"என்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது": எரிக் சொல்ஹெய்ம்
நோர்வேயில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எனத் தெரிவித்த நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இருந்தபோதிலும் தன்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
நோர்வேயில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், நோர்வே அரசாங்கத்துக்கு அவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே நோர்வேயின் அமைச்சரும் 2002 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்கு அனுசரணையாளராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்தார்.
எரிக் சொல்ஹெய்மின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள பிரான்சில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பிரபல எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், "எரிக் சொல்ஹெய்மைப் பொறுத்தவரையில் அவருக்கு அற்புதங்களை நிகழ்த்த முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர் இந்த விடயத்தில் தவறுகளைச் செய்வதையாவது தவிர்த்துக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
"இராஜதந்திரம் என்பது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் கலையாக இருக்கலாம். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் என்பது சாத்தியமற்றவைகளைச் சாத்தியமாக்குவது" எனவும் குறிப்பிட்ட அரவிந்தன், "இதனைப் புரிந்துகொள்ள நோர்வே தவறிவிட்டது" எனவும் சுட்டிக்காட்னார்.
"சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் நோர்வே இழைத்த தவறின் காரணமாக, அனைத்துலக சமாதான முயற்சிகள் என்ற கருத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுவிட்டது" எனவும் குறிப்பிட்ட கி.பி.அரவிந்தன், "இந்தத் தவறைத் திருத்திக்கொள்வதற்கு அவர்ளுக்கு இப்போது கூட நேரம் இருக்கின்றது" எனவும் சுட்டிக்காட்டினார்.
"நோர்வேயைப் பொறுத்த வரையில் அது வல்லரசுகளின் புவியியல் சார்ந்த அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு கையாளாகச் செயற்படாமல், உண்மையிலேயே சுயாதீனமாகச் செயற்பட்டு அனைத்துலக மனித நாகரீகம் என்ற அடிப்படையில் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டால் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஏற்கனவே இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்" எனவும் அரவிந்தன் குறிப்பிட்டார்.
சமாதான முன்னெடுப்புக்களில் தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக்கொண்ட நோர்வே, இணைத் தலைமை நாடுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததனை எவ்வகையிலும் நியாயப்படுத்திக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அரவிந்தன், அதிலும் குறிப்பாக வன்னியில் உள்ள மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு கால கட்டத்திலேயே இந்தக் கருத்தை எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
Puthinam






0 விமர்சனங்கள்:
Post a Comment