பாதுகாப்பு வலயத்தில் 3 தற்கொலைக்குண்டுத் தாக்குதல்;17 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தகவல்
பாதுகாப்பு வலயத்தினுள் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின்போது இன்று காலை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்ததாகவும் அவர்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
முல்லைத்தீவு பாதுகாப்பு வலயப்பகுதியில் இதுவரை 3 தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவிக்கின்றது. இத்தற்கொலை குண்டு தாக்குதல்களில் 100 பொதுமக்கள் வரைகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக பொதுமக்களே இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.
பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் பகுதியில் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த பாரிய மண் அரணைத் தகர்த்து பாதுகாப்பான வழியொன்றை இன்று அதிகாலை இராணுவத்தினர் திறந்ததையடுத்து, அந்தப் பகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இராணுவத்தி்னரிடம் தஞ்சமடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் முதலில் தெரிவித்திருந்தது.
இராணுவத்தினரிடம் தஞ்சமடைவதற்காக வந்த பொதுமக்கள் மத்தியிலேயே விடுதலைப்புலிகள் தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் புதுமாத்தளன் வைத்தியசாலையை அண்டிய பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment