தேர்தல்களில் போட்டியிட கூட்டமைப்புத் தீர்மானம்
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமென அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் கஷ்டங்களை அனுபவித்துவருகின்ற நிலையில், தற்போது இந்தத் தேர்தலுக்கு அவசியமில்லையெனத் தாம் கருதுவதுடன், இந்தத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தாம் கோரவிருப்பதாகவும் அவர் கூறினார். எவ்வாறிருப்பினும், தேர்தலுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தாம் ஆளாகியிருப்பதுடன், எனவே, வேட்புமனுத் தாக்கல் செய்ய தாம் தயாராகவிருப்பதாகவும் கூறிய மாவை சேனாதிராஜா, இந்த நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து தாம் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்துப் பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மோதல்களால், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் உறவினர்கள் குறித்து எதுவித தகவலும் தெரியாத நிலையில் யாழ் மாநகரசபை பிரதேசத்திலுள்ள மக்களில் பலர் கவலையடைந்திருப்பதாகக் கூறிய மாவை சேனாதிராஜா, இந்த நிலையில், இவ்வாறானதொரு தேர்தலை நடத்தவேண்டிய அவசியமில்லையென தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின்போது தாம் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான முயற்சியில் கட்சிகள் தீவிரமாகவிருப்பதுடன், இந்தத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தமிழ்க் கட்சிகள் போட்டியிடவிருப்பதால், பலமுனைப் போட்டி நிலவுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய 3 கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளே ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடவிருப்பதுடன், இந்தக் கட்சிகள வவுனியாவில் புளொட் அமைப்பின் சின்னமான நங்கூரத்திலும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சின்னமாக மெழுகுதிரியிலும் போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தமிழர் விடுதலைக் கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவிருக்கிறது.
இது இவ்வாறிருக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஈ.பி.டி.பிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment