அதிகாரப்பகிர்வுடனான தீர்வைக் காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்: கூட்டமைப்பு
இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகாண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டிலிருக்கும் பயங்கரவாதத்தை முறியடித்த பின்னரே, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியிலான தீர்வு முன்வைக்கப்படுமென இலங்கை அரசாங்கம் கூறியிருந்தமையைச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதற்கான காலநேரம் தற்போது ஏற்பட்டிருப்பதாவும் கூறினார்.
எனவே, இணைந்த வடக்கு-கிழக்கில் அதிகாரங்களைப் பகிரப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகுமெனவும், இவ்வாறானதொரு தீர்வினைக் காண்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராகவிருப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். தீர்வொன்று முன்வைக்கப்படவேண்டிய சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளை மாத்திரம் பேசிக் காலத்தைக் கடத்தக்கூடாதெனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.
அதேநேரம், தெற்கில் இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தத்தைத் தொடர்ந்து, தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை முன்வைத்தால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தாவும் அண்மையில் இவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன், தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் கூட்டமைப்பினர் உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்படப்போவதில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் கூட்டணியான ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறியுள்ளது.
அதேநேரம், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் சுயநல அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் ஏற்பட்டிருப்பதாக சமூகசேவைகள் மற்றும் சமூகநலன்புரித்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பி. பொதுச் செயலாளருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கைவிடுத்திருந்தார்.
தமிழ் மக்களுக்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் அரசாங்கப் படைகளால் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமக்குள் முரண்பட்டுக்கொள்ளாமல் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொண்டு, தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அவசியம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment