பொது மன்னிப்புக்கான விண்ணப்பம்
குமார் ரூபசிங்க
ஜனாதிபதி அவர்கள் அண்மையில் பேசும் போது ஆயுதங்களைக் கீழே வைத்து இராணுவத்திடம் சரணடையுமாறு போராளிகளைக் கோரினார்.
போர்ப் பிரதேசங்களில் சிறைப்பட்டுள்ள அப்பாவிப் பொது மக்கள் மறு வாழ்வு பெற உதவுமாறும் புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அது போலவே நோர்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய இணைத்தலைமை நாடுகளும் வன்னி மக்களின் துன்ப துயரங்கள் இறப்புக்களை தவிர்த்துக் கொள்ள அரசிடம் சரணடையுமாறு புலிகளைக் கோரினர். வெறுப்புணர்வையும் பகைமையையும் வன்முறையையும் கைவிட்டு இலங்கை அரசு அளிக்கும் பொது மன்னிப்பை ஏற்று நாட்டின் நிலையான சமாதானம் மலர அரசியல் கட்சியாக இயங்குமாறும் புலிகளைக் கோரினர். இதே வேண்டுகோளை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் டேவிட் மல்லிபான்ட் ஆகியோரும் விடுத்தனர். மேலும் இந்தியா தொடக்கம் அவுஸ்திரேலியா வரையான நாடுகள் அனைத்தும் எல்.ரி.ரி.ஈ.யினரை சரணடையுமாறும் கோரினர். தமிழ்த் தாயகம் ஒன்றை உருவாக்க 30 ஆண்டுகள் நடத்திய போரில் தோற்றிருக்கும் நாங்கள் அரசிடம் சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று போராளிகள் பலர் தெரிவித்ததாகவும் இத்தீர்மானத்தை அரசு ஆவலுடன் வரவேற்பதாகவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொது மன்னிப்பு என்பது ஓர் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் குழுவினரை தண்டனை எதுவுமின்றி பூரணமாக மன்னிப்பளிக்கும் சட்டபூர்வ நடவடிக்கையாகும். கடந்த கால குற்றங்களுக்கு விசாரணையும் தண்டனையும் இன்றி மன்னிப்பளிப்பதே பொது மன்னிப்பாகும். பாரதூரமான அரசியல் பிரச்சினைகளை குற்றமிழைத்தவர்களுக்கு பொது மன்னிப்பளித்த வரலாற்று உதாரணங்கள் பல உள்ளன. குற்றமிழைத்த பிரஜைகளை தண்டனையின்றி பொதுவான கருத்தொருமைப்பாட்டுக்கு இணங்க வைப்பதே பொது மன்னிப்பின் நோக்கமாகும். அண்மைக்காலத்தில் சீராளியோன் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்தியாவின் மிசோ தேசிய முன்னணி கிளர்ச்சியாளருக்கும் அசே இயக்கத்தின் கிளர்ச்சியாளர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சில உதாரணங்களாகும். சட்ட நடைமுறையும் சமூக நடைமுறையும் பொது மன்னிப்பு வழங்க வழி வகுப்பது முன்னேற்றகரமான அரசியல் நடவடிக்கை எனலாம்.
இலங்கையில் முன்னர் அளிக்கப்பட்ட பொது மன்னிப்புகள்
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியின் போது அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த சேகுவேரா இயக்கத்திற்கு அரசு பொது மன்னிப்பு வழங்கியது. சரணடைந்தவர்கள் பழிவாங்கப்படாமல் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு மறு வாழ்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிளர்ச்சி நடவடிக்கைகளால் பொலிஸாரும் பொலிஸ் நிலையங்களும் பெருமளவில் தாக்கப்பட்டதால் சரணடைவோர் பொலிஸாரினால் பழிவாங்கப்படாமல் இருக்க பெரிய பதவியில் உள்ள அரச ஊழியர்களிடம் சரணடைய வாய்ப்பளிக்கப்பட்டது. இதன் மூலம் 15,000 பேர் சரணடைந்து பொது மன்னிப்பு அளிக்கப்பட்டனர். இவர்களது விடயங்களைக் கையாள சட்டத்தரணிகளும் உயர் பதவி உத்தியோகத்தர்களும் கொண்ட அமைப்பொன்று நிறுவப்பட்டது. குற்றவியல் நீதி ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டவாக்கம் முன்வைக்கப்பட்டது. பிரஜைகள் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர். பதினெட்டாயிரம் கிளர்ச்சியாளர்கள் விடுவிக்கப்பட்டு மறுவாழ்வு பெற வசதி செய்யப்பட்டது.
1988, 1989 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு எதிராக ஜே.வி.பி. யினர் நடாத்திய அரசியல் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. இதில் முப்பதினாயிரத்துக்கும் அறுபதினாயிரத்துக்கும் இடைப்பட்ட உயிர்கள் பலியாகின. கிளர்ச்சித் தலைவர் கொல்லப்பட்டார். இவ்வித கிளர்ச்சிகளின் தாக்கத்தையும் விளைவுகளையும் நம் நாடு அனுபவித்தது.
வடக்கில் இருந்து தோற்றம் பெற்ற மூன்றாவது கிளர்ச்சி முடிவுறும் கால கட்டத்தில் இலங்கை அதற்கு முகம் கொடுக்கின்றது. முப்பது ஆண்டுகள் வரை நீடித்த பயங்கரமான உள்நாட்டு யுத்தம் இது. முன்கூறப்பட்ட கிளர்ச்சிகளைப் போல் அன்றி வடக்கின் கிளர்ச்சியும் யுத்தமும் இலங்கையின் ஒரு பகுதியை பிரித்து தமிழ் ஈழம் அமைக்கும் நோக்குடன் அரசுக்கு எதிராக புலிகளால் தொடுக்கப்பட்டதே இது.
தற்போதைய நெருக்கடி
இனப்பிரச்சினை தொடர்பான போரில் புலிகளிடமிருந்து பல பிரதேசங்கள் மீட்கப்பட்டுள்ளன. புலிகள் பலமிழந்து உள்ளனர். ஒரு சிறு நிலப்பரப்பில் அவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் தொடக்கம் இரண்டு இலட்சம் வரையான பொது மக்களை புலிகள் தமக்குக் கேடயமாக பணயம் வைத்துள்ளனர். தமது உயிரைப்பாதுகாக்க அவர்கள் வெளியேற முடியாது தடுக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களிலும் போரின் விளைவாக பொது மக்கள் நூறு பேர் வரையில் கொல்லப்பட்டும் இருநூறு பேர் வரையில் காயப்படுத்தப்பட்டும் உள்ளனர். பொது மக்களை இவ்வாறு புலிகள் கேடயமாகப் பயன்படுத்துவது சர்வதேச சட்டப்படி யுத்தக் குற்றமாகும். இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்கள் அரச படைகளால் அழிக்கப்பட நேரின் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டி அவர்களை தமக்கு சாதகமானவர்களாக ஆக்கிக்கொள்ள புலிகள் எடுக்கும் முயற்சியே இது. ஆனால் இன்று நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வரவும் அங்குள்ள பொது மக்களை விடுவித்து மறுவாழ்வு அளிக்கவும் அரசும் இராணுவத்தினரும் ஆவலாயுள்ளனர். தெற்கிலே நடந்த கிளர்ச்சிகள் போல் அல்லாமல் வடக்கில் இடம்பெறும் இக்கிளர்ச்சியினால் பாதிக்கப்படுபவர்களும், பட்டவர்களும் தமிழின மக்களே. ஒரு சிறுபான்மை இனத்திற்கு தீங்கிழைக்க அரசு இணங்கவில்லை. இராணுவ நடவடிக்கை மூலம் பெற்ற பயனை அனுபவிக்கவும் யுத்தம் ஒழிந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பவும் முடியாத சூழ்நிலையை குறிப்பிட்ட பிரதேசத்தில் பொது மக்கள் தடுத்து வைக்கப்பட்டமை ஏற்படுத்தியுள்ளது.
பொது மன்னிப்புக்கான கோரிக்கை
இங்கே விவாதிக்க வேண்டியது என்னவெனில் போராளிகளும் போருக்கு உதவியாக இருந்தவர்களும் ஆயுதங்களை கீழே வைத்தல் வேண்டும். உலக மக்களின் உணர்ச்சிபூர்வமானதும் கருத்தொருமைமிக்கதுமான வேண்டுகோள் இதுவாகும். இதே வேளை இலங்கை பிரதமர் போராளிகள் சரணடைவதை பெரிதும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு தொடர்பாக அரசு இதுவரை எந்தவித உறுதிப்பாட்டையும் அளிக்கவில்லையாயினும் இணைத்தலைமை நாடுகள் பொது மன்னிப்பு அளிக்க அரசு தயாராயுள்ளதாக கூறியுள்ளனர். எனவே போராளிகளும் அவர்களின் உதவியாளர்களும் அனுதாபிகளும் பொது மன்னிப்பளிக்கப்படுவர் என்றும், அனுதாபத்துடனும் மனிதாபிமானத்துடனும் அவர்கள் நடாத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி பிரகடனம் செய்வது நல்லதென அனைவராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஏற்கனவே செய்த குற்றங்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது. பொது மன்னிப்புக்கான கால அவகாசம் வழங்கப்படுவதால் அதை வெற்றிகரமாக செயற்படுத்த வாய்ப்புண்டு இது தொடர்பான அறிவித்தலை ஒலிபெருக்கி, துண்டுப்பிரசுரங்கள், உறவினர்கள், சமயத்தலைவர்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்த முடியும். பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட பொது மக்கள் புரிந்துணர்வுடனும் உடனிருந்து வாழும் சோதர மனப்பாங்குடனும் வாழவும் நிலையான திருப்திகரமான சமாதான சூழ்நிலையில் எதிர்காலத்தை அமைக்கவும் பொது மன்னிப்பு வழங்கப்படுதல் பெரிதும் உதவும் என்று நம்பலாம்.
இந்தியாவின் அசோக மன்னன்
பொது மன்னிப்பு அளிக்கும் நடைமுறை மேற்குலக ஆட்சியாளர்களால் மட்டுமன்றி கி.மு 304 தொடக்கம் கி.மு 232 வரை ஆட்சியில் இருந்த அசோக மன்னன் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்ட சான்றுகள் உள்ளன. அசோக மன்னன் நேர்மையாகவும் மக்கள் உரிமைகளை மதிக்கும் ஆட்சி நடாத்தியதோடு ஒழுக்கமும் ஆன்மீக மேம்பாடும் பேணக்கூடிய நற் பிரஜைகளை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். கலிங்கப் போரின் பின்னர் அசோக மன்னன் தனது சாம்ராஜ்யம் முழுவதிலும் புத்த தர்மத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் பெரிதும் ஈடுபட்டார். அவரது ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த மயூரிய சாம்ராச்சிய கொள்கைகள் கைவிடப்பட்டன. சமாதானம் மூலம் சகவாழ்வு என்ற புதிய கொள்கை அறிமுகமானது. நீதித்துறை மாற்றம் செய்யப்பட்டு ஒழுக்கமான சமூக அமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கொடூர தண்டனைகள் இரத்துச் செய்யப்பட்டன. மரண தண்டனை பெற்றவர்கள் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சிறு குற்றங்கள் மன்னிக்கப்பட்டன. கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. கலிங்க நாட்டவரை தோற்கடித்த பின் அப்போரில் ஏற்பட்ட அழிவுகள் அரசனுக்கு பாரிய மனமாற்றத்தை ஏற்படுத்தியது. தாம் செய்த கொலை குற்றங்களை எண்ணியெண்ணி வருந்தியவராகக் காணப்பட்டார். அவரது அறிவுபூர்வமான மனமாற்றம் பற்றியும், குற்றங்களுக்காக வருந்தியது பற்றியும் "றொக் எடிக்ட் 13' எனும் சாசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
"இறைவனின் அன்புக்குரிய பியதாசி அரசர் முடிசூட்டி எட்டு ஆண்டுகளில் கலிங்கத்தை முற்றுகையிட்டார். அப்போரில் 150,000 பேர் நாடு கடத்தப்பட்டனர். 100,000 பேர் கொல்லப்பட்டனர். வேறு பல காரணங்களால் அநேகர் இறந்தனர். கலிங்கத்தை வெற்றி கொண்ட பின் அரசருக்கு தர்மத்தைப் பற்றிய உறுதியான விளக்கமும் விருப்பமும் ஏற்பட்டது. தர்ம நெறி கூறும் ஆணைகளை மனதார விரும்பினார். போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பற்றி எண்ணியெண்ணி ஆழ்ந்த கவலை கொண்டார். போரில் நிகழ்ந்த கொலைகளும் உயிரிழப்புக்களும் அவருக்கு ஆழ்ந்த மன வேதனையை கொடுத்தது. எனவே குற்றமிழைத்தோரைத் தண்டிக்காது இயன்றவரை மன்னிப்பளிக்க எண்ணினார். இவ் இராச்சியத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி மக்களுக்கு குற்றம் செய்யாது வாழ்க்கை நடாத்துமாறு நல்லுபதேசம் செய்தார். அடக்குமுறையின்றி நேர்மையை கடைப்பிடித்து ஆட்சி செய்ய அவர்உறுதி பூண்டார். சாசனத்தில் குறிப்பிட்டபடி தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சந்ததியினர் வன்முறையில் நாடுகளை வெற்றி கொண்டு உயிர்ச்சேதங்களை ஏற்படுத்த முனையக் கூடாது என்றும் யுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டால் பொறுமையைக் கையாள வேண்டும் என்றும் தர்மத்தின் அடிப்படையில் போர் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். குற்?றவாளிகளுக்கு மிகக் குறைந்த தண்டனை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மையை அனுபவிக்க தர்மத்திற்கும் தியாக சிந்தைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.'
பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக கோட்பாட்டு ரீதியான உதாரணங்கள்.
அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக "கெய்த் வெப்' என்பவரும் "குரூம்' என்பவரும் நான்கு வகை முறைமைகளை குறிப்பிடுகின்றனர்.
1. ஒரு தலைப்பட்சமான தீர்மானமும் அதை பிரச்சினைக்குரியவர்கள் மீது திணிப்பதும்.
2.பிரச்சினைகளைக் கலந்து பேசி முடிவெடுக்கும் இணக்கப்பாடு.
3.பிரச்சினைகளை அமுக்கி வைத்து கட்டுப்பாட்டுடன் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு.
4.பிரச்சினைகளை தொகுத்து வகுத்து மேற்கொள்ளும் இணக்கப்பாடு
என்பவையே. இவற்றை சுருக்கமாக நோக்குவோம். ஒரு தலைப்பட்சத் தீர்மானம் என்பது பலமுள்ள குழு பலவந்தமாக பலவீனக்குழுவை வெற்றி கொண்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரல். இதிலே வென்றவரின் தீர்மானம் தோற்றவரின் மேல் திணிக்கப்படுகின்றது. இரண்டாவதான கலந்து பேசி ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு என்பது போரின்றி இரு தரப்பும் கலந்துரையாடி விட்டுக்கொடுப்புகளுடன் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவதாகும். மூன்றாவது இணக்கப்பாட்டில் வன்முறை நிறுத்தப்பட்டு பிரச்சினைகளுக்கு பூரண முடிவு கிடைக்காவிடினும் ஆட்சேபனையின்றி ஒத்துப்போதல். நான்காவது அம்சம் பிரச்சினைகளை இரு சாராரும் தொகுத்து வகுத்துப் பேசி முக்கிய பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படாவிடினும் சாதாரண பிரச்சினைகளுக்கு இணக்கம் கண்டு ஏற்றுக்கொள்ளுதலாகும்.
ஒரு பிரச்சினைக்குரிய தீர்வு என்பது சம்பந்தப்பட்ட இரு குழுவும் பிரச்சினைகளை ஆய்வு செய்து கலந்துரையாடி பலாத்காரமோ நிர்ப்பந்தமோ இன்றி திருப்திகரமான இணக்கப்பாட்டை அடைவதாகும். இதுவே விரும்பத்தக்க முறையாகும். இலங்கை பிரச்சினையின் தற்போதைய நிலைப்பாடு முதல் வகையைச் சேர்ந்தது. அதாவது ஒரு தலைப்பட்சமான தீர்மானமாகும். ஒரு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் தீர்வும் சமாதானமும் வன்முறையை ஒழிக்கும். ஆனால் இராணுவ ரீதியாக எட்டப்படும் வெற்றி வேறு உருவத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்பது லிக் லைடர்ஸ் என்பவரது ஆய்வின் முடிவாகும்.
Thinakkural
0 விமர்சனங்கள்:
Post a Comment