உயிருடன் இருந்தும் இறந்தவராக பல ஆண்டுகளாக வாழும் நிலை
அரசாங்க அலுவலகங்களில் ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக் கும் என்பதற்கு முன்னுதாரணமாக மலேசியாவைச் சேர்ந்த வி.மாரிமுத்து என்பவரின் சோகக்கதை விளங்குவதாக அந்நாட்டுப் பத்திரிகைகள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
மாரிமுத்து (46 வயது) என்ற மேற்படி நபர் 3 வருடங்களுக்கு முன் தனது அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ளச் சென்றபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் மாநிலத்திலுள்ள தேசிய ஆட்பதிவு திணைக்கள அலுவலகத்தில் உள்ள பதிவுகளில் அவர் இறந்து விட்டதாக பதிவாகியிருந்தது.
இந்நிலையில் மேற்படி திணைக்கள அலுவலகத்துக்கு கடந்த 3 வருட காலமாக அலைந்தும் அப்பதிவு மாற்றப்படாததால் மனம் சோர்ந்து போன மாரிமுத்து, தனது பிரச்சினைக்கு தீர்வு காண ஊடகங்களின் உதவியை நாடியுள்ளார்.
1999 ஆம் ஆண்டிலிருந்து 6 வருட காலமாக தான் சிறை வாழ்க்கை வாழ்ந்தாகவும் இந்நிலையில் அடையாள அட்டையை நவீன முறையில் புதுப்பித்துக் கொள்ள அணுகியபோதே, இந்த அதிர்ச்சித் தகவல் தனக்கு கிடைத்ததாகவும் மாரிமுத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆட்பதிவு திணைக்கள அதிகாரி ஒருவர் விபரிக்கையில், மாரிமுத்துவின் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் உள்ள விபரங்களின் குளறுபடிகள் காரணமாகவே மேற்படி மாற்றத்தை மேற்கொள்வது காலதாமதமாகிறது என்று கூறினார். சட்டத்தின் பிரகாரம் தொடர்ந்து இறந்தவராக கருதப்படும் மாரிமுத்து, தனக்கென ஒரு வங்கிக் கணக்கைக் கூட ஆரம்பிக்க முடியாத வகையில் சட்டத் தடையை எதிர்கொண்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment