யுத்தநிறுத்தத்தை நம்பியார் வலியுறுத்தினாரா?
ஐ.நா. செயலாளர்நாயகம் பான் கீ மூனின் விசேட தூதுவராக கொழும்புக்கு வருகைதந்த விஜே நம்பியார் யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு கொழும்பிடம் கோரிக்கை விடுத்தாரா? என்ற கேள்விக்கு கனரக ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தவேண்டாம் என்று ஐ.நா. கேட்டிருப்பதாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வின் இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
விஜே நம்பியார் கொழும்பில் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கைக்கு விசேட தூதுவராக நம்பியாரை அனுப்புவது தொடர்பாக அதாவது அவர் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம் குறித்து வியாழக்கிழமை ஐ.நா. விலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் பிரத்தியேகமாக செய்தி வெளியிட்டிருந்தது.இந்த விஜயம் தொடர்பாக நம்பியாரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியபோது தான் கருத்து தெரிவிக்க முடியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நம்பியார் திரும்பி வந்தவுடன் தமது கொழும்பு விஜயம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புசபைக்குத் தெரிவிப்பாரா என்று ஏப்ரல் மாதத்திற்கான சபையின் தலைவரான மெக்ஸிக்கோ தூதுவர் கிளாடி கெல்லரிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. பான் கீ மூனுக்கும் பாதுகாப்புசபை உறுப்பினர்களுக்கும் இடையில் அடுத்த வாரம் மதியவேளை சந்திப்பு இடம்பெறுமெனவும் அதில் நம்பியார் அறிக்கை சமர்ப்பிக்க இடமளிக்கப்படுமெனவும் கிளாடி கெல்லர் கூறியுள்ளார்.
அதேவேளை நம்பியாரிடமிருந்து நேரடியாக விடயங்களை அறிந்து கொள்ள சபை உறுப்பினர்கள் விரும்புவதாக சபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இன்னர் சிற்றி பிரஸ் கூறியிருக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment