சோனியாவிடம் கெஞ்சுகிறார் திருமாவளவன்
ஈழத்தில் உள்ள எங்கள் தமிழ் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள். போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுங்கள் என்று சோனியா காந்திக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சோனியா,கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ;
கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தி.மு.க. அரசின் 3 ஆண்டுகால சாதனைகளே அதற்கு முதன்மையான காரணம். மத்திய, மாநில அரசுகளின் நல்லுறவு அடிப்படையில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளும் ஒரு காரணம்.
அந்நிய ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. சீன அரசு நம் நாட்டு இறையாண்மையில் தலையிட முயல்கிறது. சீன அரசின் தலையீட்டால் நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அருணாசல பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலம் ஆகும். ஆனால், அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் விசா இல்லாமல் சீனாவுக்கு வரலாம் என்று சீன அரசு சொல்கிறது. சீன வரைபடத்தில் கூட அருணாசல பிரதேசத்தைச் சேர்த்துள்ளனர்.
பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா ஆகிய நாடுகளின் தலையீட்டில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. மதச்சார்பற்ற அரசை நிறுவ தொலைநோக்குப் பார்வையுடன் முதலமைச்சர் கருணாநிதி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆகவே, இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற பா.ஜ.க.வால் முடியாது.
ஐ.நா.வில் இலங்கைப் பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது என்று தடுத்தது சீன அரசு. சோனியா காந்தி அம்மையாரிடம் நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் வாழும் எங்கள் தமிழ் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள். அங்குள்ள போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுங்கள். அது உங்களால் தான் முடியும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment