புலிகள் இயக்கம் இருக்கும் வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கவே மாட்டாது : விநாயகமூர்த்தி முரளிதரன்
புலிகள் இயக்கம் இருக்கும் வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கவே மாட்டாது என தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் அலைவரிசையில் நேற்றிரவு ஒலிபரப்பான ஏழாவது நாள் எனும் வாராந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டால் அல்லது ஓரங்கட்டப்பட்டால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து அரசாங்கம் கருத்திற்கொள்ளாது என்பது தவறான கருத்தாகும்.
புலிகள் இயக்கம் இருந்தால் மட்டும் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வராது. ஏனெனில் அது உலகிலுள்ள மிகவும் கொடிய, பயங்கரவாத அமைப்பாக மாறியுள்ளது. இந்த இயக்கம் காரணமாக தமிழர்களை உலகம் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றது. இதற்கு நாம் இனியும் இடமளிக்க முடியாது. எனவே இச்சந்தர்ப்பத்தில் புலிகளை ஓரங்கட்ட வேண்டிய பொறுப்பு அனைத்து மக்களுக்கும் உண்டு. ஏனெனில் கடந்த காலங்களில் நாம் பல நல்ல வாய்ப்புக்களை இழந்தமைக்கும் பல்வேறு அழிவுகள் ஏற்பட்டமைக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் காரணமாக இருந்திருக்கிறார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எதிர்காலத்தில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம்தான் தற்போது நடைமுறையிலுள்ள மாகாண சபை முறை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமுலாக்கியுள்ளது. எனவே காலப்போக்கில் அது தொடர்பான வளங்கள் மற்றும் அதிகாரங்கள் பற்றி பேசித் தீர்த்துக்கொள்ளலாம். அதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இன்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு வீணாக சத்தம் போட்டு காலத்தைக் கடத்தி பொழுதைப் போக்குகின்றார்களே தவிர அவர்களால் எமக்கு எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இன்று நாம் ஆளும் தரப்பில் இருப்பதால் எமது தேவைகள் மற்றும் உரிமைகள் பற்றி அடிக்கடி ஜனாதிபதியுடன் கதைத்து வருகிறோம். அதற்கு ஜனாதிபதி சிறந்த முறையில் செவி சாய்த்து அவற்றை ஏற்றுக்கொண்டும் வருகிறார். ஆகவே எமது கருத்துக்களை சிறந்த முறையில் இராஜதந்திர ரீதியில் முன்வைத்து அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
நிச்சயமாக மாகாண சபை முறையூடாக சிறந்த தீர்வுகளை எட்டுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இதற்கு மேலாக நாம் தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசியல் யாப்பின்படி வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மட்டுமன்றி எல்லா மாகாண சபைகளையும் உள்ளடக்கியதாகத்தான் அந்தத் தீர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
தொலைபேசி மூலமான இந்த நேரடி நிகழ்ச்சியில் முஸ்லிம் மற்றும் தமிழ் நேயர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கில் தாங்கள் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும் என்ற பிரபாகரனின் ஏகாதிபத்திய கொள்கை காரணமாகவே அங்கிருந்து முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் விரட்டப்பட்டனர். கடந்த காலங்களில் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர்கள் கோரினால் அதனைச் செய்யத் தயாராகவே இருக்கிறேன்.
நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கிலும் சமாதானம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்தும் நோக்கிலுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டேன் என்றும் அமைச்சர் முரளிதரன் மேலும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment