புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிப்பதே இன்றைய முதற்பணி
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் கூட்டாக அறிக்கை
வன்னியில் சிக்கியிருக்கும் மக்களை தாம் விரும்பிய பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு புலிகள் எதுவித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி வேண்டு கோள் விடுத்துள்ளது. அதேநேரம் அந்த மக்களை பேரவலத்திலிருந்து மீட்பதே இன்றைய முதன்மையான பணியென்றும் மேற் படி கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, தி. ஸ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- வன்னியில் பேரவலத்தினுள் சிக்குண்டுள்ள மக்கள் பற்றிய கவலை மனிதநேயமுள்ளவர்களின் மனச் சாட்சியை உலுக்கி நிற்கிறது.
வன்னியில் பரந்து வாழ்ந்த இம்மக்கள், மாதக்கணக்கில் பணயமாக கொண்டு செல்லப்பட்டு இன்று 200 சதுர கி.மீ.க்கு குறைவான நிலப்பரப்பில் ஒடுங்க, ஒதுங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அன்றாடம் காயமும் மரணமுமென்று அவர்கள் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே அகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அதேவேளை அரசாங்கம் அந்த மக்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதற்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு இருக்கின்றது என்பதை உணரும்படியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
இந்த மக்கள் கடந்த 15 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். ஏதோவொரு வகையில் புலிகளுடன் சம்பந்தப்பட்டு வாழ வேண்டிய துரதிர்ஷ்ட நிலையே இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது.
அரச கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய புலிகளின் பொய்யான பிரசாரங்களும் அந்த மக்களை பீதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. மேலும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஒருசில சம்பவங்களும் அவர்களிடம் இந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்கள் ஐ.நா. நிறுவனங்களின் கண்காணிப்புடன் அல்லது ஒத்துழைப்புடன் பராமரிக்கப்படல் வேண்டும்.
ஜனநாயக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் இம்மக்கள் தொடர்புகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
வயோதிபர்கள் தமது உறவினர்கள் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறவினர் யாராவது அருகிலிருந்து உதவுவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.
மரணப் பொறியில் அகப்பட்டிருக்கும் இந்த இலட்சக்கணக்கான மக்களை மீட்பதில் உரிய அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தாலும், குறிப்பாக இந்தியாவாலும் பிரயோகிக்கப்படல் வேண்டும். காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், தற்போது முகாம்களில் இருப்பவர்கள், இனிமேல் வரவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகள், ஏற்பாடுகள் விரிவாக திருப்திகரமாக செய்யப்படல் வேண்டும்.
இந்தக் காரியங்களை செய்வதன் மூலமே மக்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும். பேரவலங்களில் இருந்து அவர்களை மீட்க முடியும்.
அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment