அரச மருத்துவர் பேசுவதாகக் கூறி பிரபாகரனின் மகன் கூட தொலைபேசி மூலம் தவறான தகவல்களை வழங்கலாம்
* அரசு தெரிவிப்பு; மருத்துவர் சண்முகராஜாவை தமக்கு தெரியாதெனவும் அறிவிப்பு
வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் ஏற்பட்ட பொதுமக்கள் இழப்புக் குறித்து தகவல் வெளியிட்ட அரச மருத்துவர் வி.சண்முகராஜா என்பவரை தங்களுக்கு தெரியாதென தெரிவித்திருக்கும் அரசாங்கம், தொலைபேசி மூலமாகப் பேசும் போது குரலை இனங்காண முடியாதென்பதால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கூட இந்த தகவல்களை கூறியிருக்கலாமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த கருத்துகள் வெளியிடப்பட்டன.
முள்ளிவாய்க்கால் பகுதி மீது சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை இடம்பெற்ற கடும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களில் 106 சிறுவர்கள் உட்பட 378 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,122 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருப்பதாக முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை வைத்தியரான சண்முகராஜா கூறியதாக பி.பி.சி. உள்ளிட்ட செய்திச் சேவைகள் வெளியிட்ட செய்திகள் தொடர்பாகவே அரச தரப்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சண்முகராஜா என்ற மருத்துவரை தங்களுக்குத் தெரியாதென சுகாதார அமைச்சின் தேசிய இணைப்பாளரான ஈசர கொட்டேகொட தெரிவித்து விட்டார்.
வைத்தியர்களான சத்தியமூர்த்தி மற்றும் வரதராஜா என்பவர்களுடனேயே சுகாதார அமைச்சுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேநேரம், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது பற்றி தெரிவிக்கையில்;
இந்த செய்திக்கு பரந்த பிரசாரம் வழங்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது வன்னியில் தாக்குதல்களால் உயிரிழந்த பொதுமக்களென்றும் ஷெல் தாக்குதல்கள் நடப்பது போன்றும் நெருக்கடி கொடுக்க செயற்படும் தமிழ் அமைப்புகள் பல புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன. எனினும் இந்தப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த திகதியும் குறிப்பிடாமையே இங்கு கேள்விக்குரியது.
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வரும் தகவல்களை நம்ப முடியாது. அரச கட்டுப்பாட்டு பக்கமாகவிருந்தே ஷெல்கள் வந்ததாக டாக்டர் சண்முகராஜா கூறியிருக்கிறார். எனினும் நீண்ட தூரம் சென்று தாக்கும் (கனரக) ஆயுத பாவனைகளையும் விமானத் தாக்குதல்களையும் நிறுத்துவதென அரசாங்கம் அண்மையில் முடிவு செய்திருந்தது. அதுதான் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு.
எனினும் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து சுதந்திரமான கதவல்கள் எதுவும் வரமுடியாது. அத்துடன் தொலைபேசி அழைப்பைஏற்படுத்தி பி.பி.சி., சி.என்.என்., அல்ஜசீரா போன்ற செய்திச் சேவைகளுக்கு தகவல் வழங்கும் வசதி வன்னியிலில்லை.
எனவே புலிகளின் துப்பாக்கி முனையில்கூட டாக்டர் சண்முகராஜா இதனைக் கூறியிருக்கலாம். நியூயோர்க்கில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் பற்றி (உத்தியோகப்பற்றற்ற வகையில்) பேசப்படும் நிலையில் கவனத்தை ஏற்படுத்துவதற்காகக் கூட இது இருந்திருக்கலாம்.
அத்துடன் டாக்டர் சண்முகராஜா தான் இந்தத் தகவலை தெரிவித்தார் என்பது குறித்து பி.பி.சி. கூட உறுதியாகக் கூறவிட முடியாது. தொலைபேசி மூலம் எவரும் பேசிவிட்டு அரச மருத்துவர் என்று கூறிவிட முடியும். பிரபாகரனின் மகன் கூட இதைக் கூறமுடியும்.
அது மட்டுமல்லாது மக்கள் கொல்லப்பட்டால் அரச மருத்துவர் ஒருவர் அது பற்றி முதலில் சுகாதார அமைச்சிடமே கூற வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே என்றார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment