280 கிலோ எடையுள்ள சீ-4 வெடிமருந்து மீட்பு
மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 280 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த சீ-4 ரக வெடிமருந்துகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கொழும்பில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் புலிகள் இந்த வெடிமருந்துகளையும், ஆயுதங்களையும் வீடொன்றில் மறைத்து வைத்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்று தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இதனை மீட்டெடுத்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மட்டக்குளி பிரதேசத்திலிருந்து முஸ்லிம் நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி சேர்ச் வீதியில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
சீ-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து 280 கிலோ 115 கிராம், கிரனைட் லோன்சர் குண்டுகள் – 25, 82 ரக கைக்குண்டுகள் – 30, வெடிக்க வைக்கும் கருவிகள் – 05, ரிமோட் கொண்ட்ரோல் – 2, ரி – 56 ரக துப்பாக்கிகள், ரி – 56 துப்பாக்கிகளின் உதிரிப் பாகங்கள் – 23, ரி – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகள் – 693 மற்றும் பெருந் தொகையான வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
மட்டக்குளி சேர்ச் வீதியில் உள்ள வீட்டுக்கு இப் பெருந்தொகையான வெடி மருந்து வகைகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன; இதனைப் பயன்படுத்தி எங்கு தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பன தொடர்பான விசாரணைகளை பொலிஸார் பல கோணங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட புலிகளின் முக்கியஸ்தரும், அவருடன் தொடர்புடைய சந்தேக நபரும் தொடர்ந்து விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, விசாரணைகளின் போது மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகக் கூடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வன்னியில் படை நடவடிக்கைகள் மூலம் புலிகள் சிறியதொரு பிரதேசத்திற்கு முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில் தென் பகுதியில் பாரிய தாக்குதல்களை நடத்தவோ, இனங்களுக்கு இடையில் பதற்றங்களை மேற்கொள்ளவோ புலிகள் முயற்சிக்கின்றனர்.
உரிய நேரத்தில் படையினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் கிடைக்கப் பெற்றமை மூலம் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டமையும் பெருந்தொகையான வெடிமருந்துகளை மீட்டெடுத்தமையும் பாரிய அழிவுகளிலிருந்து பாதுகாக்க முடிந்துள்ளதாக எஸ். எஸ். பி. ரஞ்சித் குணசேகர மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment