தமிழ்வாணியும் தகவல்களும்
“ புலிகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. இதனை சிங்களவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு புலிகள் இயக்கம் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. எமது சிரேஷ்டத் தலைவர் சிங்கள இனத்திற்கு அதன் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார் ” - வி.பாலகுமாரன்.
என சிங்கள மக்கள் தங்களைத் திருத்திக் கொள்வதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகக் கூறிய புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் எனக் கூறப்பட்ட வி.பாலகுமாரன் இன்று பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இருக்கிறார்.
இவர் தனது சிரேஷ்ட தலைவர் எனக் கூறிய பிரபாகரன் இன்று உயிருடன் இல்லை என்ற போதிலும் கொழும்பு உட்பட புலிகளின் ஊடக வலைப் பின்னலின் ஆவிகள் பிரபாகரன் மீண்டும் உயிர்த்தெழும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாலகுமாரன் இவ்வாறான கதைகளை ஒரு முறை இருமுறை அல்ல. பல முறைகள் கூறியிருக்கிறார். சுமார் 9 மாதங்களுக்கு முன்பதாக அவர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சிங்கள மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு முன்னெப்போதுமில்லாத வகையில் பயங்கரமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அச்சுறுத்தியிருந்தார்.
இவ்வாறான கதைகளை வெளியிட்டு வந்த கொழும்பு தமிழ் ஊடகங்கள் இன்று வாயடைத்துப் போய் பிரமை பிடித்துக் கிடக்கின்றன. பாலகுமார் மட்டுமன்றி புலிகளது அரசியல்; மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் முக்கியஸ்தர்கள் எனக் கூறப்பட்ட பலரும் இன்று பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
இதனால், இவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த கொழும்பு வர்த்தகர்கள் சிலரும் அரசசார்பற்ற நிறுவனத்தினர் சிலரும் பெரும் குழப்பங்களுக்கு ஆளாகி இருப்பதையும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
புலிகளின் தோல்வியைத் தாங்கிக் கொள்ளாதவர்களில் ஒருவர் போரட் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதியான ரஸ்வெயின் வெயிட் என்ற பெண்மணியாவார். இவர் தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டாம் என்றும் கட்டளை பிறப்பித்துள்ளார்.
நோர்வே நாட்டுப் பெண்மணியான இவரது வீஸா அனுமதிப் பத்திரத்தை உடன் இரத்துச் செய்த அரசாங்கம், இந்த நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன் மீண்டும் இலங்கைக்கு இவர் வருவதைத் தடை செய்தும் விட்டது.
இதனிடையே கடந்த வாரம் ஸ்வீடன் நாட்டில் ஸ்டொக்ஹோம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடி திருடப்பட்டிருந்தது. புலிகளின் அனுதாபிகளால் இச்செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. திருட்டுப் போன தேசியக் கொடிக்கு பதிலாக இன்னுமொரு தேசியக் கொடியை ஏற்ற அலுவலகப் பணியாளர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி அங்குள்ள இன்னுமொரு பெண் அதிகாரியால் தடுக்கப்பட்டதாகவும் அந்தப் பணியாளரை அப்பெண் ஏசியதாகவும் தெரிய வந்திருந்தது.
இதனிடையே ஸ்வீடனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வந்துள்ள முன்னாள் பெண் பணியாளர் ஒருவரது செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்தவாரம் பேசப்பட்டது. இவர் ஸ்வீடன் பத்திரிகைகளுக்கு வழங்கியுள்ள அறிக்கையில், இலங்கை கொலைகாரர்களது பூமி எனக் கூறியிருந்தாராம்.
இப்பெண்மணி இப்போது அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். இவர் ஸ்வீடன் நாட்டு புலி முகவரான சந்திரகுமார் செபஸ்தியன் பிள்ளை என்பவருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவை எல்லாம் ஆச்சரியமான விடயங்கள் அல்ல. ஏனென்றால் இலங்கையின் வெளிநாட்டுப் பணிகளில் இவ்வாறான மோசமானப் போக்குகளைக் காண முடியும் என இச்சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் வெளிநாட்டு சேவையுடன் தொடர்புடைய ஒருசில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் பலமடைந்தது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான தகவல்களுக்கு மத்தியில் புலிகளுக்கு எதிரான இறுதி வார யுத்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு ஐரோப்பிய சங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் கடந்த வாரம் செய்திகள் வெளியாகி இருந்தன.
கடந்த மே மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் அவசர அமர்வொன்றை நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதன் நோக்கம் புலித்தலைமையைக் காப்பாற்றுவதாகும். எனினும் அதற்கொரு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
ஐரோப்பிய சங்கமானது பாரியளவில் பணத்தைச் செலவிட்டு, உலகின் அனைத்து நாடுகளினதும் தலைநகரங்களுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி அந்த அமர்விற்கான ஆதரவைப் பெற முயற்சித்துள்ளது. எனினும் அப்போது 16 நாடுகளில் 4 நாடுகள் ஐரோப்பிய சங்கத்திற்கு உதவ முன்வராமை காரணமாக அம்முயற்சி நிறைவேறவில்லை.
இதனிடையே மே மாதம் 30ம் திகதி பிரித்தானிய டைம்ஸ் பத்திரிகையும் பிரான்ஸின் லாமொண்டே பத்திரிகையும் இலங்கையில் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தியை மே மாதம் 31ம் திகதி பிரித்தானிய செனல் - 4 எனும் தொலைக்காட்சியும் எடுத்துக் கூறியது.
யுத்த சூனியப் பகுதியிலுள்ள நிவாரணப் பணியாளர் ஒருவர் மேற்படி செய்தியை உறுதிப்படுத்துவதாகவும் இப்பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.
யார் இந்த நிவாரணப் பணியாளர்? எனப் பார்க்கும் போது அந்த விடயமும் கடந்த வாரம் அம்பலத்திற்கு வந்திருந்தது.
யுத்த சூனியப் பகுதியில் புலிகளது முகாமொன்றில் தங்கியிருந்தவாறு இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் தவறான தகவல்களை வழங்கியவர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் வாணிகுமார் என்ற பெயரில் இனங்காட்டப்பட்டிருந்த தமிழ்வாணி ஞானகுமார் என்பவர் கடந்தவாரம் இடம்பெயர்ந்த மக்களுடன் ஒரு நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த சமயம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.
இவர் 0602244029 எனும் இலக்கத்தைக் கொண்ட தொலைபேசியை பயன்படுத்தி இந்திய ஊடகங்களுடனும் தொடர்பு கொண்டு, ஷெல் தாக்குதல்கள் யுத்த சூனியப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுவதாகவும் பங்கர்களில் இருந்து வெளியே வருவது இயலாத காரியம் என்றும், சர்வதேச அமைப்புகளுக்கு யுத்த சூனியப் பகுதிகளுக்கு வர இடமளிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார் என செய்திகள் வெளியாகின.
வாணிகுமார் என்ற பெயரில் தவறான தகவல்களை வழங்கியுள்ள இப்பெண் 2006ம் வருடம் பெப்ரவரி மாதம் இந்நாட்டு உல்லாசப் பிரயாணிகளது வீசா அனுமதிப் பத்திரத்துடன் வந்துள்ளார். பின்னர் இவர் இவ்வனுமதிப் பத்திரத்தை 8 மாதங்களுக்கு அதிகரித்துக் கொண்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினரால் புலித்தலைமை முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் இவர் இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து வவுனியா வந்து அங்கிருந்து லண்டனில் உள்ள இவரது சகோதரியான சுபா மோகன்தாஸ் என்பவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னை நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிரான தகவல்களை வழங்கியுள்ள இவரை விடுவித்துக் கொள்வதற்கு ரி.ஆர்.ஓவின் லண்டன் முக்கியஸ்தரான அர்ஜூன் எதிரிவீரசிங்கமும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்றும் தென்பகுதி ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதே நேரம் இப்பெண்ணை விடுவித்துக் கொள்வதற்காக லண்டன் பீ.பீ.ஸி. சேவையும் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தது.
இதே நேரம் வவுனியா அரச அதிபர் சாள்ஸ் நலன்புரி நிலையத்திற்கு சென்று இப்பெண்ணை சந்தித்து, கலந்துரையாடியதாகவும் தெரிவித்திருந்தார்.
இப்பெண் தொடர்பில் கடந்தவார தென்னிலங்கைப் பத்திரிகைகள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. இப்பெண்ணை புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றது யார்? மே மாதம் 19ம் திகதி இவர் லண்டன் சகோதரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள உதவி செய்தவர் யார்?
இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்னணியில் வவுனியாவில் இயங்கி வருகின்ற சர்வதேச அமைப்பொன்று இருப்பதாகவும் கடந்த வாரம் செய்திகள் கூறின.
இதே நேரம் இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காகவே லண்டன் முக்கியஸ்தர்கள் இப்பெண்ணை உடனடியாக பிரித்தானியாவிற்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இப் பெண் உயர் இடங்களில் இருந்து உதவிகளை நாடுவதாகவும் மீள இவர் லண்டன் சென்று அங்கிருந்து புலிகளின் குரலை முன்னெடுக்க விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது, இவரது சகோதரி பிரித்தானிய கார்டியன் பத்திரிகையில் இப்பெண்ணை உடனடியாக விடுவித்துத் தரும்படி கோரியிருந்தார்.
தமிழ்வாணி புலிகளின் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் புகைப்படமொன்றை மே மாதம் 12ம் திகதி நோர்வேயில் செயற்பட்டு வரும் ஜி.ரி.வி எனும் புலிகளின் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
இவர் மே மாதம் 13ம் திகதி புலிகளின் செய்மதி தொலைபேசியை உபயோகித்து பிரித்தானிய கார்டியன் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டுள்ளார். தான் பணியாற்றி வந்த மருத்துவமனை மீது ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 47பேர் இறந்து விட்டதாகவும் இப்பகுதி அபாயமாகக் காட்சியளிப்பதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் பிரித்தானிய வெளிநாட்டலுவலகமும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகமும் இப்பெண்ணை விடுவிப்பதற்கு பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தன.
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பிய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மிலிபேண்ட் தமிழ்வாணியை வைத்து பொய் சாட்சிகளைப் பெற முயற்சித்திருப்பார் என்றும் கடந்த வார செய்திகள் வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இவரை நாடு கடத்த வேண்டுமா? எனவும் தென்பகுதி ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.
புலிகளின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் வன்னியில் இளைஞர், யுவதிகளின் கழுத்துக்களில் சயனைட் குப்பிகளை அணிவிக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ படச்சுருள்கள் சிலவற்றைப் பாதுகாப்புத் தரப்பினர் கண்டெடுத்துள்ளனர் என்ற செய்தியும் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.
500,000 ஸ்ரேலிங் பவுன் பெறுமதியான வீட்டில் வசித்து வரும் அடேல் பாலசிங்கம் தொடர்பில் வெளிவந்திருந்த தகவல்களைப் பார்க்கின்ற போது புலிகளுக்கு நிதி திரட்டு முகமாக சுவிட்ஸர்லாந்தில் நடத்தப்பட்ட வைபவங்களில் அவர் கலந்து கொண்டிருந்தார் என்றும் தெரியவந்திருந்தது.
இதே நேரம் புலிகளுக்கு நெருக்கமான இரு பெண்கள் கடந்த ஜூன் 4ம் திகதி நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.
பிரித்தானியாவில் வசித்து வரும் ஜனணி ஜனநாயகம் மற்றும் ஜேர்மனில் வசித்து வரும் பாபரா ஹென்னாயக்க லொக்பியர் ஆகியோரே இவர்களாவர்.
பாபராவின் கணவர் முன்னாள் கிளர்ச்சியாளராவார். இவர் இப்போது லங்கா டயஸ்போரா என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளார். லொக்பியர் குழுவானது கடந்த சில வருடங்களாக ஜேர்மனியில் இருந்தவாறே இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த போதிலும் அவை எல்லாம் வெற்றியளிக்கவில்லை. ஜனனி என்பவருக்கு குர்தி பீ.கே.கே. பயங்கரவாதிகளின் உதவிகளும் கிடைத்துள்ளன என்றெல்லாம் தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் இலங்கையில் செயற்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் அனைத்து தகவல்களும் கடந்த வாரம் படிப்படியாக வெளிவந்த வண்ணம் இருந்தன. கொழும்பிலிருந்து அனுராதபுரம் வரையிலும் அதிலிருந்து பதுளை வரையிலும் இந்த நிறுவனங்கள் செயற்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறான அமைப்புக்கள் பல்வேறு பெயர்களில் உலாவந்துள்ளன. இதிலொரு பெயர் துணை அதிகாரிகளின் சமூகம் என்பதாகும். இவ்வாறு பொய்யானத் தோற்றங்களைக் கொண்டு இந்த நிறுவனங்கள் செயற்பட்டுள்ளன.
இவர்களது செயற்பாடுகளும் மிகவும் பலமிக்கதாகவே இருந்துள்ளன. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் எனும் நிறுவனம் 2008ம் வருடம் ஜூலை மாதம் சமாதான மக்கள் விருப்பு என்ற பெயரில் பொய்யானதொரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதில் புலிகளை பலவீனமடையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நூற்றுக்கு முப்பது வீதமான மக்களிடம் மாத்திரமே உண்டென சிங்கள மக்கள் கூறுவதாக குறிப்பிட்டிருந்தது.
புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தரான கிட்டு இறப்பதற்கு முன்பதாக, எங்களது கழுத்தில் சயனைட் குப்பி இருக்கும் வரையில் உலகின் எந்தவொரு நீரோட்டத்திற்கும் நாம் அஞ்சமாட்டோம் எனக் கூறியிருந்தார்.
எனினும் கிழக்கு மாகாண புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த கரிகாலன், முன்னாள் புலிகளின் பேச்சாளர் யோகி, பிரபாகரனின் ஆலோசகர் பாலகுமார், பரிஸ் புலிகளின் முகவரும், ரி.ஆர்.ஓ. தலைவருமான லோரன்ஸ் திலகர், புலிகளின் துணை அரசியல்துறைத் தலைவர் தங்கன், யாழ் அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி, திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன், புலிகளின் நீதிமன்ற பிரிவின் பொறுப்பாளர் பாபா, நிர்வாகப் பொறுப்பாளர் பூவண்ணன் மற்றும் மகளிர் பிரிவுத் தலைவி சிவந்தி போன்றோர் சயனைட் அருந்தவில்லை.
புலிகளின் உத்தியோகபூர்வ கவிஞர் என்று கூறப்பட்டிருந்த புதுவை இரத்தினத்துரையாரும் நலன்புரி முகாமொன்றில் இருப்பதாகவே கேள்வி.
சர்வதேச ரீதியில் பார்க்கும் போது புலிகளுக்கு ஆதரவான வலைப்பின்னல்கள் குறிப்பாக பிரித்தானிய, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளில் பின்னடைந்து விட்டிருப்பதாகவே தகவல்கள் கூறின.
பிரபாகரனுக்கு நடந்தது என்ன என்பது பற்றி இந்த சர்வதேச வலைப்பின்னல்கள் இன்னும் அறியாதிருப்பதாகவே படுகிறது.
தாங்கள் ஒரு கெரில்லா இயக்கம் என்பதை மறந்து இலங்கை அரச படைக்கு சமமான படையினர் என நினைத்து செயற்பட்டதால்தான் புலிகள் இயக்கம் தோல்வி கண்டது என குர்தி பீ.கே.கே அமைப்பின் பேச்சாளரான முடே கரய்லான் கூறியிருந்தார். பீ.கே.கே. அமைப்பு போரிடுவதைப் போல் அல்லாமல் போரிட்டதால்தான் புலிகள் தோல்வி கண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் குர்தி இராணுவத்தினர் குர்தி பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு இலங்கை இராணுவம் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றக் கூடும் என துரோகு அங்கில் எனும் குர்தி ஊடகவியலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
பீ.கே.கே. பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த புலிகளை அழித்தமையையிட்டு குர்தி ஜனாதிபதி அப்துல்லா கலா இலங்கை அரசுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே ‘கெப்டன் அலி’ எனும் கப்பல் காலநிலை சீரற்றநிலையில் சுவஸ் கால்வாய் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இக்கப்பலில் 800 டொன்னுக்கும் அதிகமான பொருட்கள் இருந்துள்ளன. ஆரம்பத்தில் வணங்காமண் எனக் கூறப்பட்ட இக்கப்பல், பின்னர் கெப்டன் அலி என பெயர் மாற்றஞ் செய்யப்பட்டிருந்தது. சிரியாவிற்கு சொந்தமான இக்கப்பல் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணி சுமாருக்கு கொழும்பிலிருந்து 160 மைல் கடல் தூரத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இக்கப்பல் அயர்லாந்து கொடியுடன் வந்திருந்தது.
கடந்த மே மாதம் 7ம் திகதி பிரான்ஸின் சொஸ்ஸர் டேர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள இக்கப்பல் பெரிஸில் பெலேவிலே வீதி இல 52 இல் செயற்பட்டு வரும் புலிகளின் ஐரோப்பிய வலைப்பின்னலால் அனுப்பப்ட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் பணியாற்றிய முன்னாள் ஐஸ்லாந்து யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர் கிறஸ்ஜன் குவோ முண்டசன் இக்கப்பலில் இருந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆக, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலும் இவ்வாறான புலிகளின் ஆதரவாளர்கள் இருந்ததற்கான சாட்சிகள் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தென்பகுதி ஊடகங்கள் எடுத்துக் கூறியிருந்தன.
- டி.எம். பாருக் அசீஸ் (தினமுரசு)
0 விமர்சனங்கள்:
Post a Comment