பிரபாகரனே அடுத்துவரும் போர்முனையில் தலைமைதாங்கி படையினருடன் மோதுவார்
அரச படையினரின் தீவிர தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து பின்வாங்கி வரும் புலிகள் இயக்கத்தினர் அனைத்துப்பிரதேசங்களையும் இழந்து விட்டநிலையில் தற்போது பிரபாகரனுக்கும் அவருடைய சக தலைவர்களுக்கும் எஞ்சியிருப்பது சுமார் எட்டு சதுர கிலோமீற்றர் பரப்புள்ள மிகக்குறுகிய பிரதேசம் மட்டுமே.
அவ்வாறே பிரபாகரனுக்கு தற்போது யுத்த முனைகளுக்கு அனுப்பிவைக்க படையணியினரும் நூற்றுக்கணக்கானவர்களே உள்ளனர். அவர்களை போர்முனைக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய திறமையான தலைவர்களும் இல்லாத நிலையில் பிரபாகரன் தனக்கு அடுத்த உயர்மட்டத்திலுள்ள பொட்டம்மான், சூசை, சொர்ணம் போன்ற தலைவர்களையே தற்போது அரச படையினருடன் மோதுவதற்கு அனுப்பிவருகிறார். இந்நிலையில் இனிவரும் போர்முனைகளுக்குப் பிரபாகரனே நேரடியாக தலைமை தாங்குவார் என பாதுகாப்பு விமர்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போது போர்முனைக்கான பிரதேசம் குறுகிவிட்ட நிலையில் அரச படையினரும் புலிகள் இயக்கத்தினரும் நேருக்கு நேர் முன்னின்று தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலை உட்பட அப்பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ள அரசபடையினர், தற்போது அப்பிரதேசங்களில் தமது பாதுகாப்பைப் பலப்படுத்திவருவதைத் தொடர்ந்து தற்போது புலிகளுக்கு எஞ்சியுள்ள குறுகிய பிரதேசத்திற்குள் படையினர் புகுந்து முன்னேறிவருகின்றனர். இதுபற்றி சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ள தகவல்களில், முல்லைத்தீவு நந்திகடல் ஏரிப் பகுதியை அண்டியுள்ள யுத்த நடவடிக்கையற்ற பாதுகாப்பு வலயமாக உள்ள புதுக்குடியிருப்பு எல்லைப்பிரதேசத்தில் மட்டும் புலிகள் இயக்கத்தினரும் பிரபாகரன் மற்றும் தலைவர்களும் பதுங்கியிருப்பதாகவும் இந்தவகையில் அப்பகுதியில் சுமார் எட்டு சதுர கிலோமீற்றர் பரப்புள்ள பகுதி மட்டுமே புலிகள் இயக்கத்துக்கு எஞ்சியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதுகாப்பு வலயப்பிரதேசத்தின் ஒரு பகுதியில் இருந்துகொண்டே புலிகள் இயக்கத்தினர் தற்போது அரச படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் எவ்வாறாயினும் பீரங்கிகள் கனரக ஆயுதங்களுடன் அரசபடையினர் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது மேற்படி புலிகள் இயக்கத்தலைவரும் ஏனைய உயர் மட்டத்தலைவர்களும் சிறிய தொகையினரான புலிகள் இயக்கத்தினரும் பதுங்கியிருக்கும் புதுக்குடியிருப்பு எல்லைப்பிரதேசத்திலிருக்கும் மிகக் குறுகிய பிரதேசத்தை இராணுவத்தின் 53 ஆம், 55 ஆம் மற்றும் 58 ஆம் படையணிகள் திட்டமிட்ட முறையில் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புலிகள் இயக்க உயர்மட்டத்தலைவர்களின் தலைமையிலேயே தற்போது புலிகள் இயக்கத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் இதுவே அவர்களுக்கு எஞ்சியிருக்கும் இறுதிப் போர்முனை என்றும் கருதப்படுவதால் புலிகள் இயக்க தரப்பிலிருந்து கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எவ்வாறாயினும் வெற்றிகரமான பதில் தாக்குதல்களை அரசபடையினர் மேற்கொண்டு அவர்களின் இறுதித் தாக்குதல்களை முறியடித்து முன்னேறுவதாகவும் யுத்தமுனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது பிரபாகரனுக்கு குறுகிய நிலப்பரப்பே எஞ்சியிருப்பதாகவும் அவர் தனக்கு அடுத்த உயர்மட்டத் தலைவர்களையே தற்போது போர் முனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அடுத்துவரும் இறுதிப் போர்முனைகளுக்கு பிரபாகரனே நேரடியாக முன்வந்து அரச படையினருடன் மோதவேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் மேலும் குறித்த புதுக்குடியிருப்பு பகுதியில் தகவல்கள் வெளியாகிவருவதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் இதுகாலவரை தொடர்ந்து முன்னேறி வரும் இராணுவ அணியினர் இனியும் முன்னேறுவதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. மேற்படி மூன்று முக்கிய இராணுவப் படையணிகளும் இணைந்து அமைத்துள்ள வியூகங்களுக்கேற்ப தற்போது பிரபாகரனின் இறுதி நிலையைத்தை நோக்கி வெவ்வேறு திசைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இராணுவத்தின் திட்டமிட்ட வியூகங்களுக்கேற்ப 58 ஆவது இராணுவப் படையணி புதுக்குடியிருப்பிலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் வடக்கே கொம்பாவில் குளம் கிழக்கு உட்பட்ட பிரதேசத்தை நோக்கியும் 53 ஆவது இராணுவப்படையணியினர் பரந்தன் முல்லைத்தீவு ஏ 35 வீதிக்குச் சமாந்தரமாக புதுக்குடியிருப்பு கிழக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் அவ்வாறே 55 ஆவது இராணுவ அணிகள் சாலை பிரதேசத்திலிருந்து புதுமாத்தளன் பிரதேசத்தினூடாக முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் இராணுவத் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.
குறுகிய பிரதேசத்துக்குள்ளிருந்து இறுதித் தாக்குதல்களை மேற்கொள்ளும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும் சக தலைவர்களும் புலிகள் இயக்கத்தினரும் அரசபடையின் மூன்று பிரதான இராணுவப்படையணிகளும் திட்டமிட்ட வியூகங்களில் முன்னேறி வரும் நிலையில் இந்த உறுதியான இராணுவ நடவடிக்கைகளை முறியடிக்கமுடியாது. பதிலுக்கு இறுதித் தாக்குதல்களிலும் இனிவரும் இறுதிப் போர் முனையிலும் புலிகள் இயக்கத்தினர் பெரும் அழிவுகளுக்கே முகம் கொடுப்பர். தற்போது சூசை, பொட்டம்மான், சொர்ணம் மற்றும் தனக்கு அடுத்துள்ள தலைவர்களை போர் முனைக்கு ஏவியிருக்கும் பிரபாகரன் அடுத்த போர் முனைகளில் அவரே முன்னின்று தலைமைதாங்கி அரச படையினருடன் நேரடியாக மோத வேண்டிய நிலையே தற்போது உருவாகிவிட்டதாகவும் இதற்கேற்ப பிரபாகரன் சில நாட்களில் இராணவத்தினருடன் நேரடி மோதலுக்கு புறப்பட்டு வந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
திவயின செய்தியும் விமர்சனமும் 15/03/2009
தினக்குரல்
0 விமர்சனங்கள்:
Post a Comment