’எம்.வி.அகத்’ கப்பலுக்கு நேர்ந்த கதி போல் ஆகுமா ’வணங்கா மண்’
இந்திய முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின் பின் இந்திய அரசின் ராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் தஞ்சம் கோரம் முடியாத நிலையில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில் சுவிஸ் நாட்டிலிருந்த கிட்டுவும் சக புலி உறுப்பினர்கள் சிலரும் ஐரோப்பிய நாடொன்றின் துறைமுகத்தில் இருந்து `எம்.வி.அகத்’ என்ற கப்பலில் இலங்கை நோக்கி பயணமானார்கள்.
சர்வதேச கடலில் ’எம்.வி.அகத்’ என்ற கப்பலில் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கிட்டு இன்னும் சில புலி உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை இந்திய உளவுத் துறை மத்திய அரசுக்கு அறிவித்தது. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி இந்திய கடற்படையின் இரண்டு யுத்தக் கப்பல்கள் கிட்டுவின் கப்பலை சர்வதேசக் கடலில் வைத்து சுற்றி வளைத்தன. இத்தகவலை கிட்டு உடனடியாக தொலைத் தொடர்பு மூலம் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, கிட்டுவின் கப்பல் இந்திய கடற்படையினால் சுற்றி வளைக்கப்பட்ட செய்தியை புலிகளின் தலைமை ஊடகங்களுக்கு கசியவிட்டது. ஆனால், இந்தியா அரசு செய்தி எதனையும் உடனடியாக வெளியிடவில்லை.
இதற்கிடையில் இந்திய கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கிட்டு தனது பயணம் தொடர்பாகவும், சர்வதேசக் கடற்பரப்பினூடாக பயணம் மேற்கொள்வோரை கைது செய்யும் உரிமை இந்திய நாட்டுக்கு இல்லையெனவும் இந்திய உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைத் தொடர்புகளில் தெரிவித்த போதும் இந்திய கடற்படை கிட்டுவின் கப்பலை சென்னை துறைமுகத்துக்கு நேரே இந்திய கடல் எல்லைக்குள் கொண்டுவந்தது. கிட்டுவும் ஒன்பது புலி உறுப்பினர்களும் சரணடையுமாறு கேட்கப்பட்டனர். சரணடைய மறுத்தால் கப்பல் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவீர்கள் எனவும் எதிர்த்தால் கப்பல் மூழ்கடிக்கப்படும் எனவும் இந்திய கடற்படையால் எச்சரிகை விடுக்கப்பட்டது. இதையடுத்து கப்பல் மாலுமிகள் அனைவரும் கடலில் குதித்து விட்டனர். தனது கப்பலுக்குள் பாரிய குண்டுகளை வெடிக்க வைத்து கப்பலைத் தீ மூட்டிய கிட்டு சக புலி உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் தற்கொலை செய்து கொண்டார்.
அண்மைய இந்திய இராணுவ வட்டார செய்திகளின் படி, இந்திய கடற்படையின் `கிதோர் சென்னா` என்ற யுத்தக் கப்பல் தென் பிராந்தியத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, வான்படை மற்றும் கடலோர காவல்படையினர் கூட்டிணைந்த வகையில் இந்திய பிராந்திய கடல் பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்னிந்திய கடல் பகுதிக்கு `கிதோர் சென்னா` என்ற யுத்தக் கப்பலின் தலைவர் லோட்சன் தலைமையில் கடற்படையினர் கடல் வழி கண்காணிப்புக்காக வந்தடைந்துள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.
’எம்.வி.அகத்’ என்ற கப்பலுக்கு நிகழ்ந்த கதிதான் அடுத்த மாதம் ஏப்பிரலில் புலிகள் ஆதரவு அமைப்புகளால் பிரித்தானியாவில் இருந்து இலங்கை நோக்கி அனுப்படவுள்ள ‘வணங்கா மண்’ கப்பலுக்கும் ஏற்படும்மென இராணுவத்துறை ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment