மக்கள் மீது தாக்குதல் நடத்தியது யார்? விடுதலைப் புலிகளா? படையினரா?
எனது கடந்த இடுகையான 'பா.நடேசனின் சிங்களப் பெண்மணியுடனான காதல் கதை' என்ற இடுகைக்கு ஓர் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர் வந்து என்னை முட்டாள் என திட்டி ஓர் காணொளிக்கான முகவரியைத் தந்து விட்டு போயிருந்தார்.
நான் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எழுதியதால் நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன் என நினைத்துக் கொண்டு விடுதலைப் புலிகள் தமது பகுதியிருந்து தப்பியோட முயன்ற இளைஞன் ஒருவரின் கால்களை துண்டாக்கியதாக அந்த காணொளியில் காட்டப்பட்டது.
இன்னொரு பெயரில்லாத நண்பர் வந்து முதல் பெயரில்லா நண்பர் விடுதலைப் புலிகளை ஆதரித்து கருத்து தெரிவித்ததாக நினைத்துக் கொண்டு அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இன்னொரு பெயரில்லா நண்பர் வந்து தாக்குதல்களை படையினரே நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
ஆகவே அதைப் பற்றி் ஒரு பதிவு இட விரும்பினேன்.
நான் அரசாங்கத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் (அல்லது அவர்களின் ஆதரவாளர்களிடம்) கேட்க விரும்பும் கேள்விகளை இங்கே தருகிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்.
அரசாங்கத்திடம்...
1) நீங்கள் குறிப்பிடும் மீட்பு நடவடிக்கையில் மரணமடைந்த பொதுமக்களின் உண்மையான எண்ணிக்கை என்ன?
2) புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒன்றரை இலட்சம் மக்களே இருப்பதாக ஆதாரம் எதுவுமின்றி தான்றோன்றித் தனமாக தெரிவித்தது ஏன்?
3) உங்களின் தாக்குதல்கள் மக்களை பாதித்தன என நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் நீங்கள் வேண்டுமென்று தாக்கவில்லை எனக் கூறுகிறீர்கள்.
ஆனால் ஒரு நாட்டின் அரசாங்கம் என்ற வகையில் மக்களை பாதிக்காமல் தாக்குதல் நடத்துவது முக்கியமல்லவா?
(We never intensively attack civilians)
4) இறுதிக்கட்ட மீட்பு நடவடிக்கையில் 3-5 ஆயிரம் வரையான மக்கள் இறந்ததாக ஏற்றுக் கொள்ளும் உங்கள் அறிக்கைகளை இலங்கை அரச ஊடகங்களில் பார்க்க முடியவில்லையே?
5) மக்களின் குடியிருப்புக்களுக்கு நடுவிலிருந்து, வைத்தியசாலைகளுக்கு அருகிலிருந்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியமையாலேயே அந்தப் பிரதேசங்களை நீங்கள் தாக்கியதாக காணொளி ஆதாரங்களை வெளியிட்டாலும் நான் கேட்க விரும்புவது இது தான்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்கிறீர்கள். பயங்கரவாதிகள் இப்படியான செயல்களை தானே செய்வார்கள். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்பாக செயற்பட மறந்தமை ஏன்?
6) எவ்வளவு காலத்திற்கு பாதுகாப்பு காரணங்களை காட்டி நலன்புரி சிராமங்களுக்கு உதவிப் பணியாளர்களின் சுதந்திரமான பிரவேசத்திற்கு தடை விதிப்பீர்கள்?
7) ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் வெற்றி பெற்றதை இராஜதந்திர வெற்றி எனக் கூறிக் கொண்டாலும் அந்தப் பிரேரணை ஐ.நா சபையில் விசேட கூட்டத்தில் இடம்பெற்றமை உங்களுக்கு கிடைத்த இராஜதந்திர ரீதியிலான தோல்வி தானே?
8) நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் பலருக்கு மூளைக்குள் கிருமித் தொற்று ஏற்பட்டு இறப்புகள் ஏற்பட்டு வருகின்றனே. (வவுனியா வைத்தியசாலை தாதி மூலம் பெற்ற தகவல்)
இதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
விடுதலைப் புலிகளிடம்...
1) மக்களை கேடயங்களாக பயன்படுத்தியமை ஏன்?
(செய்மதிப் படங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது)
2) வெளியேறிய மக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏன்?
(இல்லை எனக் கூற முடியாது. எனது நண்பனொருவனின் தந்தை காயமடைந்தார். இப்போது வவுனியாவில் உள்ளார்.)
3) கடைசி நேரத்தில் உங்கள் தளபதிகளை காப்பாற்றுவதற்காக ஆயுதங்களை கீழே போட தயார் எனக் கூறிய நீங்கள் அதை சில மாதங்களுக்கு முன்னர் செய்திருந்தார் உங்கள் தளபதிகளையும் அப்பாவி மக்களையும் காப்பாற்றியிருக்கலாமே?
(நீங்கள் தோற்கவில்லை, தந்திரோபாய ரீதியிலான பின்னகர்வே என கொழும்பு 'அரசியல் விமர்சகர்கள்' கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொன்னாலும் நீங்கள் தோற்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே?)
4) மக்களுக்காக போராடுகிறீர்கள் என்றால் ஏன் அந்த மக்கள் (கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்திற்கு 50 ஆயிரம் மக்கள் வெளியேறினார்கள்) உங்களோடு சேர்நது கடைசி நேரத்தில் போராடவில்லை? அவர்கள் எல்லோரும் உங்களால் (கட்டாயப்) பயிற்சி வழங்கப்பட்டவர்கள் தானே? நீங்கள் விடடுச் சென்ற ஆயுதங்களைப் பார்க்கும் போது கடைசி நேரத்தில் மனிதவலுவின்றி இருந்தீர்கள் என்பது புலனாகிறது.
5) சூசையின் மனைவிக்கு எவ்வாறு 2.5 கிலோகிராம் தங்கமும் 6 இலட்சம் பணமும் கிடைத்தது?
தமிழ்ச் செல்வனின் பிள்ளைகள் சோறு கறி உண்ணத் தெரியாமல் fast food எனப்படும் உணவுகளை உண்பது எங்கேயோ இடிக்கிறதே?
உங்கள் பிரதேசப் பொறுப்பாளர் ஒருவரின் பிள்ளைகள் வவுனியாவில் குளிர் நீர், குளிர் அப்பிள்கள் போன்றவற்றை மட்டும் உண்கிறார்கள். கேட்டால் தாங்கள் வன்னியில் அப்படித் தான் இருந்தோம் என்கிறார்கள். (வீடு ஒன்றில் தங்கியிருக்கிறார்கள்.)
6) நீங்கள் தோற்பதை கடைசி நேரம் வரை ஏற்றுக் கொள்ளாதது ஏன்?
கிழக்கை விட்டுவிட்டு தந்திரோபாய பின்னகர்வு என்றீர்கள். ஆனையிறவு, முல்லைத்தீவு இப்படி எல்லாவற்றுக்கும் இதையே கூறினீர்கள். கடைசியில் கிளிநொச்சிக்குள் படையினருக்குள் பொறிக்கிடங்கு என்றீர்கள். நீங்கள் சொல்கின்ற உங்கள் மக்களை இப்படி நம்ப வைத்து ஏமாற்றியது ஏன்?
http://tamilgopi.blogspot.com/2009/06/blog-post_07.html
0 விமர்சனங்கள்:
Post a Comment