'வணங்கா மண்' கப்பலுக்கு பிரித்தானியா அனுமதி மறுப்பு?
இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக இலங்கை அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.
அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
‘அக்ட் நௌவ்’ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் வடபகுதியில் பாதித்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கென 2000 மெற்றிக்தொன் நிவாரணப் பொருள்களுடன் 'வணங்கா மண்' நிவாரணக் கப்பல் பிரித்தானியாவிலிருந்து இலங்;கையை நோக்கிப் புறப்படவிருந்தது.
எனினும், பிரித்தானிய கடற்பரப்பிலிருந்து குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்குப் புறப்படுவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசாங்கம் வழங்கவில்லையென, இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த காலங்களிலும் இவ்வாறான நிவாரணக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தமக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய இலங்கை அரசாங்கம், குறிப்பிட்ட கப்பலைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.
அதேநேரம், 'வணங்கா மண்' நிவாரணக் கப்பல் இன்னமும் பிரித்தானிய கடற்கரையிலிருந்து புறப்படவில்லையென அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கும் அர்ஜுன் எதிர்வீரசிங்கம் கூறியுள்ளார்.
மார்ச் 31ஆம் திகதி இந்தக் கப்பல் புறப்படவிருந்தபோதும், இலங்கை அரசாங்கத்திடமிருந்து அனுமதி கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிவாரணக் கப்பலை முற்றாகச் சோதனையிட்டு பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் பட்சத்தில் குறிப்பிட்ட கப்பலை இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைய அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் கூறியுள்ளார்.
எனினும், முன்னனுமதி பெறாமல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை கடற்படை எச்சரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment