20 நாடுகளின் உதவியுடன் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்: ரோஹித்த போகல்லாகம
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு 20 நாடுகளிடமிருந்து புலனாய்வு மற்றும் இராணுவ உதவிகள் கிடைத்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம பாராளுமன்றத்தில் கூறினார்.
“எமது அரசாங்கப் படைகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் பெரிதும் உதவியாகவிருந்தன. இராஜதந்திர நடவடிக்கைகளாலேயே உடனடியாகத் தேவைப்பட்ட பொருள்கள் ஆகாயமார்க்கமாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன” என அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் குறித்து நட்பு நாடுகளிலிடமிருந்து புலனாய்வுத் தகவல்கள் உடனக்குடன் கிடைத்துவந்ததால் அதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் இலகுவாக இருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனினும், தமக்கு உதவிய நாடுகள் 20 நாடுகளின் பெயர் விபரங்கள் எதனைவும் அவர் வெளியிடவில்லை.
பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது என்பது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்குக் கிடைத்த ஆதரவின் மூலம் தெரியவந்தது என்றார் ரோகித்த போகல்லாகம.
30 வருடங்களாக நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த முதல்த்தர நாடென்ற பெருமை இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், ஐக்கிய நாடுகளின் செயலாளர் இலங்கை வந்தபோது, அவருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டையும் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment