திருகோணமலை சிறுமி கொலை வழக்கின் மற்றுமொரு சந்தேக நபர் மரணம்
திருகோணமலையில் கடந்த 11 ஆம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட, ஆறுவயதுச் சிறுமி, ரெஜி ஜூட் வர்ஷா, பின்னர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக திருகோணமலை போலிஸாரால் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் இன்று மேலும் ஒருவர் இறந்துள்ளார்.
சந்தேக நபர்களில் ஒருவரான, வரதராஜா ஜனார்த்தனன் என்ற இவர், போலிஸாரால் விசாரணைக்கெனக் கொண்டுசெல்லப்பட்ட போது, சயனைட் அருந்தி உயிரிழந்துள்ளார் என்று போலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கனவே, கைது செய்யப்பட்ட, மற்றொருவரான, ரினவுன்ஸன் சனிக்கிழமையன்று விசாரணைக்கென கொண்டுசெல்லப்பட்டபோது, தப்பியோட முனைந்ததாகவும் அப்போது போலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்காகி இறந்ததாகவும் போலிஸார் தெரிவித்தனர்.
இன்று இறந்த ஜனார்த்தனன், ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, திருகோணமலையின் பத்தாங்குறிச்சிப் பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து உப்புவெளி பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேக நபர் தெரிவிக்க, அங்கு கொண்டு சென்றபோதே அவர் சயனைட் அருந்தி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த சந்தேக நபர்களில் சிலர் ஆளும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று போலிஸார் நேற்று தெரிவித்திருந்தனர். இது குறித்தும், இந்த விசாரணையில் போலிஸ் காவலில் இருந்த இருவர் இறந்திருப்பது குறித்தும், கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.






0 விமர்சனங்கள்:
Post a Comment