500 மில்லியன் டொலர்களுக்காக பத்மநாதன் - அறிவழகன் மோதல்!
பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னர் மிகவும் விரக்தி நிலை அடைந்துள்ள கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது தமது இரண்டாம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கடந்தவார தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதாவது இடம்பெயர்ந்த நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்ற நலன்புரி நிலையங்களில் இருந்து 11 வயதுக்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட சுமார் 200 இளைஞர்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்படுகின்றனர் என ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்கள் சர்வதேச சமூகத்தினருக்குக் கூறிவருகின்றன. இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒரு பெண் செயற்பாட்டாளர் கனடா, டொரொன்டோ நகரின் ரியல் நிவ்ஸ் நெட்வர்க் எனும் செய்தி சேவைக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கடற்புலிகளின் தலைவர் சூசையின் குடும்பத்தவர்களும் சிரே~;ட புலிகள் இயக்க உறுப்பினர்களது குடும்பத்தவர்களும் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தேடிப் பார்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மெணிக்பாம் எனும் இடம்பெயர்ந்தோர் தங்கும் நலன்புரி நிலையத்திலிருந்து பல இளைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறி இருந்தார்.
இலங்கையில் காணாமற் போகும் முறைமை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ~hமினி பீரிஸ் என்பவர் மேற்படி பேட்டியை எடுத்திருந்தார். மேற்படி நபர் கனடா ஊடகத்தில் அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்து இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் பீ.பீ.சி. சேவையிலும், நலன்புரி நிலையங்களில் இருநது காணாமற் போகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஒருவர் கூறியிருந்தார். இவர் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகளில் ஒருவர் என கடந்தவார ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்ற நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களது விபரப் பட்டியலை அரசாங்கம் தனக்கு வழங்கவில்லை என்றும் மேற்படி அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டு நிதியைப் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் இப்பெண், மனித உரிமைகள் விற்பனை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்போது இடம்பெயர்ந்த மக்களை விற்பனை செய்வதற்கு முயற்சித்து வருகின்றார் என்றும் மேற்படி நலன்புரி நிலையங்களுக்குள் செல்ல சுயாதீனமான கண்காணிப்பாளர்களுக்கு இடமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். என்றும் கடந்தவார செய்திகள் கூறின.
இதே நேரம் குரூப் ஒப் கன்சர்ன் டெமில்ஸ் ஒப் ஸ்ரீ லங்கா என்ற பெயரில் திடீரென உருவாகியுள்ள ஓர் அமைப்பு, நலன்புரி நிலையங்களின் நிர்வாகத்தை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்து சிவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த அமைப்பில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களும் புலிகளின் அனுதாபிகள் சிலரும் இருப்பதாக தென்பகுதி ஊடகங்கள் கூறியிருந்தன.
இந்த நிலையில் புலிகள் இயக்கத்தைப் பின்பற்றி தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவைச் சந்தித்து இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை வழங்கினர் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதே நேரம இவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா மற்றும் சண்முகராஜா ஆகிய மூன்று மருத்துவர்களையும் விடுவிக்க உதவும்படியும் கேட்டிருந்தனர்.
இந்த மூன்று மருத்துவர்களும் புலிகளது பிடியில் இருந்து இறுதியாக வெளியேறி வந்தவர்கள். அரசுக்கு எதிரான தகவல்களை வழங்கினார்கள் என்பதுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
இவர்களது விடுதலை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~விற்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
புலிகளிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக இராணுவ முகாம்களை உருவாக்குவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் தற்போதுள்ள இராணுவ முகாம்கள் அனைத்தையும் அகற்றுமாறு இலங்கை அரசுக்கு கூறும்படியும் மேற்படி கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.
இவ்வாறானதொரு நிலையில் நோர்வே பீபள்ஸ் எயிட் தொண்டர் அமைப்பின் நிவாரணப் பணியாளர் எனத் தன்னை இனங்காட்டிக் கொண்ட புகைப்படக் கலைஞரான பென்ஜமின் டிக்ஸி என்ற நபர் உல்லாசப் பிரயாணிகளுக்குரிய வீசா அனுமதிப் பத்திரத்துடன் இலங்கைக்கு வந்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது.
பிரித்தானிய நாட்டவரான இவர் நோர்வே பீபள்ஸ் எயிட் அமைப்பில் கல்விசார் அதிகாரியாக பணியாற்றி வந்தாலும் இவரது செயற்பாடுகள் அனைத்துமே புலிகள் இயக்கத்திற்கு உதவுவதாகவே அமைந்திருந்தன.
சொலிடார் அமைப்பில் பணியாற்றிய ரிம் மார்ட்டினின் நண்பரான டிக்ஸி மே மாதம் முதல் வாரத்தில் இலங்கை வந்து ஐக்கிய நாடுகள் அமைப்பிற்குச் சொந்தமான வாகனமொன்றைப் பயன்படுத்தி தனது அலுவல்களைப் பார்த்துள்ளார் எனத் தெரிய வந்திருந்தது.
இவ்வாறான சம்பவங்கள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது புலிகள் இயக்கத்திற்கு 30 வாகனங்களைக் கொடுத்துள்ள நோர்வே பீபள்ஸ் எயிட் அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் இடம்பெயர்ந்தோர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சொன்றில் ஆலோசகர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்ற செய்தியும் வெளிவந்திருந்தது.
பீபள்ஸ் எயிட் நிறுவனத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இருந்த தொடர்புகள் குறித்து செய்திகள் வெளிவந்த போதெல்லாம் அவற்றை நியாயப்படுத்தி வந்த இவ்வாறான நபர்கள் இன்று ‘எமக்காக நாம்’ நிதியத்திற்கு உதவிகளை வழங்கிவிட்டு கடந்த காலத்தை மூடி மறைக்க முயல்கின்றனர் என்ற தகவல்களும் கடந்த வாரம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
என்றாலும் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்த நோர்வே தொண்டர் அமைப்பில் பணியாற்றிய ஒருவரை இடம்பெயர்ந்தவர்களது விவகாரங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வது ஆச்சரியம் தரும் விடயமாகும்.
இந்த நிலையில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை விமர்சனம் செய்த ஊடகத்தரப்பினர் தற்போது வேறொரு நாடகத்தை அரங்கேற்றி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்~ தெரிவித்திருக்கிறார்.
“கடந்தகால ஊடகங்களின் அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால் அவர்களது நோக்கங்கள் - முறைமைகள் எவை என்பது தெளிவாகும். தூதுவராலயங்கள், சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தொண்டர் அமைப்புக்களிடமிருந்து கொடுப்பனவுகளைப் பெற்றவர்கள் மரணத்தையும், அழிவையுமே தூண்டினார்கள். இநத அரச விரோத பிரச்சாரகர்கள் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்றும் மீட்கப்பட்ட பகுதிகளை பராமரிக்க முடியாது என்றும் கூறினர். எனினும் இன்று அவர்கள் புதியதொரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்” என அவர் தெரிவித்திருந்தார்.
வடக்கின் யுத்த சூனியப் பகுதியை சூடானின் டாபூர் மாநிலத்திற்கு ஒப்பிட்டு இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகியுள்ளனர் எனக் கூறப்பட்டது. நோராட் மற்று பெனொஸ் போன்ற அமைப்புகளில் பணம் பெற்று பிழைப்பு நடத்தியவர்கள் புலிகளின் சமாதான முன்னெடுப்புக்கள் குறித்து அதிகளவில் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
கொழும்பில் இருந்து வாத்துவ பகுதியிலும் வெலிகம பகுதியிலும் சமாதான பாசறைகளை நடாத்தினர்.
இதே நேரம் ஒருசில பாதுகாப்புத்தரப்பு உயரதிகாரிகள், யுத்தம் இப்போது முடிந்து விட்டது என்ற நினைப்பில் இருந்து கொண்டு செயற்படுகின்றனர் என்றொரு தகவலும் கடந்தவாரம் வெளியாகியிருந்தது.
அண்மையில் கட்டுநாயக்காவில் நடைபெற்ற தாக்குதல் ரக விமானங்களது கண்காட்சிக்கு புலிகள் சார்பு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் இரத்மலானை விமானப்படை முகாமில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் புலிகளது முக்கியஸ்தராக இருந்த எழிலன் என்பவருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த நபர் ஒருவர் கலந்து கொண்டதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.
யுத்தநிறுத்த கால கட்டத்தின் போது எழிலனின் இணைப்பாளராக இருந்தவர் குணரத்தினம் என்பவராவார். இந்த இருவரினதும் நண்பர்தான் மேற்படி விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர் என்றும் தெரிய வந்திருந்தது.
இதனிடையே நோர்வேயில் புலிகளுடைய பல்வேறு இணையத்தளங்களை நடாத்தி வந்த சேது ரூபன் அல்லது டர்டி சேது அல்லது சேது லதா என்பவர் திடீரென்று மின்னஞ்சல்கள் சிலவற்றை பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி இருந்தார். அதாவது ஒஸ்லோ நகரில் வைத்து புலிகள் தன்னைத் தாக்கினார்கள் என்று இவர் அதன் மூலம் பிரச்சாரம் செய்திருந்தார்.
புலிகளது இணையத் தளங்களை நடாத்தி வந்த இவர் புலிகளது தலைமை பூண்டோடு அழிக்கப்பட்டதன் பின்னர் நோர்வே புலிகள் தன்னைத் தாக்கினார்கள் என தனது தாளத்தை மாற்றிப் போட ஆரம்பித்துள்ளார் எனத் தெரிய வருகிறது.
இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்திலும் இச்செய்தி வெளியாகி பின்னர் உடனடியாக அகற்றப்பட்டிருந்தது. ஆக, இச்செய்தியை இராணுவ இணையத்தளத்திற்குள் புகுத்தியவர் யார்? என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
சேதுரூபன் என்பவர் நோர்வேயில் இருந்து கொண்டு புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக சில வருடங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்த போது இலங்கை ஊடக நிறுவனம் என்ற அமைப்பை முன்னிறுத்தி முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் இவரைக் காப்பாற்ற முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
2006ம் வருடம் ஜூன் மாதம் 8ம் திகதி இடம்பெற்ற லண்டன் ரி.பீ.ஸி தமிழ் வானொலிச் சேவை நிறுவனத் தாக்குதலில் சேதுரூபன் தொடர்பு பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான பின்னணிகளைக் கொண்ட சேதுரூபன், தான் புலிகளுக்கு எதிரானவர் எனக் கூறியபடி இராணுவ யந்திரத்தினுள் நுழைய முற்படுவது கேள்விக்குறியாக உள்ளதென கடந்தவார ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதே நேரம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் முக்கியஸ்தரான பத்மநாதன் இலங்கைக்கு வெளியில் தமிழீழத்தை உருவாக்கும் நோக்கில் அமெரிக்காவிலுள்ள புலிகளின் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமாரின் தலைமையில் குழுவொன்றை அமைத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
“நாங்கள் புலிகள் இயக்கத்தை மறுசீரமைக்கின்றோம். தமிழீழ இராச்சியத்தை உரித்தாக்கிக் கொள்வதற்காக நாம் நாட்டுக்கு வெளியே அரசொன்றை உருவாக்குவோம் இதற்கு தமிழ் அமைப்புக்களின் ஆதரவு தேவை” என பத்மநாதன் கூறியிருந்தார்.
பத்மநாதனின் இந்த இரகசிய திட்டத்தை நிறைவேற்றும் முகமாகவே தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீட்கப்பட்ட பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைக்கும் நடவடிக்கையினை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை அரசிடம் கூறுமாறு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது இப்போது உறுதியாகின்றது எனவும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தன.
இதனிடையே பிரபாகரனின் புதல்வரைக் கொலை செய்த இராணுவக் குழு பற்றிய தகவல்களை வெளிநாட்டு புலனாய்வுத் துறையினர் வெளியிட்டுள்ளனர் என்ற செய்திகளும் வெளிவந்திருந்தன.
ஹமாஸ் தலைவர்களைக் கொன்றொழித்த தனது இராணுவ குழுக்கள் தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் இஸ்ரேல் இதுவரை வெளியிடவில்லை. எனினும் சார்ள்ஸ் அன்டனி எனும் பிரபாகரனின் மகனின் கொலையை மேற்கொண்ட இராணுவக் குழுவின் அனைத்துத் தகவல்களும் இப்போது வெளியிடப்பட்டுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவித்திருந்தன.
“இராணுவத்தினரின் புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள நான் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதில்லை. ஏனெனில் கொழும்பிலுள்ள ஊடகங்கள் மிக சுலபமாகவே அத்தகவல்களை எனக்கு வழங்குகின்றன” என புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார்.
அன்றும் இது நடந்தது. இன்றும் இது நடக்கிறது.
இதனிடையே தனது புலி நண்பர்களின் மரணங்களால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கடந்த 16ம் திகதி ‘சமஸ்டி முறையை ஏற்றுக்கொள்ள அரசம் புலிகளும் இணங்கினர். இலங்கையில் சமாதானம் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிக அண்மித்துக் காணப்பட்டது’ எனக் கூறியிருந்தார்.
இவர் இப்படிக் கூறியிருக்கும் நிலையில், வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி நிலையங்கள் நிலையான முகாம்களாக்கப்பட்டால் நோர்வே அதற்கு உதவிகள் வழங்காது என நோர்வே வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது.
சொல்ஹெய்ம் புலிகள் தொடர்பில் அனுதாபங் கொண்டு மேற்கண்டவாறு கூறி இருக்கும் நிலையில் நோர்வே நாட்டு நிறுவனமொன்றின் முக்கியஸ்தரான கர்டன் என்பவர், சொல்ஹெய்மின் நடைமுறை காரணமாக மிருகங்கள் அனாவசிய முறையில் வேதனையடைந்து இறப்பதாகக் கூறியிருந்தார்.
இதனிடையே புலிகள் இயக்கத்திற்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கத்தில் குமரன் பத்மநாதனால் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் உள்ள அனைவருமே கடந்த காலங்களில் புலிகளுக்கு பின்பாட்டுப் பாடியவர்களாவர்.
பேராசிரியர் எம். சேதுராஜா (பிரித்தானியா), பேராசிரியர் பிரென்சிஸ் பொயிரி (அமெரிக்கா), பேராசிரியர் பி. ராமசாமி(மலேசியா), போதகர் ஏ.ஸி. சந்திரகாந் (கனடா), பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா (சுவீடன்), மருத்துவர் முருகர் குருசிங்கம் (அவுஸ்திரேலியா), மருத்துவர் சிவனேந்திரம் சிவநாயகம் (அவுஸ்திரேலியா), ஏ.எல். வசந்தகுமார் (பிரித்தானியா), கெரன் பாக்கர் (அமெரிக்கா), என். ஜெயலிங்கம் (அமெரிக்கா), செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா), போல் விலியம்ஸ் (நெதர்லாந்து), பேராசிரியர் பீற்றர் வோல்க் (சுவீடன்) போன்றவர்கள் இக்குழுவில் அடங்குகின்றனர்.
இலங்கைக்கு வெளியில் தமிழீழத்தை உருவாக்கத் துடிக்கும் இக்குழுவின் தலைவரான விஸ்வநாதன் ருத்ரகுமாரன், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படப் போவதாகவே அறிவித்துள்ளார்.
இதை மறுத்து கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ள போதிலும் இந்த இரு தரப்பினருக்கும் இடையில் இரகசிய செயற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம், புலிகளின் பெயரால் சேகரிக்கப்பட்ட நிதியை தக்க வைத்துக் கொள்வதும் மேலதிக நிதி சேகரிப்புக்களில் ஈடுபடுவதுமாகும். இதே நேரம் சிங்கள தேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் ருத்ரகுமார் என்பவர் கூறியிருக்கிறார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே முகங்கொடுத்து நின்று வெற்றி கண்டுள்ள இலங்கை அரசு ருத்ரகுமாரன் போன்ற எலிகளின் கூக்குரலுக்கு அடிபணியுமா? என தென்பகுதி ஊடகங்கள் ஏளனஞ் செய்திருந்தன.
புலிகளின் தலைவர்களைக் காப்பாற்றிக் கொள்ள பாரிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்த கொழும்பின் முக்கிய சமாதான வியாபாரி ஒருவர் இப்போது தூதுவராலயங்களில் நடைபெறும் விருந்துபசாரங்களில் கலந்து கொண்டு வெளிநாட்டுத் தூதுவர்களைத் தூண்டி விடும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
இதனிடையே ஐரோப்பிய புலிகள் அனுதாபிகள் சிலர் இறந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உயிரூட்டுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் இருக்கின்ற புலிகளது அனுதாபிகள் புலிகளது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த பொட்டு அம்மானை மீண்டும் களத்திற்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்திருந்தன.
எனினும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
இதே நேரம் புலிகளுக்கு மருந்து வகைகளை வழங்கியிருந்த ஒரு நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் அண்மையில் கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரைக் கொலை செய்வதற்கான திட்டங்களும் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஒரு தொடர் மாடி வீட்டிலேயே தீட்டப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பில் 2007ம் வருடம் பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதே நேரம் புலிகளின் சர்வதேச வலைப் பின்னலின் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதனுக்கும் புலிகளின் சர்வதேச புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் கதிர்காமர்தம்பி அறிவழகனுக்கும் இடையில் உக்கிரமான மோதல் நிலை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
பிரபாகரன் கொல்லப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் அறிவழகன் என்பவர், பிரபாகரன் இறந்த விடயம் தொடர்பில் பத்மநாதன் ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றஞ் சாட்டியிருந்தார். பிரபாகரன் தொடர்பில் இவ்வாறான முரண்பாடான தகவல்களை வெளியிட்டமை குறித்து தனது புலனாய்வுத்துறை தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
புலிகள் இயக்க குழுவொன்றினால் பிரபாகரனைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும் அம்முயற்சிகள் தோல்வி கண்டதாகவும், புலிகளின் போராட்டம் மேலும் தொடரும் எனவும் கனடாவில் உள்ள அறிவழகன் கூறியுள்ளார்.
பத்மநாதனுக்கும் அறிவழகனுக்கும் இடையிலான இந்த மோதல் 500 மில்லியன் டொலர்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஏற்பட்டதாகும் எனத் தெரிய வந்துள்ளது.
பிரபாகரன் கைது செய்யப்பட்டதன் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டார் என்ற கூற்றை அறிவழகன் நிராகரித்திருந்தார்.
இதனிடையே பிரபாகரன் தனது கடைசி கட்டத்தில் “நீ ஒரு துரோகி” என பத்மநாதனைத் தொடர்பு கொண்டு கூறியுள்ளதாகவும் புலிகளின் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதேநேரம் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியிருந்த ரி.ஆர்.ஓ. அமைப்பின் முக்கியஸ்தரான வேலுப்பிள்ளை சிவனாதிகர் என்பவர் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி அமைப்பின் இணைப்பாளர் நிமலன் என்பவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டி.எம். பாருக் அசீஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment