புலிகளின் யுத்த நிறுத்தக் கோரிக்கை `தமிழ்` மக்களின் நலனுக்காகவல்ல
புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருப்பது பற்றி வெவ்வேறு விமர்சனங்கள் வெளி வருவதற்கு இடமுண்டு. கடந்த சில வாரங்களாக யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம். சமகால யதார்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் விமர்சிக்க மாட்டார்கள்.
யுத்த நிறுத்தம் என்பது மோதல்களைத் தவிர்ப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. மோதல் தவிர்ப்புக்கு அப்பாலேயே யுத்த நிறுத்தத்தின் பிரதான நோக்கம் உள்ளது. ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரசியல் பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காண முற்பட்டதன் விளைவாக உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த பின், பல தடவைகள் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்திருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண் பதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதே ஒவ்வொரு தடவையும் யுத்தநிறுத்தத்தின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை இடம்பெறவி ல்லை.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த நிறுத்தங்களில் அரசாங்கமும் புலிகளுமே சம்பந்தப் பட்டுள்ளனர். இவ்விரு தரப்பும் இணைந்து அரசியல் தீர்வுப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்க வேண்டும். அரசாங்கம் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்த போதிலும் புலிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதேனுமொரு காரணம் கூறி அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வந்திருக்கின்றனர்.
அதேநேரம், ஒவ்வொரு யுத்தநிறுத்த காலத்திலும் ஆயுத ரீதியாகவும் ஆளணி ரீதியாகவும் தங்களைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே அவர்கள் எடுத்தனர். ஒவ்வொரு கட்டத்தி லும் புலிகள் யுத்தநிறுத்தக் கோரிக்கையை முன்வைத்ததும் யுத்தநிறுத்தத்துக்குச் சம்ம தித்ததும் யுத்தத்துக்கான தயாரிப்புக்காகவே என்பதைக் கடந்த கால அனுபவம் உண ர்த்துகின்றது. இந்தப் பின்னணியிலேயே புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தைப் பார்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் அப்போதைய அரசாங்கங்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கும் இப்போதைய இராணுவ நடவடிக்கைக்குமிடையே அடிப்படையான வேறுபாடொன்று உள்ளது. புலிகளை அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்க வைப்பதும் முன்னைய இராணுவ நட வடிக்கைகளின் நோக்கமாக இருந்தது.
புலிகள் அரசியல் தீர்வுக்கு ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என்பதும் தனிநாடு அமைக்கும் இலக்குடனேயே செயற்படுகின்றார்கள் என்பதும் நடைமுறையில் நிரூபணமாகிய நிலையில், அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் இலங்கையின் இறைமையைப் பேணுவதையும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலுள்ள தடையை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டே தற்போதைய இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப் படுகின்றது.
எனவே, யுத்தநிறுத்தத்தின் மூலம் புலிகள் தங்களை மீண்டும் பலப்படுத்துவதற்கான அவகாசத்தை வழங்குவதற்கு அரசாங்கம் சம்மதிக்குமென ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
யுத்த சூன்யப் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வெளியேறிச் செல்வதற்கு வசதியாகவே யுத்தநிறுத்தத்தைக் கோருவதாகக் கூறுவது நம்பகமானதல்ல. மக்கள் வெளியேறுவதற்கு யுத்த நிறுத்தம் அவசியமல்ல.
புலிகள் பலவந்தமாகத் தடுத்து வைத்திருப்பதாலேயே இம்மக்கள் வெளியேற முடியாதிருக்கின்றனர். அவர்கள் சுதந்திரமாகச் செயற் படுவதற்குப் புலிகள் அனுமதித்தால் சிவிலியன்கள் எல்லோரும் ஒரே நாளில் வெளியேறிவிடுவார்கள். புலிகளைக் காப்பாற்றுவதே யுத்த நிறுத்தக் கோரிக்கையின் உண்மையான நோக்கம்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment