வரிசையாக விடைபெற்ற சீனியர்கள்... அரசியல் அரங்கில் தேயும் வைகோ
வைகோ தவறு என்ன?
எம்.ஜி.ஆர். விலகியபோதுகூட சந்திக் காத அளவு அதிர்வுகளை வைகோ வில(க்)கியபோது தி.மு.க. சந்தித்தது! அந்தக் கட்டத்தில் கருணாநிதி தன்னுடைய தலைவர் பதவியையே ராஜினாமா செய்வதாக அறிவிக்க, கட்சி திணறியது. தி.மு.க-வின் நிரந்தரத் தூண்கள் என வர்ணிக்கப்பட்ட ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் வைகோ பின்னால் அணிவகுத்தார்கள். பொன்.முத்துராமலிங்கம், மதுராந்தகம் ஆறுமுகம், மா.மீனாட்சிசுந்தரம், செஞ்சி ராமச்சந்திரன், டி.ஏ.கே.லக்குமணன், திருச்சி செல்வராஜ், மு.கண்ணப்பன், கணேசமூர்த்தி, ரத்தினராஜ் என அந்தத் தூண்கள் அத்தனை பேருமே தி.மு.க-வை 'துரோகக் கட்சி' என்றார்கள்!
1993-ல் தொடங்கி... பதினாறு வயதில் வந்து நிற்கும் ம.தி.மு.க. இப்போது எப்படி யிருக்கிறது? 'ஜெயலலிதாவே என் முதல் எதிரி, கலை ஞரின் வாரிசு அரசியலுக்கு எதிராக என் பயணம் தொடங்குகிறது' என்ற கோஷத்தை முன்வைத்த வைகோவுடன் தோள்கொடுத்து நின்ற அந்தத் 'தூண்'கள் இன்று எங்கே?
இன்று...வைகோவுக்குப் பின்னால் போன தி.மு.க-வின் ஒன்பது மாவட்டச் செயலாளர் களில்... இன்று கணேசமூர்த்தி (ஈரோடு) ரத்தினராஜ் (கன்னியாகுமரி) மட்டுமே உடன் இருக்கிறார்கள்! மற்ற மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி... எல்.கணேசன், கரூர் கே.சி.பழனிச்சாமி, போடி முத்து மனோகரன், மதுரையின் முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன், இன்று மத்திய அமைச்சராக இருக்கும் வேங்கடபதி, மாநில அமைச் சராக இருக்கும் மைதீன்கான், தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தற்போது பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருக்கும் சபாபதி மோகன், விஜயா தாயன்பன் என பலரும் வைகோவிடமிருந்து பிரிந்து தி.மு.க-விலேயே மறுபடி ஐக்கியமாகிவிட்டார்கள் இப்போது! பிரிந்து வந்தவர்களில் யாருமே வைகோவின் நேர்மை மீதோ, உழைப்பின் மீதோ, ஒழுக்கத்தின் மீதோ எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. அவர்கள் சொன்னதன் சாராம்சமெல்லாம் அவர் எடுத்த அரசியல் முடிவுகள் மற்றும் தங்களுக்குக் காட்டிய மரியாதை பற்றியே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறது!
எங்கே தவறு?
அரசியல் விமர்சகர்கள் ம.தி.மு.க. 'கிராஃப்' பற்றி இப்படி வர்ணிக்கிறார்கள் -
'தி.மு.க-விலிருந்து வெளியேறி தனி இயக்கம் கண்ட எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியனையும், மதுரை முத்துவையும் கட்சியின் மிக முக்கிய அந்தஸ்தில் வைத்து அழகு பார்த்தார். ஆனால், இவர்கள் இருவரும்தான் தன்னைக் கழகத்தில் இருந்து நீக்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்கள் என்பதை எம்.ஜி.ஆர். மறந்துவிடவில்லை! எதிர்த்தவர்களே பிறகு தன்னை நாடிவந்தாலும் கடைசிவரை தன்னை விட்டு அவர்கள் பிரியாமல் பார்த்துக்கொண்ட எம்.ஜி.ஆரின் பாங்கு மகத்தானது. அவருக்கு வார்த்தை ஜாலம் தெரியாது. ஆனால், கொடுத்த வாக்கைக் காக்கும் தன்மை உண்டு! தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு, சாத்தியமில்லாத வாக்குறுதிகளை தன் தோழர்களுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்ததே இல்லை! அதனால், வேண்டாத எதிர்பார்ப்புகள் வளர்ந்து, கடைசியில் தோழர்கள் அவரைவிட்டுப் பிரிவது என்ற நிலை வரவில்லை!
'தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று ம.தி.மு.க-தான் என்ற ஒரு நிலையையும், அடுத்த முதல்வர் வேட்பாளர் வைகோதான் என்ற இமேஜையும் கஷ்டப் பட்டு வளர்த்து முடித்த வைகோ... திடீரென்று 98-ம் வருடம் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தபோது, அவருக்கு மிக நெருக்கமான ம.தி.மு.க. தலைவர்களே எந்தளவுக்கு ஆடிப்போனார்கள் என்பது வைகோவுக்கே நன்றாகத் தெரியும். அந்தக் கூட்டணி முடிவால், தேர்தலில் ஸீட் கிடைக்காத ஏமாற்றமும் பல தலைவர்களைப் படபடப்பாக்கியது. பொன்.முத்துராமலிங்கம், மதுராந்தகம் ஆறுமுகம் போன்றோர்பிரிந்தது அப்படித்தான்.
தி.மு.க., வைகோவை தள்ளிவைத்து அவர் மீது கொலைப்பழியை சுமத்தியபோது, 'அண்ணன் கண்ணப் பனின் ஆலம்பாளையத்தில் ஆறுதல் தேடுவேன்' என்று கண்ணப்பனை உயர்த்திப் பிடித்தார். பிறகு என்ன நடந்ததோ, தெரியவில்லை... கட்சிக்குள்ளேயே சிலர் சொன்ன விஷயங்களை நம்பி... அதே கண்ணப்பனை சந்தேகக் கண்ணோடு சமீபகாலமாகப் பார்க்க ஆரம் பித்தார். 'அண்ணன் கண்ணப்பனின் உடல் மட்டும்தான் இங்கே இருக்கிறது. உள்ளமெல்லாம் கலைஞரோடுதான் இருக்கிறது' என்று வைகோ நினைத்தது ஓரளவு உண்மை தான். என்றாலும், அதுகுறித்து வெளிப்படையாகக் கண்ணப்பனிடமே அவர் பேசித் தீர்த்திருக்கலாம். அதைச் செய்யவில்லை!
இதுவே எம்.ஜி.ஆராக இருந்திருந்தால், திடீரென்று ஒரு மதிய உணவுக்கு மனத்தாங்கல் தலைவரை அழைத்து, பளிச்சென்று தோளில் கைபோட்டு பேசிப் பிணக்கைத் தீர்த்திருப்பார்! இப்படித்தான் ம.தி.மு.க-வுக்கென்று எம்.பி-க்கள் பளிச்சென்று கிடைத்த தருணத்தில், சீனியரான எல்.கணேசனிடம்... 'அண்ணே, நீங்கள் மத்திய அமைச் சராக வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான காலம் கனிந்துவிட்டது' என்று தழுதழுத்தார் வைகோ. மறுநாளோ, ம.தி.மு.க-வின் பொதுக்குழுவில், 'மத்திய அமைச் சரவையில் ம.தி.மு.க. பங்கெடுக்காது' என்று முடிவெடுக்கப்பட்டது. இது வைகோவின் உணர்ச்சிவசப் படலுக்கு நல்ல உதாரணம்.
வைகோ அடிக்கடி சொல்லும் ஒரு வாசகம், 'என்னை நம்பி வந்தால் பதவி சுகங்கள் கிடைக்காது. பட்டு மெத்தை கிடைக்காது. தியாகங்கள் செய்யக் காத்திருக்கும், தியாக வேங்கைகள் மட்டும் என் பின்னே அணிவகுப்பீர்! என் பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது!' என்பது. கட்சி தொடங்கிய வேகத்தில் இருந்தபோது அவர் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால், நேற்று முளைத்த கட்சிகூட 'அடுத்த முதல்வர் நாங்கள்தான்' என்று சொல்கிறபோது... மத்தியில் கிடைக்கிற மந்திரி பதவியை வேண்டாம் என்று உதறுகிற வைகோவின் போக்கு, புரியாத புதிராக அல்லவா மற்றவர்களுக்குத் தெரியும்?
'அரசியல் என்பது பதவி சார்ந்தது... இது துறவு வாழ்க்கை அல்ல' என்று காட்டுகிற பளீர் உதாரணமாக பா.ம.க. நாளுக்கு நாள் வளர்ந்திருக்கிறதே... அங்கிருந்தாவது வைகோ தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா?'' என்று கேட்கும் இவர்கள்... குறிப்பான ஓர் ஒப்பீட்டையும் முன்வைக்கிறார்கள்-
'ம.தி.மு.க-வைவிட பா.ம.க. ஒன்றும் வயதில் பெரிதாக மூத்த கட்சி அல்ல... வைகோவைவிட டாக்டர் ராமதாஸ் ஒன்றும் அரசியல் அனுபவத்தில் சீனியரும் அல்ல! ஆனால், தன் கட்சியினரை அவர் வைத்திருக்கும் கடுமையான கட்டுப்பாடு, ம.தி.மு.க-வுக்குள் ஏன் வரவில்லை? தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் காடுவெட்டி குருவைக் கைது செய்த அதே தி.மு.க-வைத்தான் குரு விஷயத்தில் தானாக இறங்கிவர வைத்தார் டாக்டர் ராமதாஸ். அப்படிப்பட்ட கிடுக்கிப்பிடி தந்திரங்களைக் கையாளாமல், கூட்டணியின் பெரிய கட்சிக்கு ஒரேயடியாக கட்டுப்பட்டுக் கிடப்பதும் ம.தி.மு.க-வின் சீனியர் தலைவர்களை சோர்வடைய வைக்கிறது...'' என்பதே இந்த ஒப்பீடு!
'ம.தி.மு.க-வின் தலைமையகமான தாயகம், கட்சி கரைந்து கொண்டி ருப்பதைப் பார்த்துக்கொண்டு மௌன சாட்சியாக இருக்கிறதா?'' என்ற கேள்விக்கும் விடை சொல்கிறார்கள் தாயக விசுவாசிகள் - 'தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளில் இல்லாத ஒரு அமைப்பு எங்கள் கட்சியில். எங்கள் பொதுச் செயலாளருடன் தி.மு.க-வைவிட்டு வெளி யேறிய பலரும் அவரைவிட அரசியலில் சீனியர்கள். பதவியால் தான் தலைமையில் இருந்தாலும், பழக்கத்தால் அவர்களுக்கெல்லாம் அளவு கடந்த மரியாதை அளித்து வந்தார் வைகோ. அதையே வைகோவின் பலவீனம் என்று அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, பலவிஷயங்களில் கட்சிக்குத் தலைவலிகளை உருவாக்கினார்கள். தி.மு.க-விலிருந்து வெளியேறி வந்தார் களே தவிர, ம.தி.மு.க-வுக்காக அவர்கள் சின்ன துரும்பையாவது கிள்ளிப் போட்டார்களா? தங்கள் சொந்த செல்வாக்கை வைத்துக் கட்சிக்கு என்ன நிதி திரட்டிக் கொடுத்தார்கள் அவர்கள்? எல்லோரும் ஆளுக்கொரு பதவி எதிர்பார்த்தார்கள் என்பது மட்டும்தான் உண்மை!
98-ல் எங்களிடமிருந்து பிரிந்து சென்ற மதுராந்தகத்தார் தி.மு.க-வில் இணைந்த பின்னர், அங்கே அவருக்கு நேர்ந்த அவமானங்களைப் பட்டியல் போட்டுக் கலைஞருக்கே ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் நகல் எங்களிடம் இருக்கிறது. பிறகு தி.மு.க-விலிருந்து ஆறுமுகம் அ.தி.மு.க-வுக்குப் போனார். கடைசியில் அவர் மரணத்தைத் தழுவியபோது தி.மு.க-விலிருந்து யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆனால், எங்கள் கட்சித் தொண்டர்கள், மதுராந்தகத்தார் இறுதி ஊர்வலத்தில் அணிவகுத்தார்கள். அதுதான் எங்கள் பொதுச் செயலாளர் கற்றுக்கொடுத்த பண்பாடு!
தி.மு.க-வில் கலைஞரின் சீனியர், பேராசிரியர் மட்டும்தான். அவருக்கு மட்டும் கலைஞர் நீக்குபோக்காக நடந்தால் போதும். எங்கள் கட்சியில் ஏராளமான 'பேராசிரியர்'கள் இருந் தார்கள். இனி வைகோ கூடுதல் கம்பீரத்தோடு செயல்படுவார்!'' என்கிறார்கள்.
(நன்றி விகடன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment