இலங்கை தமிழர்கள் உரிமைகளைப் பெற பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்த ஏற்பாடு : தி.மு.க. செயற்குழு தீர்மானம்
இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தி.மு.க. செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார். இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு தி.மு.க. செயற்குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ஆம் திகதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 , 9 ஆகிய திகதிகளில் கூட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment