உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறேனா?-ராமதாஸ்க்கு கருணாநிதி பதில் கூறியுள்ளார்.
தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால், ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதை உலகத் தமிழர்கள் நன்றாகவே உணர்வார்கள்''என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, கேள்வி - பதில் வடிவில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
"உலகத் தமிழர்களையெல்லாம் ஏமாற்றி காதில் பூ சுற்ற முயற்சிப்பதாக ஒரு தலைவர் கூறியிருக்கிறார். உலகத் தமிழர்களை ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை அவர்களே அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணர்வார்கள்.
உலகத் தமிழர்களின் காதில் நான் பூ சுற்றுகிறேன் என்று சிலர் சொல்வதால், அவர்களின் ஆத்திரம் எந்த அளவுக்குப் பெருகியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளத்தான் பயன்படுகிறது. என்னை எதுவும் பாதிக்கவில்லை.
திமுக செயற்குழுவில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது திருப்தி தருவதாகச் சொல்லிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, அதற்கும் தயாராக இருப்பவன்தான்.
ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் எனக்கு எழுதிய கடிதத்தில், ""தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்கள அரசு ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகிறது. தாங்கள் உடல் நலத்தைப் போலவே, தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியும் நலமும், பலமும் பெற்றுத் தொடர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
மருத்துவமனையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உள்ளார்ந்த உணர்வோடு கருத்துத் தெரிவித்த தலைவர்கள், பதவி விலக வேண்டுமென்று கூறுபவர்கள் தாங்கள் அந்த இடத்தைப் பெறலாமா என்ற நப்பாசையோடு கூறுகிறார்கள்; அவர்களின் வலைகளில் விழுந்து விட வேண்டாமென்று எச்சரித்ததும்தான் அத்தகைய தீர்மானத்தை திமுக செயற்குழு நிறைவேற்றாததற்குக் காரணம். அதனால், ஏமாற்றமடைந்தவர்களுக்கு என் அனுதாபம்.
இதில் என்ன தவறு... இலங்கைப் பிரச்னையில் 58 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவைத் தான் திமுக தற்போதும் எடுத்துள்ளது என ஒரு தலைவர் கூறியுள்ளார்.
அதில் இருந்தே, இலங்கைத் தமிழர் பிரச்னையில் இன்றோ நேற்றோ நான் அக்கறை காட்டவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவைத் தான் இப்போதும் எடுப்பதாகச் சொல்கிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது? இவர்கள் மனதைக் குளிர வைப்பதற்காக திமுக ஒரு முடிவை எடுக்க முடியுமா என்ன?' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்னைக்காக,பல்வேறு போராட்டங்களையும்,நடவடிக்கைகளையும் திமுக மேற்கொண்டதைப் பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி.
இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும் என்றும், இதனையெல்லாம் தமிழ் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்னையில் திமுக மீது களங்கம் கற்பிக்க நினைத்தால் அது நிச்சயமாக நிறைவேறாது என்றும் கூறியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment