மகா மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள்
இலங்கை நிலைமை படு மோசமாகி வருகிறது. லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை மகா மோசமாக உள்ளது. அவர்களின் உயிர் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக சர்வதேச உதவிக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் படைகள் கண்மூடித்தனமாக தாக்கி வருவதாகவும் அவை கவலை தெரிவித்துள்ளன. குடியிருப்புகள், மருத்துவமனை என பாரபட்சம் பார்க்காமல் தாறுமாறாக விமான தாக்குதலையும், பீரங்கித் தாக்குதலையும் இலங்கைப் படைகள் நடத்தி வருவதால் அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் உயிர்ச்சேதத்தை சந்தித்து வருவதாகவும் அவை கூறியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனை மீது இலங்கைப் படைகள் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வீஸ் கூறியுள்ளார்.
அங்கு மொத்தம் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். எத்தனை பேர் இதில் உயிரிழந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் பெரும் உயிர்ச் சேதத்திற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இந்த மோசமான தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பெண்களும், குழந்தைகளும் இந்த மோசமான தாக்குதலில் உயிரிழந்துளளனர். இறந்தவர்களின் உடல்களை தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் வீஸ்.
யுனிசெப் அமைப்பின் சாரா குரோ கூறுகையில், தாக்குதல் நடந்து வரும் பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சரியான முறையில் இலங்கை அரசு வாய்ப்பளிப்பதில்லை. அப்பாவி குழந்தைகளும், பெண்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி காப்பாற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால் அதற்கு வழிதான் இல்லை என்றார்.
கடந்த 3 நாட்களில் மட்டும் 200 அப்பாவித் தமிழர்கள் காயமடைந்துள்ளனராம். இவர்களில் 30 பேர் குழந்தைகள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் முயற்சியில் ஐ.நா. ஊழியர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முழுமையாக அவர்களால் மீட்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.
பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதி குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பாவித் தமிழர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எதிர் வரும் நாட்களில் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறோம் என உதவிக் குழுக்களில் இருப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது இரண்டரை லட்சம் தமிழர்கள் பெரும் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளனர். அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
முகம நிறைய அதிர்ச்சி, பயத்துடன் தமிழர்கள் காணப்படுகின்றனர். அடுத்த நிமிடம் உயிருடன் இருப்போமா என்ற உத்தரவாதம் அவர்களிடம் இல்லை என்கிறார் லிசபெத் லிஸ்ட் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனப் பெண்மணி.
சுத்தமான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாத நிலையில் மிகவும் நெருக்கடியான சூழலில் தமிழர்கள் தவித்து வருவதாக ஒரு தொண்டு நிறுவனப் பெண் கூறுகிறார்.
லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இலங்கைப் படையினரின் தாக்குதல் இன்னும் வேகம் பிடித்தால் நிலைமை மிக மிக மோசமாகி விடும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment