கூட்டமைப்பினரே தமிழர்களின் முதலாவது எதிரிகள்: ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் முதலாவது மோசமான எதிரிகள் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
தேர்தலுக்குக்கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணிவைத்துக்கொள்ளத் தாம் விரும்பவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்புக் கூறவேண்டுமெனத் தெரிவித்த ஆனந்தசங்கரி, பொதுமக்களை விடுவிக்குமாறு கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தால் இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்காது எனக் கூறினார்.
“முகாம்களிலுள்ள ஒவ்வொரு பத்துப் பேரிலும் ஒருவர் உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் விதவைகளாகியிருப்பதுடன், சிலர் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டிருப்பதுடன், காணாமல்போயுமுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களின் அனைத்து பெறுமதிவாய்ந்த உடமைகளும் இழக்கப்பட்டுவிட்டன” என ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
8,000 பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு விடுதலைப் புலிகளால் ஆயுதப் பயிற்சியளிக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மௌனம் சாதித்ததாகக் குறிப்பிட்ட அவர், கூட்டமைப்பினரின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் எங்கேயெனக் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சுயநல அரசியல் லாபங்களைக்கைவிட்டு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தேவையேற்பட்டிருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூகநலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment