பின்லேடன், முல்லாஒமர் ஆப்கானில் 20 ச.கி.மீ.பரப்புக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்கப்படை என்ன செய்யும்?
ஆப்கானிஸ்தானில் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் தலிபான் தலைவர் முல்லா ஒமர் போன்றோர் சுமார் 20 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் சிக்குண்டிருப்பது உறுதியானால் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாட்டு படைகளின் நடவடிக்கை எப்படியானதாக இருக்குமென சர்வதேச சமூகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை அரசாங்கம் ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இன்று பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் சிக்குண்டு இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
""பாதுகாப்புப் படையினருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச சமூகத்திடம் கேட்க எமக்கு கேள்வியொன்று இருக்கிறது. அதாவது விடுதலைப் புலிகள் இன்று சுமார் 20 கிலோமீற்றர் பரப்பிற்குள் சிக்குண்டிருக்கின்றனர். பிரபாகரன், பொட்டு அம்மான் போன்ற புலிகள் முக்கிய தலைவர்களும் இந்தப் பரப்பிற்குள் தான் இருக்கின்றனர்.
500,700 மீற்றர் தூரத்தில் அவர்களின் (புலிகளின்) நடமாட்டங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே, அல்ஹைடாவுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினருக்கு பின்லேடன் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் சிக்குண்டிருப்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் அந்த படையினர் எப்படி செயற்படுவார்கள்?
அதேபோல், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட அமெரிக்க நேசநாட்டுப் படையினர் கந்தகாரில் ஒளிந்திருக்கும் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா ஒமர் உள்ளிட்ட அவ்வியக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலிபான் தலைவர் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் படையினர் எப்படிச் செயற்படுவார்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.
இது முக்கிய பிரச்சினை. இலங்கைப் படையினர் பொதுமக்களுக்குப் பிரச்சினையின்றி பயங்கரவாதிகளை அழித்தொழிக்கவே முயற்சித்து வருகின்றனர். இது கஷ்டமான வேலை.
புலிகளால் பொதுமக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்மக்களை பாதிப்பின்றி மீட்பதானது முட்களில் விழுந்த சேலையை எடுப்பது போன்ற கஷ்டமான பணியாகும்.
எவ்வாறாயினும் இலங்கைப் படையினர் ஒழுக்கத்துடனும், மனிதாபிமானத்துடனும் செயற்பட்டு வருவதை தெரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.
டிட்டோ குகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment