அம்பாறையில் பாலியல் வல்லுறவுக்குப் பின் சிறுமி படுகொலை : சந்தேக நபர் மக்களால் அடித்துக் கொலை!
மத்திய முகாம் மதுனுஸ்காவின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.மத்திய முகாம் 4ம் கொலனியைச் சேர்ந்த 12 வயது மாணவியான மோகன் மதுனுஸ்காவின் ஊரைச்சேர்ந்த மேற்படி சந்தேக நபரான ‘பாவா’ என அழைக்கப்படும் கனகரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (வயது 29) என்பவரே இவ் விதம் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டவராவார். அவரது மரண விசாரணையும் நேற்று மத்திய முகாம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த புதனன்று மாலை 3ம் கொலனிக்கு முட்டை விற்கச் சென்ற மதுனுஸ்கா குரூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அருவருப்பான முறையில் கொலைசெய்யப்பட்டமை தெரிந்ததே.அதனையடுத்து பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் நடத்தினர். வியாழனன்று காலை அங்கு பொலிஸாரால் கொண்டு வரப்பட்ட மோப்ப நாய் சம்பந்தப்பட்ட கொலையாளியின் அக்காவின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்து கொலையுண்ட மதுனுஸ்காவின் உடையையும், கொலையாளியின் அடையாள அட்டையையும் சாறனையும் வாயினால் கவ்வி வெளியே கொணர்ந்தது. இதனையடுத்து ஊரார் மத்தியில் கொலையாளி அவர் தான் என்பது ஊர்ஜிதமாயிற்று. இதேவேளை அவர் அங்கிருந்து தலைமறைவாகியிருந்தமையும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இந்நிலையில், அன்று பிற்பகல் அவர் வயலுக்குள் பெண் வேஷத்துடன் கதிர் பொறுக்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து 3ம் 4ம் கொலனியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான தமிழ், சிங்கள மக்கள் அங்கு சென்று அவரை சரமாரியாக நையப்புடைத்தனர்.
அவ்வேளை பொலிஸாரும், படையினரும் விரைந்து அவரை கொண்டு செல்ல நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனிடையே மதுனுஸ்காவின் உடல் வியாழனன்று மாலை வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு நேற்றுவரை ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். தாய், தந்தை, உறவினர்கள் கதறியழுதமை நெஞ்சை நெகிழவைத்தது.
நேற்று வெள்ளிக்கிழமை அவர் கற்ற 4ம் கிராமம் வாணி வித்தியாலயம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வித்தியாலய அதிபர் ச. சரவணமுத்து, மதுனுஸ் காவின் வகுப்பாசிரியை திருமதி ச. மதிவதனி மற்றும் ஆசிரி யர்கள், மாணவர்கள் அனைவரும் மலர்மாலையுடன் சென்று அஞ்சலி செலுத்திய போது, தாயார் அழுத காட்சி சகலரையும் தேம்பி அழவைத்தது.
பொலிஸ் அதிரடிப் படையினர் அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்கினர். நீதிவான் விசாரணையும் நேற்று இடம்பெற்றது. மக்கள் சாரிசாரியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment