தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுத்திட்டம்: அனைத்துலகம் வலியுறுத்து

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டுமென இந்தியா, நோர்வே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு அதன் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்பதற்காக இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான சுதந்திரத்தை வழங்காமல் தவிர்க்கமுடியாது என நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், 2002ஆம் ஆண்டு சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராகச் செயற்பட்டவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
“இலங்கை அரசாங்கம் மோதலில் வெற்றிபெற்றிருந்தாலும், சமாதானத்திலிருந்து வெகுதூரத்திலேயே உள்ளது” என எரிக் சொல்ஹெய்ம் ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
தமிழ் மக்களும், சிங்களவர்களும் இணைந்து வாழக்கூடிய வடக்கு, கிழக்கிற்கு சுயாட்சி ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் உண்மையாகச் செயற்படவேண்டுமென சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்காவிட்டால், அதன் விளைவு புதிய பரிமாணங்களில் வெளியாகும்” என அவர் கூறியுள்ளார்.
“இதனை நாம் இலங்கை அரசாங்கத்துக்குத் தெளிவாகக் கூறுகிறோம். இலங்கை நிலைமையத் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது சர்வதேச சமூகத்துக்கு முக்கியமானது. இல்லாவிட்டால் வேறுவிதத்தில் பிரச்சினை மீண்டும் தொடங்கும்” என சொல்ஹெய்ம் எச்சரித்தார்.
அதேநேரம், இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முரண்பாட்டுக்கான மூலகாரணி கண்டறியப்படவேண்டும்
இதேவேளை, இலங்கையில் தொடர்ந்த இனப்பிரச்சினைக்கான மூலகாரண கண்டறியப்பட்டு அதற்கான தீர்வொன்று முன்வைக்கப்படவேண்டுமென அயல்நாடான இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி கூறியுள்ளார்.
“இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக அதிகாரப் பகிர்வின் மூலம் அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தின் ஊடாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை ஜனாதிபதியுடன் உரையாடியபோது தமிழர்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட முஹர்ஜி, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் சமூகத்துக்குப் பல்வேறு நடவடிக்கைகள் ஊடாகத் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.
இதேநேரம், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் விரைவில் இலங்கை வரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமாதானத்தைக் கட்டியெழுப்ப அரிய சந்தர்ப்பம்
இது இவ்விதமிருக்க விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு வரலாற்று ரீதியாக அரியசந்தர்ப்பமொன்று கிடைத்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் கூறியுள்ளார்.
“இதற்கு முன்னர் இலங்கையில் தோன்றியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
“விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டுமோ இல்லையோ என்பதில் எமது கவனம் இருக்கவில்லை. உயிர்கள் கொடுத்த விலையிலும், எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதிலுமே இருந்தது” என்றார் மிலிபான்ட்.
எவ்வளவு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற எண்ணிக்கை தமக்குச் சரியாகத் தெரியாவிட்டாலும், ஆயிரக்கணக்கான மக்கள் தமது இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு முகாம்களிலுள்ள மக்களுக்கான மனிதநேய நடவடிக்கைகள் உரியமுறையில் முன்னெடுக்கப்படவேண்டும் என்றார்.
அதேநேரம், உண்மையாகப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருந்தால் இலங்கை அரசாங்கம் மோதல்களால் ஏற்பட்ட அழிவுகளைக் மீளக்கட்டியெழுப்பும் அதேநேரம், ஜனநாயகம், சகிப்புத்தன்மை, ஒற்றுமை போன்றவற்றை சட்டத்தின் ஊடாக வளர்த்தெடுக்க வேண்டுமெனவும் அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இறுதிச் சமாதானத் தீர்வானது சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அனைத்து சமூகத்தினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்திக் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன், இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இடம்பெயர்ந்திருக்கும் மக்களைப் பார்வையிடவிருப்பதாகக் கூறியுள்ளார்.
“இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தமை முக்கியமானவிடயம். எனினும், பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்” என பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.
“மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் சரியமுறையில் நடத்தப்படவேண்டும். நான் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்குச் செல்லவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment