முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து நேற்றிரவு புல்மோட்டைக்கு 516 பேர் வருகை
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் ஐ.சி.ஆர்.சி. வழித்துணையுடன் நேற்று 516 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
புல்மோட்டையிலிருந்து நேற்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்ட மேற்படி கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மாலை 4.30 மணிக்கு திரும்பி இரவு 7.40 மணியளவில் புல்மோட்டையை வந்தடைந்தது.
இதில் அழைத்துவரப்பட்ட கடும் காயங்களுக்குள்ளான 164 பேருக்கு புல்மோட்டையிலுள்ள இந்திய கள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இவர்களுடன் நோயாளர்களும் பராமரிப்பாளர்கள் உறவினர்களென 352 பேர் வந்துள்ளனர்.
இதேவேளை, கப்பலில் அழைத்துவரப்பட்ட நோயாளர்கள் காயப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் 10 அம்புலன்ஸ் மூலம் பதவியா வைத்தியசாலைக்கு உடனடியாக நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தக் கப்பலில் அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் ஆணா பெண்ணாவென இனங்காண முடியாதவாறு துணியால் மூடப்பட்டிருந்து.
காயமடைந்தவர்கள், நோயாளர்கள் தவிர ஏனையோர் சம்பத்புவர இடைத்தங்கல் முகாமுக்கு இரவு 10 மணிக்கு பஸ்களில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் புல்மோட்டைக்கும் முல்லைத்தீவு பகுதிக்கும் இடையிலான இக்கப்பல் சேவையுடன் 21 தடவை வழித்துணை வழங்கியுள்ளனர்.
இச்சேவையுடன் 21 ஆவது தடவையில் 10,088 பேர் புல்மோட்டைக்கு கப்பலில் அழைத்துவரப்பட்டனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை முள்ளிவாய்க்கால் பகுதிக்குப் புறப்பட்ட கிறீன் ஓசன் கப்பல் அப்பகுதியில் இடம்பெற்ற உக்கிரமான மோதல் காரணமாக இடைவழியில் திரும்பியது.
இந்நிலையில் இக்கப்பல் நேற்றுக் காலை புல்மோட்டையிலிருந்து புறப்பட்டு முள்ளிவாய்க்காலுக்குச் சென்று 510 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புல்மோட்டைக்குத் திரும்பியது.
இறுதியாக மேலுமொரு தடவையே புல்மோட்டைக்கும் முள்ளிவாய்க்காலுக்குமிடையில் நோயாளர்கள் கப்பல் சேவை இடம்பெறுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழு வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
நேற்று மாலை புல்மோட்டைக்கு விஜயம் செய்த யுனிசெப் பிரதிநிதிகள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து புல்மோட்டையிலுள்ள பாடசாலைகளில் தங்கியுள்ளவர்களைப் பார்வையிட்டனர்.
அத்துடன் நாளை திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளதால் அங்குள்ளவர்களை வேறிடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை இன்று உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment