அம்பிகா கொலை வழக்கில் கணவர் விசாகேஸ்வரசர்மாவுக்கு மரண தண்டனை
"மரண தண்டனையா? ஆயுள் தண்டனையா? தீர்மானிக்கும் பொறுப்பு ஜனாதிபதியுடையது"
அம்பிகா கொலை வழக்கில் எதிரியான சிவகடாட்சக்குருக்கள் விசாகேஸ்வரசர்மாவை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம் . இளஞ்செழியன் நேற்று திங்கட்கிழமை குற்றவாளியாகக் கண்டு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.
திருகோணமலை கோணேஸ்வராலயத்தின் பிரதம குருவாகப் பணியாற்றிய காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவி அம்பிகாவை நைலன் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டுக் கொலை செய்து பின் அவரின் சடலத்தைக் கோணேசராலயப் பிரதேசத்தில் ஆலய நிர்வாகத்தினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட விடுதி வளவினுள் புதைத்ததாக விசாகேஸ்வர சர்மா மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
""எதிரி பிராமண குலத்தைச் சேர்ந்த குருக்கள் ஆவார். அவர் நாயன்மார்களால் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வராலயத்தின் பிரதம குருக்களாக இருந்த சமயம் இக்கொலையைப் புரிந்துள்ளார். கொலை செய்த பின்னர் அம்பிகாவின் சடலத்தை கோயில் காணியில் புதைத்திருக்கிறார். புண்ணிய ஸ்தலமான கோணேஸ்வராலய பூமியில் அம்பிகாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.அம்பிகாவின் சடலத்தைப் புதைத்து விட்டு அதே கோணேஸ்வராலயத்தின் ஈஸ்வரனுக்கும் மாதுமைக்கும் இரத்தக்கறை படிந்த கரங்களால் பூஜை செய்தும் கோணேஸ்வரப் பெருமானின் அருள்பெற வந்த மக்களுக்கு இரத்தக்கறை படிந்த கரங்களால் அர்ச்சனைகளும் எதிரி செய்துள்ளார்.
மாமன்னன் இராவணனால் பூஜிக்கப்பட்ட கோணேஸ்வராலயத்தின் புனிதத்தன்மை எதிரியால் கெடுக்கப்பட்டுள்ளது. இராவணன் வெட்டு என அழைக்கப்படும் தொல்பொருள் மையத்தைத் தன்னகத்தே கொண்ட இந்து மா சமுத்திர அலைகள் ஆர்ப்பரிக்கும் மலை உச்சியில் அமைந்துள்ள கோணேஸ்வராலயத்தின் புனிதத்தன்மை இக்கொலையினால் கெடுக்கப்பட்டுள்ளது' என்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
எதிரி மிகவும் திட்டமிட்டு மனைவியான அம்பிகாவைத் தூக்கத்திலிருந்து எழும்பிய தமது ஒரு வயதுக் குழந்தையின் முன்னால் கொடூரமாகக் கொலை செய்தது,பின்னர் அம்பிகாவின் சடலத்தை புதைகுழி தோண்டிப் புதைத்தது ஆகியன எதிரியின் கொலை எண்ணம் , வன்மம், சடலத்தை ஒழிக்கும் திட்டம் ஆகியவற்றை நிரூபிக்கின்றது. வெங்கடராமன் பாலமுரளி சர்மா கொலையைக் கண்ணால் கண்ட சாட்சியாகும். எதிரி அம்பிகாவைக் கொலை செய்தபோது அவருக்கு ஒத்தாசையாக பாலமுரளிசர்மா இருந்தார். எதிரியும் மனைவி அம்பிகாவும் சண்டை பிடித்துக் கொள்வார்கள் என்றும் சம்பவதினம் இருவரும் சண்டை பிடித்தனர் என்றும் அப்போது எதிரி அம்பிகாவைக் கொல்லப் போகிறேன் என்று கூறியதாகவும் பாலமுரளி சர்மா சாட்சியத்தில் கூறியிருக்கிறார்.
""இருவரும் சண்டை பிடித்தனர். பின்னர் சத்தம் ஏதும் வரவில்லை. தூக்கத்திலிருந்த குழந்தை எழும்பி விட்டது. அறைக்குள் சென்று பார்த்தேன். அம்பிகா மல்லாக்காக மேலே பார்த்தபடி நிலத்தில் கிடந்தார். எதிரி தனது ஒற்றைக் காலால் அம்பிகாவினுடைய தோளை மிதித்தபடி அம்பிகாவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த நைலன் கயிற்றை இழுத்துக் கொண்டிருந்தார். பின்னர் குசினிக்கு வெளியில் சடலத்தைக் குழிதோண்டிப் புதைத்தார்' இவ்வாறு பாலமுரளி சர்மா சாட்சியமளித்தார். இதனை வைத்திய அறிக்கையும் ஒப்புறுதி செய்கிறது. எதிரிக்கு ஒத்தாசையாக இருந்த பாலமுரளி சர்மா திருமலை நீதிவானுக்கு வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து அவருக்கு சட்டமா அதிபர் மன்னிப்பு வழங்கியது சட்டரீதியானதாகும் என்று மன்று கருதுகிறது.
பாலமுரளி சர்மா 14.4.1997 அன்று தானாகப் பொலிஸுக்குச் சென்று இக்கொலைச் சம்பவம் பற்றி முறையிட்டார். அவ்வாறு பாலமுரளி சர்மா முறையிட்டிருக்காவிட்டால் இக்கொலை வெளிச்சத்துக்கே வந்திருக்காது. மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும் என்ற தூண்டுதலே பாலமுரளி சர்மா தானாகச் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்ததாக மன்று கருதுகிறது. பாலமுரளி சர்மாவின் முறைப்பாடு காலதாமதமாகச் செய்யப்பட்டது என்றாலும் அதனை நியாயமான காலதாமதம் என்றே மன்று தீர்ப்பளிக்கிறது. பாலமுரளி சர்மாவின் சாட்சியத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் வழக்கின் ஆணி வேரைத் தாக்கவில்லை. அவை சாதாரண முரண்பாடுகளே. அம்முரண்பாடுகள் வழக்குத் தொடருநர் தரப்பிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாலமுரளி சர்மாவின் சாட்சியத்தில் காணப்படும் முரண்பாடுகள் எவ்வகையில் எதிரியின் குற்றச் செயலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென்பதை எதிரித் தரப்பு விபரிக்கத் தவறிவிட்டது. எனவே, முரண்பாடுகள் எதிரி மீதான குற்றச்சாட்டை முறியடிப்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லையென்றே மன்று கருதுகிறது. பாலமுரளி சர்மாவின் சாட்சியத்தை எதிரி தரப்பு குறுக்கு விசாரணை மூலம் முறியடிக்கத் தவறிவிட்டது. எதிரி அம்பிகாவை கொலை செய்து சடலத்தை புதைத்ததை கண்ணால் கண்ட சாட்சியே பாலமுரளி சர்மா ஆவார். எனவே, பாலமுரளி சர்மாவின் சாட்சியத்தை வலிதான ஒன்றாகவே மன்று கருதுகிறது. சிவபாதசுந்தரம் குகநாத சர்மா என்பவர் அளித்த சாட்சியமும் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரமானதாகும் என்று மன்று கருதுகிறது. அம்பிகா கொலை செய்யப்பட்டதன் பின்னரே குகநாத சர்மா, கோணேஸ்வராலயத்தில் எதிரிக்கு உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.
""ஆலய வளவில் குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர்த்தாங்கி ஒன்றைக் கட்டவேண்டும் என்று ஆலயத் தலைவரைக் கேட்கப் போகிறேன் என்று எதிரியிடம் கூறினேன். அதற்கு எதிரி அவ்விடத்தில் கட்ட வேண்டாம். மான் ஒன்று இறந்து அதன் சடலத்தை புதைத்துள்ளேன்' என்று அவர் கூறியதாகக் குகநாத சர்மா தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார். எந்த இடத்தில் தண்ணீர்த் தாங்கி கட்ட வேண்டாம் என்று எதிரி கூறினாரோ அந்த இடத்தைத் தோண்டியே பொலிஸார் கொலை செய்யப்பட்ட அம்பிகாவின் சடலத்தை மீட்டனர். அந்த இடத்தில் இறந்த மானின் சடலம் புதைக்கப்பட்டதாக எதிரி கூறியமை, அந்த இடத்தில் அம்பிகாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டமை ஆகியன அம்பிகாவின் சடலத்தைத் தான் மானின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக எதிரி மறை பொருளாகக் கூறியுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது. குகநாத சர்மாவின் சாட்சியம் பாலமுரளி சர்மாவின் சாட்சியத்தை ஒப்புறுதி செய்கிறது. புதைகுழியிலிருந்து மண்டைஓடு, எலும்புகள், தலைமயிர், அம்பிகா அணிந்திருந்த நூலில் கோர்க்கப்பட்ட தாலி, கழுத்தை இறுக்கிய நைலன் கயிறு ஆகிய சான்றுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எதிரிதான் அம்பிகாவைக் கொலை செய்தார் என்று நியாயமான அளவு சந்தேகத்துக்கு அப்பால் வழக்குத் தொடருநரால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எதிரியைக் கொலைக் குற்றவாளியாகக் காண்கிறேன் ' என்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு ஏதாவது கூற இருக்கிறதா என்று மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியைக் கேட்டார். சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று எதிரி பதிலளித்தார். எதிரிக்கு மரணதண்டனை விதிக்கும் பிரகடனத்தை நீதிபதி சரியாக 10.55 க்கு வாசித்தார். அப்போது மின்சாரம், காற்றாடி நிறுத்தப்பட்டு, அனைவரும் மன்றில் எழுந்து நின்றனர்.
ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் ஒருநாளில் உயிர்பிரியும் வரை தூக்கிலிடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதற்கு இணங்க மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்கு தாம் பரிந்துரை செய்வதாகவும் குறிப்பிட்டார். ""மரணதண்டனையா? ஆயுள்தண்டனையா? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கின்றேன்' என்று நீதிபதி இளஞ்செழியன் நிறைவாகத் தெரிவித்தார். அரச வழக்கறிஞர் செல்வி சுகந்தி கந்தசாமி வழக்கை நெறிப்படுத்தினார். சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா எதிரிக்காக ஆஜரானார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment