நான்கு ஓமானியர்களின் மரணத்துக்கு காரணமான இலங்கை சாரதிக்கு ஒருவருட சிறை; 10ஆயிரம் றியால் அபராதம்
பாரஊர்தி சாரதியான இலங்கையர் ஒருவருக்கு டோகா நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனையும் பத்தாயிரம் றியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் மூன்றுமாத காலத்துக்கு சாரதியின் அனுமதிப் பத்திரமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்பார ஊர்தி விபத்துக்குள்ளான சம்பவத்தில் நான்கு ஓமானியர்கள் மரணமானதை அடுத்தே டோகா நீதிமன்றம் இலங்கைச் சாரதிக்கு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 12 ஒட்டகங்கள் மரணமடைந்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்துச் சம்பவத்தில் மரணமான ஓமானியர்களின் குடும்பத்தினர் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர் தமக்கு நட்டஈடு வழங்குமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
மிக மோசமான இந்த விபத்துச் சம்பவம் கடந்த வருடம் ஏப்ரல் 14 ஆம் திகதி டோகாவில் உள்ள றவுடான் றாஸ்ட் பகுதியில் இடம்பெற்றது.
எதிர்பாராத இந்த விபத்தின் போது பத்து மீற்றர் தூரத்திற்கு அப்பால் பாரவூர்தியை நிறுத்துவதற்கு முயற்சித்த போதும் எதிர்பாராதவிதமாக வாகனத்தை நிறுத்த முடியாமல் போனதாக 33 வயதான அந்த இலங்கையர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதையை விட்டு பாரஊர்தி விலகியதில் ஓமானியர்கள் பயணித்த வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் அந்த வாகனத்தின் பின்னால் வந்து கொண்டிருந்த பல மில்லியன் றியால் பெறுமதியான 12 ஓட்டகங்கள் இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளன.
இந்த விபத்தின் போது அதே இடத்தில் மரணமானவர்களில் 18, 24 மற்றும் 19 வயதான மூன்று ஓமானியர்கள் அடங்குகின்றனர். காயமடைந்த 22 வயதான நான்காவது நபர் சில மாதங்களின் பின்னர் மரணமானார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment