சுதந்திரம்!! (சண்டையை விட்டு சனநாயகத்தை கையிலெடுக்க வேண்டும். உடன், பணநாயகத்தையும் அவர்கள் கைவிட வேண்டும்.) -கவிதை
இன்று…… இன்று…… இன்று……
இலங்கைத் தீவின், நகரங்களிலெல்லாம்
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்.
இருந்தபோதும் தமிழனே!
நீ… சுதந்திரமாய் இருக்கிறாயா?
உனக்கு சுதந்திரம் பெற்றுத் தரப்போவது யார்?
அவர்கள் அமைதியாய், மௌனமாய் இருக்கிறார்கள்…. (MORE)
தமிழனே!
சுதந்திரம் என்று சுடுகாடாக்கி விட்டவர்களும்,
சுதந்திரம் என்று சுருட்டிக் கொண்டவர்களும்,
சுதந்திரம் என்று அடிமைப்படுத்தியவர்களும்,
சுதந்திரம் என்று சுய உரிமையைக் கூடப்
பறித்துக் கொண்டவர்களும்,
இருந்தனரே… இருந்தனரே…
சுடுகாடாக்கி விட்டவர்கள்
இப்போது முடிந்து விட்டார்களாம்
ஊடகங்கள் சொல்லுகின்றன.
மற்றவர்கள்!?!?
உனக்கு சுதந்திரம் பெற்றுத் தரப்போவது யார்?
அவர்கள் அமைதியாய் இருக்கிறார்கள்,
மௌனமாய் இருக்கிறார்கள்.
உங்களது அழுகையை அவர்கள்
ஞாபகப்படுத்த வேண்டும்,
உங்களது உடம்பிலிருந்து வழிந்தோடிய
குருதிகளை அவர்கள்
நினைத்துப் பார்க்க வேண்டும்,
உங்களது வழிமாறிப் போன பாதங்களையும்,
குடிசைகளுடனே விடப்பட்டு விட்ட
கால்களையும், கைகளையும் கூட அவர்கள்
ஞாபகப்படுத்த வேண்டும். -ஆதலால்,
அவர்கள் இனிமேலும் அமைதியாய்
இருந்து பலனேதும் ஆகப்போவதில்லை.
ஆனால் அவர்கள் போர்செய்ய வேண்டியதில்லை.
எனவே அவர்கள் அமைதியை விட்டு
அரசியலைக் கையிலெடுக்க வேண்டும்.
சண்டையை விட்டு சனநாயகத்தை கையிலெடுக்க வேண்டும்.
உடன், பணநாயகத்தையும் அவர்கள் கைவிட வேண்டும்.
இல்லையேல் பதிலுக்கு தமிழனுக்கு பாழான வாழ்க்கையே
கைப்பையில்!
தமிழனே!
அறைகூவல் விடு…….
அறிவில்லாதவர்களால் அடிபட்டதும் போதும்,
புலிகளினால் புண்பட்டதும் போதும்,
பணவாதிகளிடம் பறிகொடுத்ததும் போதும்,
ஆக, அரசியலுக்கு அறைகூவல் விடு,
ஆணவ அரசியலை அம்பலத்தில் போடுவோம்,
அமைச்சர்களின் லட்சணத்தை அலசவும் செய்யுவோம்,
ஆழுவோரின் அதிகாரம் என்னவென்றும் விளாசுவோம்,
மொத்தத்தில் எங்களுக்கென்றொரு அரசியல்
அமைவிடத்தில் அழுத்தமாய் நிற்போம்.
தமிழனே!
உனக்கொரு அரசியல் இமயம் தேடிப் புறப்படு,
உடைக்கமுடியாதவாறு உறுதியாய்,
உணர்வாய் அதைச் செய்து முடி,
எமக்குள் பெருமைகள் வேண்டாம்,
பெரும் சண்டைகள் வேண்டாம்,
எமக்கென ஒரு அரசியல் இமயம் செய்வோம்,
அதுவே எம் வாழ்வில் இனி
வசந்தம் செய்யும் எனவும் கொள்வோம்..!!
தெய்வேந்திரன் -யாழ்ப்பாணம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment