளிக்க குறைந்தது 80 டாக்டர்களாவது தேவை.
இங்குள்ள மிகுதி டாக்டர்களில் எவரும் சத்திர சிகிச்சை நிபுணர்களில்லை. ஆனால், அவர்களெல்லோரும் அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். திரைச்சீலை மறைப்புக்குள் பாடசாலை மேசையில் வைத்தே சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
முழு நாளும் நாங்கள் கடமையாற்றிக் கொண்டே இருக்கிறோம். காயமடைந்து வருவோரது நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. ஆஸ்பத்திரியிலிருந்த 20 தாதியர்களில் மூவரே தற்போது கடமைக்கு வருகின்றனர். ஏனையோர் வருவதேயில்லை.
சகல வழிகளிலும் இந்த ஆஸ்பத்திரியில் நாம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம். மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளின் மத்தியில் மிகப்பெரிய மார்ப்புச் சிகிச்சையையோ அல்லது தலைக்காயங்களுக்கோ மருந்துவ ஊழியர்களால் சிகிச்சையளிக்க முடியாதுள்ளது. இதனால் இவ்வாறான காயங்களுடன் வருவோரில் பெரும்பாலானவர்கள் இறக்க நேரிடுகிறது.
அதேநேரம், இங்குள்ள மருத்துவர்களால் ஏனைய பெரும்பாலான காயங்களுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சையளிக்க முடிகிறது.
இந்த ஆஸ்பத்திரியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் இவ்வாரம் 600 நோயாளர்களும் (காயமடைந்தோர்) அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கப்பல் மூலம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த மேலும் 300 பேர் இங்குள்ளனர். இதைவிட கடுமையான நோய்வாய்ப்பட்ட 200 நோயாளிகளும் இங்குள்ளனர். இவர்களுக்கும் உடனடியாக மேலதிக சிகிச்சை வழங்கப்படவேண்டியிருப்பதால் இவர்களும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படவேண்டிய அவசர தேவையுள்ளது.
பெருமளவானோர் நுரையீரல் தொற்றினால் வருந்துகின்றனர். காய்ச்சல், இருமல் மற்றும் ஷெல், பல்குழல் ரொக்கட் போன்ற குண்டுவெடிப்புகளால் ஏற்பட்டும் புகைகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று, நான்கு வாரமாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஷெல் தாக்குதல் காயங்களுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படுகின்றனர். அதேநேரம், கொல்லப்படுவோரின் சடலங்களை தற்போது எவரும் ஆஸ்பத்திரிக்கு எடுத்து வருவதில்லை. அந்தந்த இடங்களிலேயே அவற்றைப் புதைத்து விடுகின்றனர்.
தாங்கள் வரும் வழிகளிளெல்லாம் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கிடப்பதாக காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தினமும் காயமடைந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வீதிகளில் பார்த்து வந்து தெரிவிக்கும் தகவல்களை வைத்தே தினமும் சராசரியாக 40 பொது மக்கள் கொல்லப்படுவதாக கூறுவதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், தனது பெயரை வெளியிடவிரும்பாத மற்றொரு டாக்டர் தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில், தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதாகத் தெரிவித்துள்ளதாகவும் ஏ.பி.செய்தி நிறுவனம் தெரிவித்தது.
0 விமர்சனங்கள்:
Post a Comment