கஞ்சிக்காக சிரட்டையுடன் அலையும் குழந்தைகள்
வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்தவர்களில் பலர் காணாமல் போயுள்ளதுடன், இன்னும் பலர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.செல்வம் அடைக்கலநாதன், வவுனியாவில் நலன் புரி நிலையங்களென்ற பேரில் அமைக்கப்படும் தடுப்பு முகாம்களில் 10 வருடங்களுக்கு மக்களை தடுத்து வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருபவர்களை இராணுவத்தினர் வடிகட்டி பிரித்தெடுக்கின்றனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். பலர் சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
மெனிக்பாம், நெலுக்குளம், அடம்பன் ஆகிய மூன்று இடங்களில் நலன்புரிநிலையங்கள் என்ற பேரில் தடுப்பு முகாம்கள் உருவாக்கப்படுகின்றன. இங்கு மக்களை 10 வருடங்களுக்கு தடுத்து வைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது. அதற்கான வேலைத் திட்டங்களே அங்கு முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே வன்னியிலிருந்து வரும் மக்கள் சர்வதேச நிறுவனங்களின் மேற்பார்வையில், அவர்களின் அனுசரணையில் தங்கவைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி மொழியை ஐ.நா.சபை கொடுக்க வேண்டுமென இச் சபையில் கோருகின்றேன்.
வன்னிப் பகுதியில் மக்கள் இனப் படுகொலை செய்யப்படுகின்றனர் ஆடு,மாடுகளைப் போல் வன்னி வீதிகளில் மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களை புதைக்கக் கூட முடியாத நிலையில் மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். படையினரால் மழைபோல் ஏவப்படும் ஷெல்கள் மக்களின் தலைகளில் தான் விழுந்து வெடிக்கின்றன. வீதி வீதியாக மனித உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.
அங்கு கஞ்சிக்காக சிறுவர்கள் சிரட்டைகளுடன் அலைந்து திரிகின்றனர். விருந்தோம்பலுக்கு சிறப்புப் பெற்ற தமிழினம் இன்று ஒரு வேளை கஞ்சிக்காக சிரட்டைகளுடன் அலைந்து திரியும் பரிதாப நிலை வன்னியில் ஏற்பட்டுள்ளது. வன்னி சோமாலியாவின் நிலைக்கு வந்து விட்டது. மனித இனம் எதையெல்லாம் பார்க்கக் கூடாதோ எதையெல்லாம் அனுபவிக்கக் கூடாதோ அதையெல்லாம் தமிழினம் வன்னியில் அனுபவிக்கின்றது.
காயப்பட்டவர்களுக்கு விறைப்பு ஊசி போடமலே சிகிச்சையளிக்கப்படுகின்றது. விறைப்பூசி போடாமல் காயமடைந்தவர்களின் அவயவங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இந்த வேதனைகளை சிங்களவர்கள் என்றாவது அனுபவித்திருப்பார்களா? உங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா?
ஜனாதிபதிக்கோ அல்லது அரசில் உள்ள அமைச்சர்களுக்கோ மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லையா? ஏன் தமிழினத்தை கொடுமைப்படுத்துகிறீர்கள்? கொன்றொழிக்கிறீர்கள்?
அரசியல் கட்சிகள் என்ற பேரில் இராணுவத்தோடு சேர்ந்து ஆயுதக்குழுக்களும் தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment