யுத்த வலயத்திலிருந்து பொது மக்களை விடுவிக்க தந்திரோபாயமான நடவடிக்கைகள் ஆரம்பம்
முல்லைத்தீவில் யுத்த வலயத்தில் சிக்கியிருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களை விடுவிக்க தந்திரோபாயமான நடவடிக்கைகளை நேற்று திங்கட் கிழமை ஆரம்பித்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் 17 சதுர கிலோமீற்றர் குறுகிய நிலப்பரப்புக்குள் விடு தலைப் புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொது மக்களை விடுவிக்க, தீர்க்கமான, தந்திரோபாய நடவடிக்கைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
நவீன காலத்தில் மரபு ரீதியான இராணுவப் படையின் பாரிய அளவிலான மனிதாபிமான தலையீடு என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாகவும் பொது மக்களை விடுவித்துவிட்டு சரண் அடையுமாறும் புலிகளின் தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதி வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது இராணுவத்தினரை புலிகளால் எதிர்கொள்ள முடியாத நிலையில் மோதல் சூன்யப் பகுதியில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக்கொண்டு ஒளிந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு எமது தீரமிக்க படையினரிடம் சரணடைவதுதான் புலிகளின் தலைமைத்துவத்திற்கு உள்ள ஒரே தேர்வு என்றும் மீதமாக இருக்கும் உறுப்பினர்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டுமானால் இதுவே ஒரே தேர்வு என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொது மக்களை சுதந்திரமாக வெளியேற புலிகள் இடமளித்துவிட்டு படையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment