இலங்கையின் மனித அவலங்களைச் சுட்டிக்காட்டி 38 அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்குக் கடிதம்
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழப்பு, அவலங்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைஸுக்கும் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக இழுபறிபடும் அரசியல் தீர்வை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், டொம் லான்டொஸ், மனித உரிமைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழு உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொன் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:-
"இலங்கையின் வட பகுதியில் கொடிய மனிதப் பேரவலம் ஏற்பட்டிருப்பது குறித்து பெருங் கவலையுடன் இந்த மடலை நாங்கள் எழுதுகிறோம். வன்னிப் பகுதியில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்துவரும் மோதலில், 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பகுதியினர் வெளியில் இருந்து உணவு, மருந்துகள் கிடைக்காமல் வாரக் கணக்கில் அவதிப்படுகின்றனர். போரினால் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கும், உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து 2 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 7 ஆயிரம் பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
நிலைமையின் கடுமையைக் கருத்தில் கொண்டு, அப்பாவித் தமிழ் மக்கள் அனைவருக்கும் முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மனிதநேய உதவிகளை வழங்குவதில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
தேசிய ஆட்சி நிர்வாகத்தில் அர்த்தமுள்ள வகையில் தமிழர்கள் பங்கேற்பதற்கு வழிகோலும் வகையில் அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு முடிவுகட்ட வேண்டும் இவை குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைத்து நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் பரவலாக இன அடிப்படையில் வன்முறை நடக்கிறது என்பதிலும், அரசின் கொள்கைகளால் சண்டையில் ஈடுபடாத தமிழ் மக்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார்கள் என்பதிலும் ஐயம் இல்லை. அப்பாவி மக்களுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் தொடர்ந்து நீங்கள் கண்டிக்க வேண்டும்.
போரில் ஈடுபடாத அப்பாவி மக்கள் சுதந்திரமாக வெளியறி மனிதநேய உதவிகளைப் பெறுவதற்கு இரு தரப்பினரும் மனிதநேய பாதுகாப்புப் பாதைகளை ஏற்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள், உதவிப் பணியாளர்கள், செய்தியாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
மோதல் பகுதியில் இருந்து வெளியேறி வரும் தமிழ் மக்களுக்காக இலங்கை அரசு அமைத்துள்ள பாதுகாப்பு முகாம்களில் உள்ள நிலைமைகளும் எங்களுக்குப் பெரிதும் கவலை அளிக்கின்றன. வன்முறைக்கு அஞ்சி வெளியேறி வரும் அப்பாவி மக்களுக்குப் புகலிடம் அளிக்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அங்குள்ள அப்பாவி மக்களின் மனிதநேயத் தேவைகளுக்கு இந்த முகாம்கள் போதுமானவையாக இல்லை.
முட்கம்பி வேலி போடப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம்களில் முழுக் குடும்பங்களும் அடைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குச் சுதந்திரமும், சுதந்திரமான நடமாட்டமும் மறுக்கப்பட்டுள்ளது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது துணைப் படையினர் அந்த முகாம்களுக்குள் செயற்படுகின்றனர். எண்ணற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுகின்றனர், உடைமைகள் பறிக்கப்படுகின்றன. சிலர் காணாமல் போகின்றனர் என்று மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முகாம்களில் உள்ள அனைத்து அப்பாவி மக்களுக்கும், முகாம்களில் தங்கியிருப்பதற்கு அல்லது எப்போது விரும்புகிறார்களோ அப்போது வீடு திரும்புவதற்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இந்த முகாம்களின் நிர்வாகத்திலும், பாதுகாப்பிலும் உதவி செய்யும் பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஏற்க வேண்டும். இந்தப் பணியை ஏற்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பையும், இதை ஐக்கிய நாடுகள் சபை செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு இலங்கை அரசையும் நீங்கள் தூண்ட வேண்டும்.
இலங்கை இனப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்க முன்வருமாறு பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்த வேண்டும்.
இறுதியாக, தமிழர்களுக்கு முழு அரசியல் உரிமைகளும் நிர்வாகத்தில் பங்கேற்பும் அளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஐம்பதாண்டுக் கால வன்முறைக்குக் காரணமான இனப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டும் வகையில் அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கத் தலைமை முன்வர வேண்டும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாத வரையில், மோதலுக்கு நிலையான முடிவு ஏற்படாது. எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு அமெரிக்க நிதியுதவியும், அனைத்துலக மறுசீரமைப்பு நிதியுதவியும் வழங்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில், அரசில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள பங்கேற்பு அளித்தால்தான் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்பதை நிபந்தனையாக விதிப்பதற்கு பிற அனைத்துலக நன்கொடையாளர்களுடன் அமெரிக்க நிர்வாகமும் இணைந்து செயற்பட வேண்டும்."
இவ்வாறு ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிபிட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment