பாதுகாப்பு வலயம் பாதுகாப்பானதல்ல: டேவிட் மிலிபான்ட்
இலங்கையின் வடக்கில் மோதல்கள் நடந்துவரும் பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயம் உண்மையில் பாதுகாப்பான இடமில்லையென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் கூறினார்.
எனினும், பாதுகாப்பு வலயப் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவதில்லையென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார் எனவும், ஆனாலும், பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதுஎவ்வாறு இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மதிக்கவேண்டியது கடமையென மிலிபான்ட் பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எமது விஜயத்தின் மூலம் போர்நிறுத்தமொன்று ஏற்படுத்தப்படாது. இந்தத் தொடர்ச்சியான மோதல்களால் கடந்த வாரங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி ஆபத்துக்குள் சென்றிருப்பது பற்றியே நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்” என்றார் அவர்.
அத்துடன், இலங்கையில் தற்பொழுது காணப்படும் பிரச்சினையானது பிராந்திய ரீதியாகவும், அதற்கும் அப்பாலும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே ஐக்கிய நாடுக்ள பாதுகாப்புச் சபையில் இதனைக் கொண்டுவர பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முயற்சித்ததாக மிலிபான்ட் குறிப்பிட்டார்.
மோதலில் வெற்றி, சமாதானத்தில் தோல்வி
விடுதலைப் புலிகள் சரணடையவேண்டுமா என பி.பி.சி. கேட்டகேள்விக்குப் பதிலளித்த மிலிபான்ட், “சர்வதேச சமூகத்தின் உதவிகள் தேவைப்படும், ஜனநாயக நாடான இலங்கையில் வன்முறையானது அரசியல் தீர்வுக்கான பாதையாக அமையாது என்பதால் வன்முறைகளைக் கைவிடுமாறு நாம் அவர்களை வலியுறுத்துகிறோம். ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளும், தேவைகளும் அங்கீகரிக்கப்படும் சூழ்நிலையைக் காண்பதற்கே சர்வதேச சமூகம் விரும்புகிறது. தற்பொழுது தொடரும் மோதல்களில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றாலும், அது சமாதானத்தை இழந்துவிடும்” எனக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment