"நக்கீரன்' ஆசிரியர் கோபாலுக்கு கடும் தொனியில் இலங்கைத் துணைத் தூதரிடமிருந்து கடிதம்
தமிழகத்தின் பிரபல வார இதழான "நக்கீரன்' ஆசிரியர் கோபாலுக்கு, இந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதர் கடும் தொனியில் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இரு வாரத்துக்கு ஒரு முறை வெளியாகும் "நக்கீரன்' இதழில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை மிகக் கடுமையாக விமர்சித்து இம்முறை கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரை மகிந்த ராஜபக்ஷவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதால் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் இல்லையேல் விளைவுகளைச் சந்திக்க வேண்டுமெனவும் இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கு நக்கீரன் கோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத் தலைநகரில், ஒரு நாட்டின் துணைத் தூதராக மட்டுமே உள்ள ஒருவர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இப்படி ஒரு கடிதம் எழுதலாம்? என கோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்தக் காரணம் கொண்டும் மன்னிப்புக் கேட்க முடியாதென்றும், இந்த வழக்கை சந்திக்க நக்கீரன் தயார் என்றும் கூறியுள்ள கோபால், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையை பகிரங்கப்படுத்த இது ஒரு வாய்ப்பு என்றும் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment