விடுதலைப்புலிகளின் பிரதேசத்தை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தி்ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவரும் இலங்கை இராணுவத்திடம், வெள்ளிகிழமை மாத்திரம் 2700க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
வெள்ளிகிழமை காலையில் 1600க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் விடுதலைப்புலிகளின் பிரதேசத்திலிருந்து, தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் உள்ள இராணுவத்தினரிடம் வந்தடைந்ததாகவும், வெள்ளிகிழமை பிற்பகல் மேலும் 1100 பேர் விசுவமடுவில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
அந்தப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இந்த சிவிலியன்கள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவி்த்திருக்கின்றது.
விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என எதிர்பார்த்து, அவர்களைத் தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய இடவசதிகளை வவுனியாவில் ஒழுங்கு செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் 2600க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு ஒரே நாளில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்து சேர்ந்தி்ருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் வவுனியாவுக்கு ஏற்கனவே வந்து சேர்ந்துள்ள சுமார் மூவாயிரம் பேர் நெளுக்குளம், மணிக்பாம் இடைத்தங்கல் முகாம்களிலும், மணிக்பாம் பகுதியில் அருவித்தோட்டத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள வாழ்விடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி கடந்த சில தினங்களாக அதிகரித்த எண்ணிக்கையில் இடம்பெயர்ந்த மக்கள் வரத்தொடங்கியிருப்பதாகவும், இவர்களை உடனடியாகத் தங்க வைப்பதற்காக பாடசாலைகள், பொது இடங்கள், ஆலயம் என 10 இடங்கள் வவுனியாவில் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment