சரியான கொள்கையும் ஆதரவான நேச அணியும் அரசியல் தீர்வுக்கு அவசியம்
தமிழ் மக்களின் போராட்டத்துக்குப் பல்வேறு கட்டங்களில் பல்வேறு காரணிகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அப் பாதிப்புகள் புலி - கூட்டமைப்புக் கூட்டினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் கணக்கில் எடுக்க வேண்டியவையல்ல. அந்தளவுக்குப் பின்னைய பாதிப்பு மோசமானது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போது புதிய தொனியில் பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைத் தமிழ்த் தலைவர்கள் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்தின் மூலம் பல நன்மைகளைப் பெற்றிருக்கலாம் என்றும் சில தினங்களுக்கு முன் சம்பந்தன் கூறியிருந்தார். ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் எதிர்க் கட்சியுடனும் பேசத் தயார் என்று இப்போது சிaகாந்தா சொல்கிறார். ஜே. வி. பியுடனும் பேச விரும்புகின்றார்.
கடந்த மூன்று வருட காலமாக இந்தத் தொனியில் இவர்கள் பேசவில்லை. பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பைக் கூட செய்தியாளர் மாநாடு கூட்டி நிராகரித்தவர்கள். தவறு விடுவதும் திருத்திக்கொள்வதும் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் புதியவையல்ல. தவறுகளைத் திருத்திக்கொள்ளும் போது தவறு விட்டதை ஒத்துக்கொள்ளவும் வேண்டும். அத்தவறை விட்டதற்கான காரணத்தையும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடதுசாரிப் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியல்ல என்பதால் அதனிடம் சுயவிமர்சனத்தை எதிர்பார்க்க முடியாது. எனினும் விட்ட தவறுகளைப் பகிரங்கமாக ஒத்துக்கொள்வதன் மூலமே எதிர்கால அரசியல் நடவடிக்கைக்கான நம்பகத்தன்மையைப் பெற முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறைச் சாதாரணமாகக் கருத முடியாது. இலங்கைத் தமிழரின் போராட்டத்துக்குப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்படுத்திய பாதிப்பைப் போல வேறெவரும் ஏற்படுத்தவில்லை என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. தமிழ் மக்களின் போராட்டத்துக்குப் பல்வேறு கட்டங்களில் பல்வேறு காரணிகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அப் பாதிப்புகள் புலி - கூட்டமைப்புக் கூட்டினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் கணக்கில் எடுக்க வேண்டியவையல்ல. அந்தளவுக்குப் பின்னைய பாதிப்பு மோசமானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும் கூட்டாக மேற்கொண்ட நிலைப்பாடும் செயற்பாடுகளும் தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்தள்ளிச் சென்று இன்று சூன்ய நிலைக்குத் தள்ளிவிட்டன. பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்துக்குக் காட்டிய எதிர்ப்புடன் இச்சரிவு ஆரம்பமாகியது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை பற்றிய சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் எழத் தொடங்கியதும் ஒடுங்கிப் போயிருந்த பேரினவாதம் ஓரளவுக்குத் தலைதூக்கியதும் தீர்வுத் திட்டத்துக்குத் தமிழ்த் தலைவர்கள் காட்டிய எதிர்ப்புக்குப் பிந்திய வளர்ச்சிப் போக்குகள்.
சமஷ்டித் தன்மை கொண்ட தீர்வுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது அரசியல் தீர்வு முயற்சியைப் பலவீனப்படுத்துமென்பது தனிநாட்டுக் கனவிலும் ஆயுத சக்தியிலும் மூழ்கிப் போயிருந்த புலிகளுக்கு விளங்காத போதிலும் அரசியல் அனுபவஸ்தர்கள் என்று உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு விளங்கவில்லையா அல்லது விளங்கியிருந்தும் புலிகளின் துப்பாக்கிக்குப் பயந்து செயற்பட்டார்களா என்ற கேள்விக்கு விடை தேவைப்படுகின்றது.
இந்தக் கேள்விக்கான விடை எதுவாக இருப்பினும் அது கூட்டமைப்புக்குப் பாதிப்பாகவே அமையும். தீர்வுத்திட்டத்துக்கான எதிர்ப்பு அரசியல் தீர்வு முயற்சியைப் பாதிக்கும் என்பதை விளங்கிக்கொள்ளவில்லை என்றால் அது தூரநோக்கின்மையையும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமையையும் குறிக்கும். புலிகளின் துப்பாக்கிக்குப் பயந்து செயற்பட்டார்களென்றால் அது அரசியல் துணிவின்மையைக் குறிக்கும்.
கூட்டமைப்புத் தலைவர்கள் வார்த்தைப் பிரயோகங்களால் மறைக்க முயன்றாலும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள கைதியின் நிலையிலேயே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு மோசமான பாதிப்பைத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு இவர்கள் உள்ளாகியிருக்கின்றனர். இக் ‘குற்றத்தின்’ பங்காளிகளான புலிகள் இப்போது அரங்கில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களே அரசியல் அரங்கில் நிற்கின்றனர். எனவே, மக்களுக்கு விளக்கமளிக்க இவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஜனாதிபதியுடனும் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது சரியான நிலைப்பாடு. நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொண்டு இந்த நிலைப்பாட்டை முன்வைப்பது தான் சரியானது.
தனிநாடா அல்லது ஐக்கிய இலங்கையில் தீர்வா என்பதே இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இன்று பிரதான கேள்வி. கூட்டமைப்பினர் தனிநாட்டுப் பாதையில் பயணித்தவர்கள். இன்று தனிநாட்டை நிராகரிக்கின்றார்களா என்பதையிட்டு இவர்களில் எவரும் எதுவும் கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் எல். ரீ. ரீ. ஈயினர் நாடுகடந்த அரசொன்றை அமைப்பது பற்றி அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்புத் தலைவர்கள் அந்த அறிவுப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் எங்களுடன் அவர்கள் எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்களேயொழிய அந்த முயற்சியைக் கண்டிக்கவில்லை. அது பிழையான நகர்வு எனக் கூறவில்லை.
இவற்றைப் பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டுக் கொள்கையை இன்னும் கைவிடவில்லையா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் தனிநாட்டுக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்தப் பாதிப்புகளை நினைத்துப் பார்க்கும் நிலையில் கூட இன்று தமிழ் மக்கள் இல்லை. மக்களுக்காகச் செயற்படுவதானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தேகத்துக்கு இடம்விடாமல் தனிநாட்டுக் கொள்கையை நிராகரித்து ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும். தென்னிலங்கையில் நேச சக்திகள் யார் என்பதைச் சரியாக இனங்கண்டு அவற்றுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் ஐக்கிய இலங்கையில் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் நேச அணியை இனங் காண்பதில் எப்போதும் தடுமாற்றம் இருந்து வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் பிரதான கட்சிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாகச் செயற்பட்ட காலத்திலும் இந்தத் தடுமாற்றம் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியையே இவை நேச அணியாகக் கருதிச் செயற்பட்டன.
முதலாவது பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக ஜீ. ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த தர்க்கங்களுள், இடதுசாரிகள் தலைதூக்குவதைத் தடுக்க வேண்டும் என்பது பிரதானமானது. தமிழரசுக் கட்சி பல அரசியல் போராட்டங்களை நடத்தியது. ஆனால் எந்தவொரு போராட்டமும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெறவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியை நேச அணியாகக் கருதும் பாரம்பரியம் தொடர்ந்தது. பாராளுமன்ற சபாநாயகர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சியின் டியூ குணசேகரவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் லொக்குபண்டாரவை ஆதரித்தது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி நேச அணியல்ல. இக் கட்சியின் கடந்தகால வரலாறும் இன்றைய நிலைப்பாடும் இக் கட்சி தமிழ் மக்களின் நேச அணியல்ல என்பதைப் பறைசாற்றுகின்றன.
இனப் பிரச்சினையின் தோற்றுவாயான குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களம் மட்டும் சட்டத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டது ஐக்கிய தேசியக் கட்சி. பண்டா - செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான அலையை ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது. பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற முடியாமற் போனதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம்.
இன்றும் ஐக்கிய தேசியக் கட்சி இனப் பிரச்சினையின் தீர்வுக்குச் சாதகமாகச் செயற்படவில்லை. பிரதான எதிர்க் கட்சி என்ற வகையில் அரசியல் தீர்வுக்கான அதன் திட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பகிரங்கமாக வெளிப்படுத்தாவிட்டாலும் உரிய அமைப்புகளுக்காவது தெரியப்படுத்தியிருக்க வேண்டும். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அரசியல் தீர்வுக்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கென அமைக்கப்பட்டது. இக் குழுவின் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துவிட்டது. தீர்வுக்கான ஆலோசனைகளைக் கூட குழுவுக்கு அனுப்பவில்லை.
இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்காமல் அரசாங்கம் காலங்கடத்துகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் அடிக்கடி கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே. தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்குக் கைகொடுக்காமல் அம்முயற்சியைக் குழப்பும் வகையில் செயற்பட்டுக்கொண்டு மேற்படி குற்றச்சாட்டை முன்வைப்பது அப்பட்டமான கயமைத்தனம்.
அரசியல் தீர்வுக்கான கட்சியின் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் செய்தி அண்மையில் பத்திரிகைகளில் வெளியாகியது. இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆலேசானைகளைத் தெரிவிக்கவில்லை என்பதே இதன் அர்த்தம். இன்னொரு விதமாகக் கூறுவதானால் தீர்வுக்கான எந்த ஆலோசனையும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இல்லை. தீர்வுக்கான கொள்கை இல்லாமல் தீர்வு பற்றிப் பேசுவது போன்ற ஏமாற்று வேறெதுவுமில்லை.
ஒஸ்லோவில் சமஷ்டித் தீர்வுக்கு இணக்கம் தெரிவித்தது பற்றி ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் இடைக்கிடை பேசுகின்றார்கள். இனப் பிரச்சினையின் தீர்விலும் பார்க்க வேறொரு நோக்கத்துக்காகவே அப்படியான அறிக்கையொன்றை வெளியிட வேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்தது.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஒரு வருடம் பூர்த்தியானதும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தைக் கலைக்கப் போகின்றார் என்ற வதந்தி அடிபட்ட காலத்திலேயே குறிப்பிட்ட ஒஸ்லோ பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தால், சமஷ்டித் தீர்வை நடைமுறைப்படுத்த முன்வந்ததற்காகவே கலைத்தார் என்று பிரசாரம் செய்யும் நோக்கத்துடனேயே சமஷ்டி பற்றிய உடன்பாட்டை ஒஸ்லோவில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்தியது. ஒஸ்லோவில் தீர்மானம் நிறைவேற்றியதோடு எல்லாம் முடிந்துவிட்டது. அதன் பின் அரசாங்கம் சமஷ்டித் தீர்வுக்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
சில மாதங்களின் பின், ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டிக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது என்று ரணில் பகிரங்கமாக அறிவித்தார். சமஷ்டிக்கு எதிராக ஜே. வி. பி. செய்த பிரசாரத்துடன் ஒத்துப் போவதற்காகவே ரணில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசாங்கத்துக்கு எதிராக ஜே. வி. பியுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ரணில் அந்த நாட்களில் ஈடுபட்டிருந்தார்.
சரியான கொள்கையைக் கொண்டிருப்பது மாத்திரமன்றி, சரியான நேச அணியையும் இனங்கண்டு செயற்பட வேண்டியது இனப்பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமானது என்பதைக் கூட்டமைப்புத் தலைவர்கள் இனியாவது புரிந்துகொள்வார்களா?
ஜீவகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment