உண்மையான அதிகாரப் பகிர்வே தேவையானது: மேனன்
இலங்கையில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாயின் தமிழ் சமூகத்துக்கு உண்மையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என இந்தியா மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கரர் மேனன் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் பெறுப்பேற்ற பின்னர் முதற்தடவையாக அமெரிக்கா சென்றிருந்த மேனன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து இலங்கையின் நிலைவரம் குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.
இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்கள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அக்கறையாகவிருக்கும் இந்தியா, பிராந்திய நலன் குறித்தும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“மீள்புனரமைப்பை முன்னெடுப்பதுடன், இலங்கையில் அதிகாரங்களைப் பகிர்வதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், தமது எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலையிலேயே வாழ்கிறோம் என மக்கள் கருதவேண்டும் எனவும் இந்தியா கருதுகிறது” என சிவ் சங்கர் மேனன் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கூறினார்.
மோதல்கள் காரணமாக இடப்பெயர்வுகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிட்ட சிவ் சங்கர் மேனன், இலங்கை இனப்பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவும் தம்மைப் போன்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.
“இந்த விடயத்தில் எம்மால் எவ்வாறு உதவ முடியும் என்பதில் அமெரிக்காவுடன் தொடர்பில் இருப்போம்” என்றார் மேனன்.
இதேவேளை, இந்திய அரசாங்கம் வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக வைத்தியர்கள் குழுவொன்றையும், மருந்துப் பொருள்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்த மருத்துவக் குழுவினர் இன்று வியாழக்கிழமை தமது பணிகளை ஆரம்பித்துள்ளன.
அதேநேரம், வன்னியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு அமெரிக்காவின் ஆசிய பசுபிக் கட்டளைத் தலைமையத்தின் தலைமையில் மீட்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்வது பற்றி அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.
எனினும், இலங்கை விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீட்டின் பின்னணியில் சதித்திட்டம் இருக்கலாமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment