சுவிஸ் செல்ல முயன்ற இலங்கை காதல்ஜோடி சென்னை விமான நிலையத்தில் கைது
சென்னையிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சட்ட விரோதமாக சுவிட்ஸர்லாந்துக்குச் செல்ல முயன்ற இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த காதல் ஜோடியொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து கனடா, ரொரண்டோ செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த பகீரதன் (வயது 29), காயத்திரி (வயது 25) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையில் பகீரதனும் காயத்திரியும் உறவினர்கள். இருவரும் காதலித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இருவரும் சுவிட்ஸர்லாந்து பிரஜாவுரிமை அட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது. அந்த அட்டைகளைப் பரிசோதித்தபோது அவை போலி என்று தெரிந்தது. இதையடுத்து கியூ பிரிவுப் பொலிஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் விடுதலைப் புலிகள் இல்லை என்று தெரிந்தது. இருவரும் இலங்கையில் உயர்தரம் வரை படித்துள்ளனர். அங்கு வேலை கிடைக்காததால் ஜெனீவா சென்று வேலை செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதற்காக கொழும்பில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் திகதி சென்னை வந்து வடபழனியில் தங்கியுள்ளனர். இங்கு ஒரு முகவரிடம் ரூபா ஐந்து லட்சம் பணம் கொடுத்து சுவிட்ஸர்லாந்து குடியுரிமைக்கான போலி அட்டை பெற்றுள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் புழல் சிறையில் பொலிஸார் அடைத்தனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment