மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் சிறுவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்:யுனிசெப்பின் தெற்காசிய பிராந்தியத்திற்கான இயக்குநர்
மோதல்கள் இடம்பெற்று வருகின்ற பிரதேசங்களில் கடந்த 10 தினங்களில் பெருந்தொகையான சிறுவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நலன் தொடர்பான யுனிசெப் அமைப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் டேனியல் தூல் பி.பி.சி. செய்திச் சேவைக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
"இலங்கையின் வடக்கே புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற கடும் மோதல்களின் காரணமாக அதிகமான எண்ணிக்கையில் சிறுவர்கள் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ நேரிடுகிறது.
மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பொது மக்களின் பாதுகாப்பினையும் சிறுவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை பரந்தளவில் உள்ளது. அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சில மாதங்களே ஆன குழந்தைகள் கூட இருக்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியமானது. அங்கு இருதரப்பினருக்குமிடையே இடம்பெற்றுவரும் மோதல்களில் சிறுவர்கள் சிக்குண்டுள்ளனர் என்பது தொடர்பில் யுனிசெப்பிடம் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.
பாதுகாப்பான பகுதிகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் இடங்கள் சமாதான வலயங்களாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். தங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத மோதல்கள் ஏற்படுத்தும் விளைவுகள் சிறுவர்களையே பெருமளவு பாதித்துள்ளன. மோதல் நடைபெறுகின்ற பகுதி மேலும் குறுகிச் செல்லும் நிலையில் அங்கு சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் நிலை குறித்து யுனிசெப் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அதேவேளை, சர்வதேச அமைப்புக்களினால் வெளியிடப்படும் எண்ணிக்கைகள் மிகைப்படுத்தியுள்ளன என்றும் அந்த அமைப்புக்கள் தேவையில்லாது பதற்றமடைவதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருக்கின்ற 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தம்முடனேயே இருக்க விரும்புவதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், பொதுமக்களை விடுவிக்க விடுதலைப் புலிகள் முன்வர வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து கோரி வருகின்றது. பொதுமக்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூறுகின்றார்". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment